சாம்பியன்ஷிப் வென்ற இந்தியா: வண்ணமயமாக நிறைவடைந்த ஆசிய தடகளப் போட்டிகள்!

இந்தியாவில் நடந்துவரும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர், வீராங்கனைகளின் அபாரமான விளையாட்டால்,  முதல் முறையாகப் பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்தது.


ஒடிசா மாநிலத்தில், 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், 45 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து
46 வீராங்கனைகள், 49 வீரர்கள் என மொத்தம் 95 பேர் பங்கேற்றனர்.
நான்கு நாள்கள் நடந்த இந்தப் போட்டித் தொடரில், தொடக்கம் முதலே இந்தியா அபாரமாகச் செயல்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தொடரில், தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் சீனாவை இரண்டாம் இடத்துக்குத் தள்ளி, ஆசிய தடகளப் போட்டியின் வரலாற்றில் இடம் பிடித்தது. இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி மற்றும் 12  வெண்கலம் என மொத்தம்
29  பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது. இதுவே, இந்தியாவின் சிறந்த பதக்கப்பட்டியல் ஆகும். இதற்கு முன்னதாக, இந்தியா 1985-ல் ஜகர்தாவில் நடைபெற்ற போட்டியில் 22 பதக்கங்கள் வென்றதே இந்தியாவின் சிறந்த பட்டியலாக இருந்தது. 
முதல் நாளிலிருந்தே ஆதிக்கம்செலுத்திய இந்திய அணி, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி சாம்பியன்ஷிப்பைக் கைப்பற்றியது. நேற்று நடந்த 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், தமிழக வீரர் லக்ஷ்மணன் மீண்டும் தங்கம் வென்று சாதனை படைத்தார். இவர், ஏற்கெனவே நடந்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்தப் பிரிவுகளில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார். கடந்த முறை தவறவிட்ட தங்கப் பதக்கங்களை இந்த முறை கைப்பற்றி பெருமைசேர்த்தார். 
ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 85.23 மீ எறிந்து, ஆசிய சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை படைத்தார். அதேபோல, 4*400 தொடர் ஓட்டப்பந்தயத்தில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்று அசத்தியது. மொத்தத்தில் இந்திய வீரர்கள்
13 பதக்கங்களும், வீராங்கனைகள் 16  பதக்கங்களும் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். இந்தியாவுக்கான வெற்றிக்கோப்பையை ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் வழங்கினார்.

தங்கம் உட்பட 20 பதக்கங்களுடன் சீனா இரண்டாம் இடம் பிடித்தது. நேற்று இரவு, வண்ணமயமான கலைநிகழ்ச்சிகள் மற்றும் வாணவேடிக்கையுடன் போட்டிகள் நிறைவடைந்தன. சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது. 2019-ம் ஆண்டு ஆசியப் போட்டிகள், கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!