வெளியிடப்பட்ட நேரம்: 13:57 (10/07/2017)

கடைசி தொடர்பு:16:08 (10/07/2017)

20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்து அதிரவைத்த ஆஃப்கன் வீரர்!

20 ஓவர் போட்டியில் இரட்டை சதம் அடித்துள்ளார் ஆஃப்கானிஸ்தான் அணியைச் சேர்ந்த சஃபிக்குல்லா சஃபாக்.

Afghanisthan batsman Shafiqullah Shafaq scored double century in T-20 match

கடந்த 2010-ம் ஆண்டு, தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டியில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் 200 ரன்கள் குவித்தார். ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதமடிப்பது சாத்தியமே இல்லை என்று நினைத்திருந்த வேளையில், அதைத் தொடங்கி வைத்தார் சச்சின். இதற்குப் பிறகு சேவாக், ரோஹித் ஷர்மா, கிறிஸ் கெயில், மார்டின் கப்தில் ஆகியோர் ஒருநாள் போட்டியில் இரட்டை சதமடித்துவிட்டனர். ஆனால், சர்வதேச அளவில் டி-20 போட்டிகளில் இதுவரை யாரும் இரட்டை சதமடிக்கவில்லை. 

இதனிடையே உள்ளூர் போட்டி ஒன்றில் ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சஃபிக்குல்லா சஃபாக் இரட்டை சதம் விளாசியுள்ளார். ஆஃப்கானிஸ்தானில் நடந்த உள்ளூர் போட்டி ஒன்றில் விளையாடிய இவர், 71 பந்துகளில் 214 ரன்கள் குவித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் 16 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் அவர் விளையாடிய அணி 351 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய எதிரணி 107 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரட்டை சதம் குவித்ததன் மூலம் தற்போது சஃபாக் பிரபலமடைந்துள்ளார்.

கடந்த ஐ.பி.எல் போட்டியின் ஏலத்தின்போது எந்த அணியும் இவரை வாங்க முன்வராதது குறிப்பிடத்தக்கது.