பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிப்பு! | Tamilnadu chief minister announced prize amounts for medal winners

வெளியிடப்பட்ட நேரம்: 15:05 (10/07/2017)

கடைசி தொடர்பு:15:25 (10/07/2017)

பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்குப் பரிசுத்தொகை அறிவிப்பு!

ஆசிய தடகளப் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு இன்று சட்டப் பேரவையில் தமிழக முதல்வர் பரிசுத் தொகையை அறிவித்தார். 


ஒடிசா மாநிலத்தில், 22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 6-ம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. ஒடிசாவின் கலிங்கா மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில், 45 நாடுகளைச் சேர்ந்த 800 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியாவிலிருந்து
46 வீராங்கனைகள், 49 வீரர்கள் என மொத்தம் 95 பேர் பங்கேற்றனர்.

இதில் இந்தியா 12 தங்கம், 5 வெள்ளி  மற்றும் 12  வெண்கலம் என மொத்தம் 29 பதக்கங்களுடன் முதல் இடம் பிடித்தது. இதில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த லக்ஷ்மணன் 5,000 மற்றும் 10,000 மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். மற்றொரு தமிழக வீரரான ஆரோக்கிய ராஜீவ் வெள்ளிப் பதக்கம் வென்றார்.

இன்று சட்டசபையில் தமிழக முதல்வர் பதக்கம் வென்ற வீரர்களுக்குப் பரிசுத் தொகையை அறிவித்தார். இரண்டு தங்கம் வென்ற புதுகோட்டையைச் சேர்ந்த லக்ஷ்மணனுக்கு 20 லட்ச ரூபாயும், வெள்ளிப் பதக்கம் வென்ற திருச்சியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவ்க்கு
15 லட்ச ரூபாயும் அறிவித்தார். முன்னதாக வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பேரவையில் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.