வெளியிடப்பட்ட நேரம்: 17:25 (10/07/2017)

கடைசி தொடர்பு:17:25 (10/07/2017)

சிறுவன் பிராட்லி லோவரி மரணத்தால் துயரத்தில் ஆழ்ந்த கால்பந்து உலகம்! #BradleyLoweryRIP

கால்பந்து உலகம் கண்ணீர்க் கடலில் மூழ்கியிருக்கிறது. ட்விட்டர் இரங்கல் செய்திகளால் நிறைந்திருக்கிறது. ஒவ்வொரு கால்பந்துப் போட்டிக்கு முன்பும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. இவையெல்லாம் முன்னாள், இந்நாள் கால்பந்து வீரர் ஒருவரின் மரணத்திற்காக அல்ல. ஒரு ரசிகனின் மரணத்தினால். ஆம் ஒரு ரசிகனின் மரணம் கால்பந்து உலகை ஸ்தம்பிக்கவைத்துள்ளது. ஒரு ரசிகனின் மரணம் இவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமா? ஏற்படுத்தும். அவன் வெறும் 6 வயதுடையவனாக இருந்தால்….நான்கரை ஆண்டுகள் கேன்சரோடு போராடியவனாக இருந்தால்….கேன்சரை மறந்து கால்பந்து அரங்கில் தவழ்ந்தவனாய் இருந்தால்…மொத்தக் கால்பந்து உலகமும் கண்ணீர் சிந்தத்தானே செய்யும். கால்பந்து வீரர்கள், ரசிகர்கள் என ஒவ்வொருவரையும் மீளாத்துயரத்தில் ஆழ்த்திச் சென்றுள்ளான் பிராட்லி லோவரி (Bradley Lowery).

Bradley Lowery

இத்தனை நாள்கள் அனைவரின் பிராத்தனைகளையும் அன்பையும் தனதாக்கியிருந்த அந்தச் சிறுவன், ‛நியூரோபிளாஸ்டோமா’ என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தான். அதுவும் தன் ஒன்றரை வயதிலேயே. கீமோதெரபி போன்ற பெரிய சிகிச்சைகளை மேற்கொண்டு மீண்டு வந்தான் பிராட்லி.  ஆனால் கடந்த ஆண்டு மீண்டும் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்தது. கவலைக்கிடமானான். சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது கண்ணீர் சிந்திக்கொண்டு மருத்துவமனைக் கட்டிலில் உறங்கவில்லை அவன். தான் உயிராய் நேசித்த கால்பந்தை தன்னோடு பயணிக்கும் மரணத்திற்குத் தடைபோடத் துணையாய் அழைத்துக்கொண்டான். சண்டர்லேண்ட் அணியின் தீவிர ரசிகனான பிராட்லி, அவ்வணியின் ‛மாஸ்காட்டாய்’ போட்டிகளில் கலந்துகொண்டான். அவனது ஃபேவரைட் வீரரான இங்கிலாந்து வீரர் ஜெர்மைன் டெஃபோவின் இடையில் அவன் அமர்ந்து மைதானத்தில் நுழைந்தபோது ஒட்டுமொத்த ரசிகர் பட்டாளமும் அவனுக்காகப் பிராத்தனை செய்தது.

Bradley Lowery
 

புற்றுநோயைத் தனக்குள் புதைத்துக்கொண்டு புன்னகை பூக்க மைதானத்தில் வலம் வந்த அவனை மொத்தக் கால்பந்து உலகமும் நேசிக்கத் தொடங்கியது. எவர்டன் போன்ற பிற கிளப் அணிகளுக்கும் மாஸ்காட்டாய் இருந்தான் பிராட்லி. கால்பந்தைப் பொறுத்தவரையில், அணியை மைதானத்திற்குள் கேப்டன்தான் முன்னின்று அழைத்து வருவார். ஆனால் உலகக்கோப்பை தகுதிப் போட்டி ஒன்றில், பிராட்லிக்கு முக்கியத்துவமளித்து அவனை டெஃபோவுடன் முதலில் வரச்செய்தார் இங்கிலாந்து கேப்டன் ஜோ ஹார்ட். அப்போது அரங்கமே நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தியது. எப்பொழுதும் தங்கள் அணியின் நிறத்தில் கொடிபிடிக்கும் கால்பந்து ரசிகர்கள், “புற்றுநோய்க்கு நிறமில்லை” என அணி பேதமின்றி பிராட்லிக்கு ஆதரவாய் பதாகைகள் பிடித்தனர். அவனது சிகிச்சைக்காக நிதி திரட்டப்பட்டது. அதுமட்டுமின்றி அவனுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்துச் சொல்ல இரண்டரை லட்சம் பேர் அவனுக்கு கார்டுகள் அனுப்பி வாழ்த்து மழையில் அவனை நனைத்தனர். 

Bradley Lowery

கால்பந்து உலகமும் அவனுக்காக அனைத்தும் செய்தது. நிதி திரட்டுவதில் உதவியிலிருந்து, அவன் கால்பந்து காதலுக்கு மதிப்பளிப்பதுவரை தன்னால் இயன்ற அனைத்தையும் செய்தது FA. கடந்த டிசம்பர் மாதம் சண்டர்லேண்ட் – செல்சீ அணிகளுக்கிடையிலான போட்டி தொடங்கும் முன், அவனோடு செல்சீ அணியினர் கால்பந்து விளையாடினர். அப்போது அவன் அடித்த பெனால்டியை வேண்டுமென்று கோலாக விட்டார் செல்சீ அணியின் கோல்கீப்பர் பெகோவிச். ரசிகர்களின் கரகோஷத்தில் மகிழ்ந்து போனான் பிராட்லி. இப்படி ஒவ்வொருவரும் தங்களால் இயன்றவரை அவனை மகிழ்ச்சிப்படுத்தினர். அவனுக்காக இயற்றப்பட்ட ‘ஸ்மைல் ஃபார் பிராட்லி’ பாடல் ஐ-டியூனில் மூன்றாவது இடம் பிடித்தது.

சண்டர்லேண்ட் அணியின் அனைத்து வீரர்களும் அவனுடன் மிக நெருக்கமாகப் பழகினர். அதிலும் டெஃபோவிடம் இவன் ஓர் உயிர்த் தோழன் போல ஒட்டிக்கொண்டான். அவரும் அச்சிறுவனை மிகவும் நேசித்தார். “அவனோடு மைதானத்திற்குள் நுழைந்த நாள்களே சண்டர்லேண்ட் அணியில் நான் ஆடிய நாள்களில் சிறந்த நாள்கள். அவனது கண்களில் உண்மையான அன்பைப் பார்த்து நெகிழ்ந்து போனேன்” என்று ஒருமுறை டெஃபோ நெகிழ்ந்து கூறியிருந்தார். ஒவ்வொரு நாளும் அவனைப் பற்றி அவன் பெற்றோரிடம் விசாரித்திருக்கிறார் டெஃபோ. கடந்த மே மாதம் மருத்துவமனையில் தனது 6வது பிறந்த நாளைக் கொண்டாடிய பிராட்லியுடன் அவரும் இருந்துள்ளார். “அவனை நினைக்கையில் எனக்கு சோகம் நெஞ்சடைக்கும். ஆனால் அவனிடம் என் துக்கத்தை வெளிக்காட்ட நான் விரும்பவில்லை. ஏனெனில் அவன் குழந்தை” என்று ஒருமுறை கண்கலங்கினார் டெஃபோ. 

bradley lowery

கடந்த இரண்டு மாதங்களில் அவனது புற்றுநோய் மிகவும் முற்றிவிட தொடர் சிகிச்சையில் இருந்தான் பிராட்லி. அப்போது அவனும் டெஃபோவும் மருத்துவமனைப் படுக்கையில் ஒன்றாகப் படுத்திருக்கும் புகைப்படமொன்று வெளியானது. அதைப் பற்றி டெஃபோ கூறுகையில். “நான் மருத்துவமனைக்குச் சென்றதும் என்னைக் கைப்பிடித்து அழைத்துச் சென்று படுக்கையில் படுக்கச் சொன்னான். அவன் அம்மாவை அழைத்து விளக்கை அணைக்கும்படி சொல்லிவிட்டு, கட்டிப்பிடித்துப் படுத்துக்கொண்டான். அவன் எதிர்பார்த்ததெல்லாம் அரவணைப்பு மட்டுமே” என்று அவர் சொல்லும்போது நம் கண்ணிலும் நீர்த்துளி. 

“நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என் பெயரை சண்டர்லேண்ட் அணியினர் அனைவரும் கூறினர். அது மிகவும் சந்தோஷமாக இருந்தது” என்று அந்த அணியினருடனான தன் முதல் சந்திப்பைப் பற்றிக் கூறியிருந்தான் பிராட்லி. இன்று அவன் இல்லை. பேதங்கள் நிறைந்த கால்பந்து மைதானங்களில் சமத்துவப் புறாவாய்ப் பறந்த அந்த பிஞ்சு நெஞ்சம் இயற்கையின் கோரப்பசிக்கு ஆளாகிவிட்டது. அவன் பிரபல வீரர்களின் மடியில் தவழ்ந்ததாலும், டிவியில் தோன்றியதாலும் அனைவராலும் நேசிக்கப்படவில்லை. தான் நேசித்த கால்பந்தைக் காணும்போது புற்றுநோய் எனும் உயிர்க்கொள்ளியை மறந்த அவன் புன்னகைக்காக, அதை எதிர்த்து அவன் இந்த நான்கரை ஆண்டு நடத்திய போராட்டத்துக்காகத்தான் இன்று அவனுக்காக இத்தனை ஆறுதல் குரல்கள். அவன் ஒரு போராளி. மரணத்தை எதிர்த்துப் போராடும் ஒவ்வொருவருக்கும் அவன் முன்மாதிரி. கால்பந்து களத்தில் மட்டும் மாஸ்காட்டாய் இருந்தவன், இனி உலகெங்கும் புற்றுநோய் போராட்டத்துக்கான அடையாளமாக அறியப்படுவான். 

bradley lowery

அவன் மறைவுக்குப் பின்னர் அவன் தாய் ஜெம்மா கூறிய வார்த்தை: “கெட்டியாய்ப் பிடித்து உறங்கிடு செல்லமே. அந்த தேவதைகளின் கைகள் பிடித்து உயரப் பறந்திடு”.

நிம்மதியாகத் தூங்கு பிராட்லி!


டிரெண்டிங் @ விகடன்