இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடரைக் கைப்பற்றி ஜிம்பாப்வே சாதனை! #ZimVsSL

2009-ல் கென்யாவில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரில் விளையாடிய ஜிம்பாப்வே அணி, ஐந்து போட்டிகள் கொண்ட அந்தத் தொடரைக் கைப்பற்றியிருந்தது. இந்தத் தொடருக்குப் பிறகு ஜிம்பாப்வே சுற்றுப்பயணம் செய்து விளையாடிய எந்த ஒருநாள் போட்டித் தொடரையும் ஜிம்பாப்வே கைப்பற்றியதில்லை. இன்று முடிந்த இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு தங்கள் நாட்டின் கிரிக்கெட் வரலாற்றை மாற்றி எழுதியிருக்கிறது ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி. 

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து ஒருநாள் போட்டிகள் மற்றும் ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ஜிம்பாப்வே, இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் இலங்கை. நான்காவது ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி வெற்றி... தொடரில் இரு அணிகளும் 2-2 என்ற சமநிலையில் இருக்க, கடைசிப் போட்டி இலங்கையில் இன்று தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஜிம்பாப்வே கேப்டன் கிரீமர் முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

இலங்கையை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றிய ஜிம்பாப்வே அணி

ஜிம்பாப்வே சுழற்பந்து வீச்சாளர்களின் நேர்த்தியான பந்துவீச்சைத் தாக்குப்பிடிக்க முடியாத இலங்கை பேட்ஸ்மேன்கள் தடுமாறினார். அந்த அணியின் குணதிலகா 52 (86), மேத்யூஸ் 24 (47), குணரத்னே 59 (81), சமீரா 18 (31) ஆகிய நால்வரைத் தவிர அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்கள் தரப்பில் அதிகபட்சமாக சிக்கந்தர் ராசா 3, கிரீமர் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பின்னர் 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கிய ஜிம்பாப்வே அணி 38.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்து, மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ஹாமில்டன் மசகட்சா 73 ரன்களும், சாலமன் மிர் 43 ரன்களும் எடுத்தனர். இலங்கையை அவர்களது சொந்த மண்ணில் வீழ்த்தியிருக்கும் ஜிம்பாப்வே அணிக்கு, இது மறக்கமுடியாத தொடர். கடைசிப் போட்டியின் ஆட்டநாயகன் விருதை ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசாவும், தொடர் நாயகன் விருதை அதே அணியைச் சேர்ந்த ஹாமில்டன் மசகட்சாவும் பெற்றனர். 

இவ்விரு அணிகளுக்கு இடையேயான ஒரு டெஸ்ட் போட்டி ஜூலை 14 அன்று கொழும்பு நகரில் நடைபெறவிருக்கிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!