வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (11/07/2017)

கடைசி தொடர்பு:19:33 (11/07/2017)

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை..! பி.சி.சி.ஐ அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது. 

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதிவியை கும்ப்ளே ராஜினாமா செய்த பிறகு, பயிற்சியாளருக்கான இடம் காலியாக இருந்துவந்தது. அந்தப் பதிவிக்கு யார் வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையை நிலவி வந்தது. மேலும் முன்னாள் வீரர்களிடையே அதற்கான போட்டியும் நிலவியது. முன்னாள் இந்திய அணி வீரர்கள் ரவி சாஸ்திரி, வீரேந்திர சேவாக் உள்ளிட்ட ஆறு பேர் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்தப் பயிற்சியாளர் தேர்வுக் குழுவில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, வி.வி.எஸ்.லட்சுமணன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். பயிற்சியாளரைத் தேர்வு செய்வது குறித்து கேப்டன் விராட் கோலியிடம் ஆலோசனை நடத்தப்படும் என்று ஏற்கெனவே கங்குலி தெரிவித்திருந்தார்.

தலைமைப் பயிற்சியாளர் தேர்வு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பி.சி.சி.ஐ.யின் பொறுப்பு செயலாளர் அமிதாப் சௌத்திரி, 'இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குறித்து இன்னமும் முடிவு எடுக்கப்படவில்லை. பயிற்சியாளர் யார் என்பதை மூன்று பேர் கொண்ட தேர்வுக் குழு இன்னமும் அறிவிக்கவில்லை. அவர்கள் இதுகுறித்து ஆழ்ந்து சிந்தித்துவருகின்றனர்' என்றார். முன்னதாக 'ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகள் பயிற்சியாளராக நீடிப்பார்' என்று ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், நீண்ட நேரம் கழித்து பி.சி.சி.ஐ தரப்பிலிருந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.