வெளியிடப்பட்ட நேரம்: 21:03 (11/07/2017)

கடைசி தொடர்பு:21:29 (11/07/2017)

டி-20 கிரிக்கெட்டில் டபுள் செஞ்சுரி அடித்த ஷஃபிக்கின் கதை!

ப்கானிஸ்தானிலிருந்து அட்டகாசமான கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறார்கள். ரஷீத் கான், முகமது நபி, சேஷாத் ஆகியோரைத் தொடர்ந்து இன்னொரு கிரிக்கெட் வீரரும் இப்போது லைம்லைட்டுக்கு வந்திருக்கிறார். இவர் டி20 கிரிக்கெட் போட்டியில் இரட்டைச் சதம் அடித்து வியக்கவைத்திருக்கிறார். சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவர் உள்ளூர் தொடர் ஒன்றில் இரட்டைச் சதம் அடித்தது உலகிலேயே இதுதான் முதல்முறை. முன்னதாக ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 175 ரன்களைக் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. அந்தச் சாதனையை இப்போது முறியடித்திருக்கிறார் ஆப்கானிஸ்தான் வீரர் ஷபிகுல்லா ஷஃபிக். 

ஆப்கானிஸ்தானில் பேரகான் நாங்கர்ஹார் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடந்துவருகிறது. இதில் கதீஸ் கிரிக்கெட் அகாடமியும் காபுல் ஸ்டார் கிரிக்கெட் க்ளப் அணியும் மோதின. இந்த இரண்டு அணிகளுக்கிடையே நடந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கதீஸ் கிரிக்கெட் அகாடமி அணி அதிரடியாக விளையாடியது. ஷபிகுல்லாஹ் ஷஃபிக்கின் விளாசல் ஆட்டத்தில் காபுல் அணி கலங்கியது. ஷபிகுல்லாஹ் ஷஃபிக், 71 பந்துகளில் 214 ரன்களைக் குவித்தார். இதில் 21 சிக்ஸர்கள், 14 பெளண்டரிகள் அடங்கும். 

ஆப்கானிஸ்தான் வீரர் ஷபிகுல்லாஹ் ஷஃபிக்

 ஷஃபிக்குடன் இணைந்து வஹீதுல்லா ஷஃபிக் என்றொரு வீரரும் வெளுத்துக்கட்டினார். இவர் 31 பந்துகளில் 81 ரன்கள் குவித்தார். வஹீதுல்லா, ஷபிகுல்லா ஷஃபிக்கின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 20 ஓவர்கள் முடிவில் கதீஸ் கிரிக்கெட் அகாடமி அணி 351 ரன்களைக் குவித்து மிரளவைத்தது. இதற்கு முன்னதாக சர்வதேச கிரிக்கெட் விளையாடும் டி20 தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 263/5 எடுத்ததே சாதனை. 

120 பந்துகளில் 352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது காபுல் கிரிக்கெட் க்ளப் அணி. ஒரு ஓவருக்கு 17.55 ரன்கள் எடுக்க வேண்டும். அதாவது ஒரு பந்தில் 2.93 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிர்பந்தத்துடன் களமிறங்கிய காபுல் அணி, வெறும் 107 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதையடுத்து 244 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றிபெற்றது கதீஸ் கிரிக்கெட் அகாடமி. 

கடந்த சில வருடங்களாக பேட்டிங்கில் சாதனைமேல் சாதனை படைத்ததுவருகிறார்கள் கிரிக்கெட் வீரர்கள். கடந்த ஆண்டு மும்பையைச் சேர்ந்த 16 வயது சிறுவன், ஆயிரம் ரன்களைக் குவித்து வியக்கவைத்தான். இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெல்லியைச் சேந்த முதல்தர கிரிக்கெட்டரான மோகீத் அகலாவத் உள்ளூர் டி20 போட்டி ஒன்றில் முச்சதம் அடித்து உலக சாதனை புரிந்தார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் வீரர் ஒருவரும் இரட்டைச் சதம் எடுத்திருப்பது கவனிக்கத்தக்கது. 

ஷபிகுல்லா ஷஃபிக், ஆப்கானிஸ்தான் அணிக்காக எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடுகிறார்; ஒருநாள் போட்டிகளில் 17 இன்னிங்ஸில் 353 ரன்களைக் குவித்திருக்கிறார். ஸ்டிரைக் ரேட் 103.  டி20 ஃபார்மெட்டைப் பொறுத்தவரையில் 32 இன்னிங்ஸில் 392 ரன்களைக் குவித்திருக்கிறார். இதில் கவனிக்கவேண்டிய அம்சம் என்னவெனில், ஸ்டிரைக் ரேட் 143.06. ஆப்கானிஸ்தான் அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடிவரும் ஷபிகுல்லா ஷஃபிக் இதே ஃபார்மில் தொடர்ந்தால், சர்வதேச அரங்கில் ஆப்கானிஸ்தான் மேலும் பல உயரங்களைத் தொடும். 28 வயதை நெருங்கும் ஷஃபிக், ஆப்கானிஸ்தான் அணிக்காக உலகக்கோப்பைத் தொடர்களிலும் பேட் பிடித்திருக்கிறார். 

வலதுகை பேட்ஸ்மேனான ஷஃபிக், 2006-ம் ஆண்டே கிரிக்கெட் ஆட வந்துவிட்டார். ஆனால், ஆப்கானிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் ஆடத் தொடங்கியது 2009-ம் ஆண்டிலிருந்துதான். முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய வாய்ப்புக் கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டியில் டக் அவுட். மூன்றாவது போட்டியிலும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. அறிமுகமான ஒருநாள் போட்டியிலிருந்து ஐந்து ஆண்டுகள் கழித்துத்தான் தன் ரன் கணக்கைத் தொடங்கினார் ஷஃபிக். ஐக்கிய அரபு நாடுகளுக்கு எதிராக நடந்த ஒருநாள் போட்டிதான் அவரின் கரியரில் நான்காவது ஒருநாள் மேட்ச். அந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி ஐந்து பந்துகளைச் சந்தித்து, அவற்றில் இரண்டு பந்துகளை சிக்ஸருக்கு விளாசி 14 ரன்கள் குவித்தார். 

அதன் பிறகு இவரின் அதிரடி ஆட்டத்துக்காகவே அணியில் இடம் கிடைத்தது. ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒரு போட்டியில் 43 பந்துகளில் 56 ரன்களைக் குவித்தார். இடையில் சில காலம் ஃபார்ம் அவுட்டில் இருந்தவர், இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்தே செம  ஃபார்மில் இருக்கிறார். கடந்த மார்ச்சில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள நொய்டா மைதானத்தில் நடந்த போட்டியில் அயர்லாந்துக்கு எதிராக 17 பந்துகளில் நான்கு பெளண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் உள்பட 35 ரன்கள் குவித்தார். இன்னொரு போட்டியில் 28 பந்துகளில் இரண்டு பெளண்டரி, நான்கு சிக்ஸர்கள் விளாசி அரை சதம் எடுத்தார்.  ஒருநாள் கிரிக்கெட்டில் குறைந்த பந்தில் அரை சதம் எடுத்த ஆப்கானிஸ்தான் வீரர் ஷஃபிக்தான். ஒருநாள் கிரிக்கெட்டை டி20-போல ஆடக்கூடிய ஷஃபிக், டி20 ஃபார்மெட்டில் இன்னும் அதிரடியைக் கூட்டுகிறார்.

கடந்த ஆண்டு இந்தியாவில் டி20 உலகக்கோப்பை நடந்தது. லீக் சுற்றில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணியுடன் மோதியது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 85/7 எனத் தத்தளித்தது. பிறகு மொயின் அலி அதிரடியால் 142 ரன்கள் குவித்தது, 143 ரன்கள் எடுத்தால் வெற்றி எனக் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. சஷாத், ஸ்டானிஸ்காய், நூர் அலி, நைப், நபி, ரஷீத் கான் என நட்சத்திர வீரர்கள் அனைவரும் வந்த வேகத்தில் வெளியேறினார்கள். 64/6 எனத் தத்தளித்த அணிக்குக் கரம் கொடுத்தார் ஷஃபிக். அவர் 20 பந்துகளைச் சந்தித்து நான்கு பெளண்டரி, இரண்டு சிக்ஸர்கள் உதவியுடன் 35 ரன்கள் கொடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஆனால், ஷஃபிக்குக்கு எதிரே எந்த வீரரும் கைகொடுக்காததால் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது ஆப்கானிஸ்தான். 

கடந்த மாதம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் 25 ரன்கள் குவித்தார் ஷஃபிக். தற்போதைய ஆப்கன் அணியில் ஏழு அல்லது எட்டாவது இடத்தில் களமிறங்குகிறார். இதனால் பத்துப் பந்துகளுக்கு மேல் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைப்பதில்லை. இப்போது டி20 போட்டியில் இரட்டைச் சதம் எடுத்ததன் மூலம் ஆப்கன் அணியில் மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புக் கிடைக்கும் என நம்புகிறார் ஷஃபிக்.


டிரெண்டிங் @ விகடன்