வெளியிடப்பட்ட நேரம்: 17:46 (13/07/2017)

கடைசி தொடர்பு:08:20 (14/07/2017)

இந்தியாவின் முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு முன் இதெல்லாம் நடந்தது! #OnThisDay

1974ஆம் ஆண்டு. அப்போது டெஸ்ட் மேட்ச் கிரிக்கெட் போட்டிகளை விளையாடி வந்த நாடுகள் மொத்தம் ஆறுதான். அவற்றுள் ஐந்து நாடுகள் ஒருநாள் போட்டிகளில் விளையாடி விட்டன. இப்போதைக்கு ஓவர்கள் எண்ணிக்கையைக் கணக்கில் கொண்ட கிரிக்கெட் போட்டிகளின் தலைமையகமாகக் கருதப்படும் இந்தியாதான், அப்போதைக்கு ஒருநாள் போட்டிகளில் ஆடாத அந்த ஆறாவது நாடு. 1974ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் தேதிதான் அவர்கள் முதன்முதலில் ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார்கள். முதல் போட்டியிலேயே அப்போதைய அதிகபட்ச ரன்கள் குவித்த அணி என்ற உலக சாதனையைச் செய்தது இந்திய அணி. ஆனால், இந்தப் போட்டிக்குப் பின்னால், பல அரசியல் சம்பவங்கள், பல காமெடிகள் எல்லாம் கலந்திருந்தன.

முதல் ஒருநாள் போட்டி இந்திய கிரிக்கெட் அணி

(Picture Courtesy: Getty Images)

ஒரு பிளாஷ்பேக்:

1971ஆம் ஆண்டு இந்தியா மேற்கிந்தியத் தீவுகளுக்கும், இங்கிலாந்துக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருந்தது. கிரிக்கெட் அணிக்கு யார் அணித்தலைவராக இருப்பது என்ற விவாதம் வந்தபோது,பட்டோடிக்கும் அஜித் வாடேகருக்கும் சம ஓட்டுகள் இருந்தன. இந்தியா அயல்நாட்டில் முதல் டெஸ்ட் மேட்ச் ஜெயிக்கவும், முதல் தொடரை வெல்லவும் காரணமாக இருந்தவர் அஜித் வாடேகர். சேர்மன் ஆஃப் செலக்டராக இருந்த விஜய் மெர்ச்சண்ட், அவரது ஓட்டை அஜித் வாடேகருக்கு அளித்து, அவரைக் கேப்டனாக்கினார். அதன்பிறகு, அவர் வெளிநாட்டில் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, (இந்தியாவில்) இங்கிலாந்து என்று தொடர்ச்சியாக டெஸ்ட் தொடர்களை வென்று இந்தியாவை முதலிடத்திற்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த நேரம். அவருக்குப் பத்மஸ்ரீ பட்டத்தை வழங்கியதோடல்லாமல், இந்தூரில்  விஜய் பல்லா (வெற்றிக்கான பேட்) என்று சிமென்ட்டால் மிகப்பெரிய பேட் ஒன்றை உருவாக்கி, அதில் இந்திய அணி வீரர்கள் அனைவரின் பெயரையும் பொறித்து நிறுவினார்கள். 

1974 இங்கிலாந்து டூர்:

இந்த டூர் ஆரம்பிக்கும்போதே, கேப்டனாக பட்டோடி திரும்ப வரவேண்டுமென்று அவரது ஆதரவாளர்கள் பேச ஆரம்பித்தார்கள். போதாக்குறைக்கு பிஷன் சிங் பேடி அவரது பிரித்தாளும் அரசியல் வேலையை வேறு ஆரம்பித்தார். ஆக, டீமில் மூன்று குழுக்கள் (பட்டோடி கேம்ப், பேடி கேம்ப் & கேப்டன் வாடேகர் கேம்ப்) உருவாயின. ஒரு கட்டத்தில் கடுப்பான வாடேகர், பட்டோடியை அணித்தலைவராக வரும்படி அழைத்தார். பட்டோடி மறுக்க, ஒருவழியாக இந்திய அணி லண்டன் ஏர்போர்ட்டில் குழப்பமான மனநிலையில் லேண்ட் ஆனது. 

அஜித் வாடேகர்

முதல் கோணல்:

ஓல்ட் டிராஃபோர்ட்டில் முதல் டெஸ்ட் போட்டி ஆரம்பிக்கும்போது, வாடேகருக்கு விரலில் காயம் ஏற்பட்டு, அவரால் பேட்டையே ஒழுங்காகப் பிடிக்க இயலாத சூழல் ஏற்பட்டது. அதனால், அவருக்குப் பதிலாக, துணை கேப்டனாக இருந்த வெங்கட் ராகவன் கேப்டன் பதவியேற்று ஆடுவார் என்று முடிவெடுத்தார்கள். ஆனால், வழக்கம்போல பிஷன் சிங் பேடி அதற்கு கலகத்தை ஆரம்பித்தார். அணிக்குள் பிரச்னையைத் தலைதூக்க விடக்கூடாது என்பதற்காக, காயத்துடனேயே வாடேகர் அந்தப் போட்டியில் பங்கேற்றார். ஏற்கெனவே ஃபாரூக் இன்ஜினீயரும் முழு உடல்தகுதியில்லாமல் ஆட, இந்தியா முதல் டெஸ்ட் போட்டியைத் தோற்றது. போட்டியில் தோற்றாலும், ஓரளவுக்குக் கௌரவமான தோல்வியையே சந்தித்தது இந்தியா. ஆனால், லார்ட்ஸ்சில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 42 ரன்களுக்கு அவுட் ஆகி, மிக மோசமாகத் தோற்றனர்.

இதற்கிடையில், மைதானத்திற்கு வெளியே இரண்டு மிக முக்கியமான சம்பவங்கள் நடந்தன. இதுவரையில், அரசியல், மோசமான தோல்வி என்று பிரச்னைகளைச் சந்தித்து வந்த இந்திய அணிக்கு, சம்மட்டி அடி போல மன உளைச்சலைக் கொடுத்த இரண்டு பிரச்னைகளுமே அடுத்தடுத்த நாள்களில் நடந்தேறின.

இரண்டு பிரச்னைகள்:

இந்திய அணி எந்த ஒரு நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும், அந்த நாட்டில் இருக்கும் இந்திய ஹை கமிஷனரின் வீட்டில் சம்பிரதாயமான விருந்து ஒன்று அளிக்கப்படுவது வழக்கம். அதைப்போலவே, இந்தச் சுற்றுப்பயணத்திலும் ஓர் இரவு விருந்து ஏற்பாடாகி இருந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு இந்த விருந்து திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், இந்த விருந்துக்குத் தாமதமாக வந்தார்கள் என்று கேப்டன் வாடேகரையும், மற்ற சில வீரர்களையும் அனுமதிக்காமல் வெளியேற்றி விட்டார்கள். மற்ற வீரர்கள் உள்ளே இருக்க, சீனியர்கள் வெளியே, அவர்கள் வந்த டீம் பஸ்சிலேயே உட்கார்ந்திருந்தனர். பின்னர், பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அவர்களும் விருந்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இது வீரர்களிடையே பெருத்த அவமானத்தையும் மன உளைச்சலையும் உண்டாக்கியது.

அடுத்த நாள், இந்திய அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சுதீர் நாயக் ஆக்ஸ்ஃபோர்டு தெருவிலிருந்த மார்க்ஸ்&ஸ்பென்சர் கடையில் திருடினார் என்று கைது செய்யப்பட்டார். இப்படியாக, மூன்றாவது போட்டிக்கு முன்பாக பல குழப்பங்கள் தலைதூக்க, எதிர்பார்த்தபடியே இந்தப் போட்டியிலும் இந்தியா தோற்றது. இந்த டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் தோற்ற பிறகு, அடுத்து நடந்த போட்டிதான் இந்தக் கட்டுரைக்கு காரணம்.

பிரிஜேஷ் பட்டேல்முதல் ஒரு நாள் போட்டி:

ஹெட்டிங்லியில்தான் இந்த போட்டி நடந்தது. போட்டிக்கு முன்பாக, கேப்டன் வாடேகரிடம் இந்தப் போட்டி பற்றி கேட்டபோது, அவருக்கு (அவருக்கே!) இது ஓர் அதிகாரபூர்வமான (அஃபீஷியல்) போட்டி என்று தெரியாது. இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு கேப்டன் யார் தெரியுமா? 2001-2002ல் சச்சின் தெண்டுல்கர் உள்பட ஆறு இந்திய வீரர்களைப் போட்டியில் விளையாட தடை விதித்து, பின்னர் ஐ சி சியால் போட்டி நடுவர் பதவியிலிருந்து விலக்கப்பட்டாரே, அதே மைக் டென்னஸ் தான். டாஸில் வென்று, இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார், மைக். அப்போதெல்லாம் இங்கிலாந்தில் நடக்கும் ஒரு நாள் போட்டிகள் 55 ஓவர்கள் கொண்டதாக இருக்கும். தொண்ணூறுகளின் துவக்கம் வரையிலுமே இங்கிலாந்தில் 55 ஓவர்கள் கொண்டதாகவே இந்த ஒரு நாள் போட்டிகள் இருந்து வந்தன.

முதல் சிக்ஸர்

இந்தியாவின் முதல் ஒருநாள் போட்டிக்கான சிக்ஸரை அடித்தது யார் தெரியுமா? மிகவும் மெதுவாக ஆடுகிறார் என்று பலராலும் கிண்டல் செய்யப்பட்ட சுனீல் கவாஸ்கர்தான் முதல் ரன்னையும், முதல் பவுண்டரியையும் அடித்தார். ஆனால், அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழ, இந்தியா 60 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகள் என்று தடுமாறியது.

கேப்டன் வாடேகர் நிலைத்து நின்று ஆடி, பத்து பவுண்டரிகளை விளாசி, 82 பந்துகளில் 67 ரன்களைக் குவித்தார். அவர் அவுட் ஆன பிறகு, பேட்டிங் செய்ய வந்தார் பிரிஜேஷ் பட்டேல். டெஸ்ட் போட்டிகளில் 4 இன்னிங்சில் வெறும் 10 ரன்களை மட்டுமே எடுத்திருந்தார் இவர். ஆனால், இந்தப் போட்டியில் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி, 78 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர் உட்பட 82 ரன்களைக் குவித்தார். மூன்றாவது சிக்ஸர் அடிக்க முயன்று இவர் அவுட்டானார். அதன்பிறகு

இந்திய அணி 7 பந்துகள் மீதமிருக்க, 265 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்த 265 ரன்கள்தான் அதுவரையில் ஒருநாள் போட்டிகளின் அதிகபட்ச ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய கிரிக்கெட் அணி

அனுபவமின்மை:

இந்திய அணி வீரர்களில் பேடியையும், வெங்கட்ராகவனைத் தவிர, வேறு யாருமே நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளில் விளையாடியதில்லை. மும்பையில் அப்போது தாலிம் ஷீல்ட் உள்ளூர் லீக் போட்டிகள் இதேபோல ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்ட போட்டிகளாக நடந்திருந்தாலும், அவை முதல்தரப் போட்டிகள் அல்ல. இங்கிலாந்தின் கவுண்டி போட்டிகளில் விளையாடி, அனுபவம் கொண்ட பேடி, அந்தத் தொடர் முழுவதும் எப்படிப் பந்து வீசினாரோ, அதைப்போலத்தான் இந்தப் போட்டியிலும் பந்து வீசினார். (ஏற்கெனவே டெஸ்ட் போட்டிகளில் அணியின் நிலைமையை உணர்ந்து, கட்டுப்பாடாக வீசாமல், நிறைய ரன்களை வாரிக் கொடுத்தார் என்று கவாஸ்கர் இவர் மீது குற்றம் சாட்டினார்).

ஃபீல்டர்களை எங்கே நிறுத்த வேண்டும், பந்துவீச்சு எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற விஷயங்களில் இந்தியாவின் அனுபவமின்மை தெளிவாகத் தெரிந்தது. ஜான் எட்ரிச் சிறப்பாகப் பேட்டிங் செய்து 90 ரன்களைக் குவித்து, வெற்றிக்கு வழிவகுத்தார். இங்கிலாந்து அணி 51.1 ஓவர்களில், 6 விக்கெட்டுகளை மட்டும் இழந்து அப்போதைய ஒருநாள் போட்டிகளில் மிக அதிகமான ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்றது. கடைசி இரண்டு ஓவர்கள் வீசும்போது, மழை கொட்டோ கொட்டென்று கொட்ட, அம்பயர்கள் இந்திய அணியிடம் என்ன செய்யலாம் என்று கேட்க, வாடேகர் பெருந்தன்மையாகத் தொடர்ந்து ஆட ஒப்புக்கொண்டார். ஆட்ட நாயகன் விருதைப் பெற்ற ஜான் எட்ரிச்சுக்கு 125 பவுண்டுகள் வழங்கப்பட்டன.

பவுலிங்

 

இந்தியாவின் சார்பில், முதல் விக்கெட்டை வீழ்த்தியவர், ஏக்நாத் சோல்கார். முதல் ஸ்டம்பிங்க்கைச் செய்தவர், ஃபாரூக்  இன்ஜினியர். முதல் கேட்சைப் பிடித்தவர், வெங்கட் ராகவன்.

அடுத்து நடந்த இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோற்றது. அதன் பின்னர், இந்தியாவுக்குத் திரும்பிய அஜித் வாடேகருக்கு, அவரை துலீப் ட்ரோபி அணியிலிருந்து நீக்கிய செய்தியும், ஸ்டேட் பேங்க்கில் அவருக்கு புரமோஷன் கிடைத்த செய்தியும் ஒன்றாக வந்தது. இதற்கு மேலும் தொடர்ந்து விளையாட விரும்பாத வாடேகர், ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

வீழ்ச்சி:

பின்னர், அவரது வாழ்க்கைக் குறிப்பில், 1974ஆம் ஆண்டு ரஞ்சி ட்ரோபி செமி ஃபைனலைத்தான் தனது கிரிக்கெட் வாழ்வின் வீழ்ச்சி என்று குறிப்பிடுகிறார். அந்தப் போட்டியில், மும்பை 198/2 என்று ஆடிக்கொண்டு இருக்கும்போது, ஒரு ரன்னை எடுக்க ஓடி வந்தபோது, பிட்ச் நடுவில் கால் தடுமாறி விழுந்து, ரன் அவுட் ஆனார் வாடேகர். 17 ஆண்டுகளாகத் தொடர்ந்து ரஞ்சி ட்ரோபியை வென்று வந்த மும்பை அணி, அந்த ஆண்டுதான் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த வீழ்ச்சிதான் அதற்கடுத்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திலும் தன்னைத் தொடர்ந்ததாக வாடேகர் குறிப்பிடுகிறார்.

ஆக, அரசியலும், குழப்பங்களும் சேர்ந்து அஜித் வாடேகரை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வைத்தாலும், இந்தியாவுக்காக முதல் ஒருநாள் போட்டியை வழிநடத்திச் சென்றவர் என்ற வகையிலும், முதல் அரை சதத்தை அடித்தவர் என்ற முறையிலும் அஜித் வாடேகரின் பெயர் இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் போட்டிகளின் வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறது.

தெரியுமா?

இங்கிலாந்தில் முதல் ஒருநாள் போட்டியை 1974ல் ஆடினாலும், இந்தியத் தேர்வுக்குழுவுக்கோ, கிரிக்கெட் போர்டுக்கோ, ஒருநாள் போட்டிகளின் மீது அவ்வளவாக நாட்டமில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால், இந்தியாவில் முதன்முதலாக ஒருநாள் போட்டி எப்போது நடந்தது தெரியுமா? 1981-82 ஆம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அகமதாபாத்தில்தான் இந்தியா முதன்முதலில், சொந்த மண்ணில் ஒருநாள் போட்டியொன்றை ஆடியது.


டிரெண்டிங் @ விகடன்