இரண்டாவது டெஸ்ட் : இங்கிலாந்துக்குப் பதிலடி தருமா தென் ஆப்பிரிக்கா? #ENGvsSA

தென் ஆப்பிரிக்கா அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறது. வலுவான கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக விளங்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு, இதுவரை இங்கிலாந்து சுற்றுப்பயணம் இனிக்கவில்லை. கடந்த மே 24-ம் தேதி, தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள்கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியது. இதில் 1-2 எனத் தோல்வியைத் தழுவியது தெ.ஆ. ‘சாம்பியன்ஸ் டிராபியை நிச்சயம் தென் ஆப்பிரிக்கா வெல்லும்' என, தெம்புடன் சொல்லியிருந்தார் கேப்டன் டிவில்லியர்ஸ். ஆனால், அரை இறுதிக்குக்கூடத் தகுதிபெறாமல் வெளியேறியது. இதையடுத்து `டிவில்லியர்ஸிடமிருந்து கேப்டன் பதவியைப் பறிக்க வேண்டும்' எனக் குரல்கள் எழுந்தன. 

சாம்பியன்ஸ் டிராபி முடிந்த பிறகு, அதே இங்கிலாந்துடனான டி20 தொடர் ஆரம்பமானது. இந்த முறை இளம் வீரர்களோடு களம் இறங்கினார் டிவில்லியர்ஸ். ஆனால், டி20 தொடரிலும் 1-2 எனத் தோற்றது தென் ஆப்பிரிக்கா. தொடர் தோல்விகளால் துவண்டுப்போன டி வில்லியர்ஸ்,  உடனடியாக தென் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பினார். டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதா அல்லது ஓய்வுபெறுவதா, ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக தொடர்வதா அல்லது வெறும் வீரராக மட்டும் அணியில் நீடிப்பதா என்பது குறித்து, ஆகஸ்ட் மாதம் கிரிக்கெட் வாரியத்துடன் பேசி முடிவுசெய்வதாகத் தெரிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

தென் ஆப்ரிக்கா

டி20 தொடர் முடிந்ததையடுத்தது, இங்கிலாந்து அணியுடனான டெஸ்ட் தொடர் ஆரம்பமானது. டெஸ்ட் கேப்டன் டிவில்லியர்ஸ், தன் மனைவியின் பிரசவத்துக்காக விடுமுறையில் சென்றிருந்தார். இதையடுத்து டீன் எல்கர், கேப்டன் பதவியேற்றார். இங்கிலாந்து அணிக்கு முதன்முறையாக ஜோ ரூட் கேப்டன் பதவியேற்றார். ஜூலை 6-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 458 ரன்களையும், தென் ஆப்பிரிக்கா 361 ரன்களையும் குவித்திருந்தன. இங்கிலாந்து தன் இரண்டாவது இன்னிங்ஸில் 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 331 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, வெறும் 119 ரன்களில் சுருண்டது. 

211 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியுடன் தன் டெஸ்ட் கேப்டன் இன்னிங்ஸைத்  தொடங்கினார் இங்கிலாந்து கேப்டன் ரூட். இந்நிலையில் இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடக்கிறது. இங்கிலாந்து அணியில் எந்தவித மாற்றமும் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. லார்ட்ஸ் டெஸ்டில் களமிறங்கிய அதே அணியே இப்போதும் களமிறங்கக்கூடும். அந்த அணியில் பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கின்றனர். டுபிளசிஸ், அணிக்குத் திரும்பியுள்ளதால் அவரின் தலைமையில் ரூட் அணியை எதிர்கொள்ள உள்ளது தெ.ஆ. இந்தப் போட்டியில் டுமினி நீக்கப்படுவார் எனத் தெரிகிறது. காகிசோ ரபடாவுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவருக்குப் பதிலாக கிறிஸ் மோரிஸ் அல்லது பெலுக்வாயோ இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம். ரூட் தலைமையிலான இங்கிலாந்துக்கு டுபிளசிஸ் தலைமையிலான அணி  வலுவான பதிலடியைக் கொடுக்குமா அல்லது தோல்விகள் மீண்டும் துரத்துமா என்பதை, பொறுத்திருந்துப் பார்ப்போம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!