2011 உலகக் கோப்பை மேட்ச் ஃபிக்ஸிங் குற்றச்சாட்டு... ரணதுங்காவுக்கு இந்திய வீரர்கள் பதிலடி!

2011-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணிக்கு மறக்க முடியாது ஒரு ஆண்டு. சொந்த மண்ணில் நடந்த உலகக் கோப்பை தொடரில், வெற்றி பெற்றது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு உலகக் கோப்பையை சொந்த மண்ணில் கைப்பற்றியது. ஆனால், அந்த வெற்றி அவ்வளவு எளிதில் வாய்க்கவில்லை. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இறுதிப் போட்டியில், இலங்கை  அணியை மிகவும் போராடியே வெற்றி பெற்றது. குறிப்பாக, சேஸிங்கில் சச்சின், சேவாக் தொடக்கத்திலேயே ஆட்டமிழந்தது, கம்பீரின் பொறுப்பான ஆட்டம், தோனியின் அதிரிபுதிரி ஃபினிஸிங் என்று அந்தக் காட்சிகள் இன்னும் நம் கண் முன் நிற்கின்றது. அந்த வெற்றியின் மீதுதான் தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா சந்தேகம் எழுப்பியுள்ளார்.

2011 உலகக் கோப்பை இந்தியா


இது குறித்து ஃபேஸ்புக்கில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போது நான் கமென்ட்ரி கொடுத்துக்கொண்டிருந்தேன். நாங்கள் தோற்றபோது எனக்கு சந்தேகம் எழுந்தது. இலங்கை அணிக்கு என்ன ஆனது? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். என்னால், தற்போது அது குறித்து அனைத்தையும் கூற முடியாது. ஆனால், ஒரு நாள் நான் கூறுவேன்" என்றார்.

 அர்ஜுனா ரணதுங்கா

ரணதுங்காவின் இந்தக் கருத்து, இந்திய கிரிக்கெட் வீரர்களிடம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து 2011 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்த கம்பீர் , "ரணுதுங்கா போன்ற கிரிக்கெட்டில் முக்கியமான ஒருவரிடம் இருந்து இதுபோன்ற கருத்து வருவது எனக்கு ஆச்சரியமளிக்கிறது. ஆதாரமில்லாமல் இதுபோன்ற குற்றச்சாட்டை முன் வைக்கக் கூடாது. குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை அவர் பொது வெளியில் தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


இந்திய அணியின் பந்து வீச்சாளர் நெஹ்ரா, "இதை நாம் காது கொடுத்துக் கேட்க வேண்டிய அவசியமில்லை. இதற்கு மதிப்புக் கொடுத்து கருத்து கூறவும் நான் விரும்பவில்லை. இதேபோல 1996-ம் ஆண்டு இலங்கை அணி உலகக் கோப்பை வென்றது குறித்து நாங்கள் கேள்வி எழுப்பினால் சரியாக இருக்குமா?" என்று தெரிவித்துள்ளார்.


ரணுதுங்காவின் கருத்துக்கு ஹர்பஜன் சிங் உள்ளிட்ட வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!