மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி!

அரையிறுதிக்கு முன்னேர இன்று வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணியை உலகக் கோப்பைத் தொடரில் சந்தித்தது. இந்நிலையில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. 

களத்தில் இந்தியா-நியூசிலாந்து அணிகள்

இங்கிலாந்து, டெர்பியில் நடந்த போட்டிக்கான டாஸை வென்றது நியூசிலாந்து. அந்த அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இந்தியாவை பேட்டிங் ஆடச் சொன்னது. தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்களான ஸ்மிரிதி மந்தானா மற்றும் பூனம் ரௌத் ஆகியோர் முறையே 13 மற்றும் 4 ரன்கள் என்ற சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். பின்னர் களத்துக்கு வந்த கேப்டன் மித்தாலி ராஜ் மற்றும் ஹர்மன்ப்ரீத் கௌர் நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். குறிப்பாக மித்தாலி ராஜ், 123 பந்துகளுக்கு 109 ரன்கள் எடுத்து இந்திய அணி இமாலய டார்கெட் செட் செய்ய வலுவான அடித்தளம் அமைத்தார். ஹர்மன்ப்ரீத் கௌர் 60 ரன்களுக்கு அவுட்டாக, பின்னர் வந்த வேதா கிருஷ்ணமூர்த்தி 45 பந்துகளுக்கு 70 ரன்கள் விளாசினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி, 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது.

கடினமான டார்கெட்டை சேஸ் செய்ய ஆரம்பித்த நியூசிலாந்து அணி, தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. எந்தப் பார்டனர்ஷிப்பும் இல்லாததால் அந்த அணி, 25.3 ஓவர்களில் 79 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய தரப்பில் ராஜேஷ்வரி கயாக்வாத் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் இந்திய அணி, 186 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளது.  தரவரிசைப் பட்டியலில் இந்தியா தற்போது 10 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. மொத்தமாக 7 லீக் போட்டிகளில் 5-ல் வெற்றியும் 2-ல் தோல்வியும் அடைந்துள்ளது இந்திய அணி. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!