வெளியிடப்பட்ட நேரம்: 05:31 (18/07/2017)

கடைசி தொடர்பு:10:13 (18/07/2017)

'நாங்க இது கிடையாது..!'- படுதோல்விக்குப் பின்னர் ஜோ ரூட்

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் இருக்கிறது தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி. இந்தச் சுற்றுப் பயணத்தில் ஒருநாள் தொடர் மற்றும் 20 ஓவர்கள் கிரிக்கெட் தொடர்கள் முடிந்துவிட்டன. தற்போது டெஸ்ட் தொடரை இரு அணிகளும் ஆடிக் கொண்டிருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஆனால், நேற்று முடிந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 340 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி படுதோல்வியடைந்தது. இதனால், விரக்தியின் உச்சத்துக்கே போயுள்ளார் இங்கிலாந்து அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட்.

ஜோ ரூட்

போட்டி குறித்து பேசிய அவர், 'நாங்கள் இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததைவிட, விளையாடிய விதம் மிகவும் வருத்தமளிக்கிறது. எங்கள் அணி எந்தப் போட்டியையும் அவ்வளவு சீக்கிரம் விட்டுகொடுக்காது. ஆனால், இந்தப் போட்டியில் நாங்கள் விளையாடிய விதம், எங்கள் அணி எப்படிப்பட்டது என்பதை காண்பிப்பதுபோல் இல்லை' என நொந்துகொண்டார்.

அவர் மேலும், 'மிகவும் சாந்தமாக இருக்க வேண்டும். ஏனென்றால் இந்தத் தொடரில் இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இருக்கின்றன. இந்தப் போட்டியில் நாங்கள் செய்த தவறுகளை உற்று நோக்கி, அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டெழ வேண்டும்' என்று நம்பிக்கை ததும்ப முடித்துக்கொண்டார்.