வெளியிடப்பட்ட நேரம்: 17:28 (18/07/2017)

கடைசி தொடர்பு:17:33 (18/07/2017)

பந்து வீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண்: டிராவிட், ஜாகீர் நியமனத்துக்கு ஒப்புதல் இல்லை... பயிற்சியாளர் தேர்வில் திடீர் ட்விஸ்ட்!

இந்திய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட்டுள்ளார்.

பரத் அருண்


இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே விலகிய பிறகு, கடந்த சில வாரம் ரவி சாஸ்திரி அணியின் தலைமைப் பயிற்சியாளராக  நியமிக்கப்பட்டார். அதேபோல, ஜாகீர்கான் பந்து வீச்சுப் பயிற்சியாளராகவும் டிராவிட், வெளிநாட்டுத் தொடர்களுக்கு பேட்டிங் பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, 'ஜாகீர்கான் முழுநேர பந்து வீச்சுப் பயிற்சியாளர் இல்லை. அவர், வெளிநாட்டுத் தொடர்களில் மட்டும் அணியின் பயிற்சியாளராகச் செயல்படுவார்' என்று பிசிசிஐ கூறியது. குறிப்பாக, பரத் அருண் என்பவரை பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிக்க ரவி சாஸ்திரி முயற்சிப்பதாகக் கூறப்பட்டது.

இந்நிலையில், பரத் அருணை இந்திய அணியின் பந்து வீச்சுப் பயிற்சியாளராக நியமிப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், சஞ்சை பங்கார் பந்து வீச்சு துணைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும், அடுத்த ஆண்டு உலகக் கோப்பை வரை இந்தப் பொறுப்பில் இருப்பர். இதனிடையே, டிராவிட் மற்றும் ஜாகீர்கான் ஆகியோரது நியமனத்துக்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கவில்லை என்றும் பிசிசிஐ கூறியுள்ளது. இதனால், பயிற்சியாளர்கள் நியமனத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. 

இதுகுறித்து ரவி சாஸ்திரி, "இருவரிடமும் பேசப்பட்டுள்ளது. இருவரும் அற்புதமான வீரர்கள். அவர்களின் பங்களிப்பு விலை மதிப்பற்றதாக இருக்கும்" என்று கூறியுள்ளார்.