வெளியிடப்பட்ட நேரம்: 20:49 (18/07/2017)

கடைசி தொடர்பு:20:49 (18/07/2017)

இந்திய அணியின் புது பெளலிங் கோச் பரத் அருண் பின்னணி என்ன?

பரத் அருண், இந்திய அணியின் பெளலிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறது பிசிசிஐ. இந்திய அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடாத பரத் அருண் எப்படி பயிற்சியாளர் ஆனார் தெரியுமா? அதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வது அவசியம்.

கடந்த 2013 மற்றும் 2014-ம் ஆண்டுகளில் தோனி தலைமையில் இந்திய அணி, வரிசையாக அயல் மண்ணில் படுதோல்வியைத் தழுவிவந்தது. டெஸ்ட் போட்டிகளில் தோனியின் தனிப்பட்ட பெர்ஃபாமன்ஸும் சுமாராகவே இருந்தது. இந்தக் காலகட்டத்தில் விராட் கோலி இந்தியாவுக்கு நம்பகமான வீரராக உருவெடுத்துக்கொண்டிருந்தார். தோனியைக் கேப்டன் பதவியிலிருந்து நீக்கவேண்டும் என கோரிக்கைகள் அதிகரித்துக்கொண்டிருந்த சமயத்தில், 2014-ம் ஆண்டு இறுதியில் தோனியின் தலைமையிலேயே இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சென்றது.

ஆஸ்திரேலியாவில் இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதாக இருந்தது. அந்தச் சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் மேனேஜராக ரவி சாஸ்திரி இருந்தார். 2014-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் மெல்பர்ன் டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு, திடீரென டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தே ஓய்வுபெற்றார் அப்போதைய கேப்டன் தோனி. ஆஸ்திரேலிய தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் தோனி காயம் காரணமாக விளையாடவில்லை. அந்தப் போட்டியில் விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். தோனியின் கேப்டன்சியில் அணி தள்ளாடிக்கொண்டிருந்த சமயத்தில் விராட் கோலி தலைமையில் இந்தியா புத்துணர்ச்சியுடன் ஆடியது. வெற்றிக்காக ஆக்ரோஷமாக ஆடித் தோற்றது. அப்போதே விராட் கோலியின் கேப்டன்சி பேசப்பட்டது.

தோனி ஓய்வுபெற்ற பிறகு, விராட் கோலி கேப்டன் பொறுப்பை ஏற்றார். பயிற்சியாளர் டங்கன் பிளெட்சர் ஓய்வுக்குப் பிறகு, மேலாளர் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் வரை விளையாடியது. விராட் கோலிக்கு, ரவி சாஸ்திரியை ரொம்பவே பிடித்திருந்தது. கேப்டன் முடிவுகளில் பெரிதாக தலையிடாமல் இருந்தார் சாஸ்திரி. 2016-ம் ஆண்டு மத்தியில் இந்திய அணியின் புதுப் பயிற்சியாளரைத்  தேர்ந்தெடுக்க, கங்குலி தலைமையில் தனிக்குழு அமைக்கப்பட்டது. எப்படியும் பயிற்சியாளராகி விடுவோம் என நம்பிக்கையோடு இருந்தார் ரவி சாஸ்திரி. 

விராட் கோலியின் இஷ்டத்துக்கு அணி சென்றுவிடக் கூடாது என்பதற்காக, திடீரென அனில் கும்ப்ளே பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். பயிற்சியாளர் தேர்வில் கங்குலிக்கும் ரவி சாஸ்திரிக்கும் உரசலிருந்தது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆரம்பத்தில் கும்ப்ளேவுடன் கோலிக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. நாள்கள் செல்லச் செல்ல பயிற்சியாளரின் ஆதிக்கம் அதிகரிப்பதை உணர்ந்த கோலி, கும்ப்ளேவுடன் மோதல் போக்கைக் கடைப்பிடித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா இங்கே சுற்றுப்பயணம் வந்தபோது இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. ஐ.பி.எல் நடந்தபோது இருவரும் அமைதி காத்தனர். சாம்பியன்ஸ் டிராபியில்  இருவருக்கும் இடையே விரிசல் அதிகமானது. கும்ப்ளே பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்தார். 

ரவி சாஸ்திரி

இந்தச் சூழ்நிலையில் சேவாக்கைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு விண்ணப்பிக்க பி.சி.சி.ஐ கேட்டுக்கொண்டதாகச் சொல்லப்பட்டது. பயிற்சியாளரைத் தேர்ந்தெடுக்கும் கடைசி நாளில் ரவி சாஸ்திரி விண்ணப்பம் போட்டார். கோலியின் விருப்பப்படி ரவி சாஸ்திரியே பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டார். கோலியுடன் நல்ல அலைவரிசையில் இருக்கும் ரவிக்கு, செக் வைக்கும் விதமாக அயல் மண்ணில் நடக்கும் போட்டிகளுக்கு பேட்டிங் ஆலோசகராக டிராவிட்டையும், பெளலிங் ஆலோசகராக ஜாகீர் கானையும் அறிவித்தது பி.சி.சி.ஐ. 

டிராவிட் மற்றும் ஜாகீர் கானை நியமித்ததில், ரவி சாஸ்திரிக்குப் பெரிதாக விருப்பமில்லை. இதையடுத்து  இன்று பி.சி.சி.ஐ புது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. இதில் கடந்த சில ஆண்டுகளாக பேட்டிங் பயிற்சியாளராகப் பணியாற்றி வரும் சஞ்சய் பங்கருக்கு பதவி உயர்வு கொடுக்கப்பட்டு, துணை பயிற்சியாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தலைமை பெளலிங் பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பபட்டுள்ளார். 

யார் அந்த பரத் அருண்?

54 வயதாகும் பரத் அருண், ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்தவர். ஆனால், கிரிக்கெட் ஆடியதெல்லாம் தமிழகத்துக்குத்தான். மித வேகப்பந்து வீச்சாளராக மிளிர்ந்த பரத் அருண், கடந்த 1987 - 88 சீசனில் ரஞ்சிக் கோப்பை வென்ற தமிழக அணியில் இடம்பெற்றிருந்தார். அந்த சீசனுக்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளாக தமிழகம் ரஞ்சியில் கோப்பை வெல்லவில்லை.

இந்திய அணிக்காக இவர் மொத்தமாகவே ஆறு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருக்கிறார். 1979-ம் ஆண்டில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார் பரத் அருண். 1986-87 சீசனில் இந்தியா, இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது இரண்டு  டெஸ்ட்  போட்டிகள் மற்றும் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அந்தத் தொடருக்குப் பிறகு அவருக்கு இந்திய அணியில் வாய்ப்புக் கிடைக்கவில்லை. எனினும், தமிழக அணிக்காக 1992-ம் ஆண்டு வரை விளையாடினார்.

பரத் அருண்

1992-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஓய்வில் இருந்த பரத், அதன் பிறகு பயிற்சியாளர் அவதாரம் எடுத்தார். 2002-ம் ஆண்டு ரஞ்சியில் தமிழக அணியின் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். தொடர்ந்து சொதப்பிக்கொண்டிருந்த தமிழக அணி, பரத்தின் பயிற்சியில் நல்ல முன்னேற்றம் கண்டது. இரண்டு முறை  ரஞ்சியில் இறுதிப்போட்டி வரை சென்றது. அதன் பிறகு தேசிய கிரிக்கெட் அகாடமியில் சில ஆண்டுகள் தலைமை பெளலிங் பயிற்சியாளராகப் பணியாற்றினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையில் இந்திய அணி கடந்த 2012-ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு பரத் பெளலிங் பயிற்சியாளராக இருந்தார். அதன் பிறகு ஐபிஎல்-லில் பஞ்சாப் அணிக்கு துணை பயிற்சியாளராகச் செயல்பட்டார். 2014-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை ரவி சாஸ்திரி மேலாளராக இருந்த இந்திய அணிக்கு, பரத் அருண்தான் பெளலிங் பயிற்சியாளர்.

பரத் அருண் - விராட் கோலி - ரவி சாஸ்திரி கூட்டணி அப்போதே உருவாகிவிட்டது. இதற்கிடையில் ஐபிஎல்-லில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும் பரத் அருண் பெளலிங் பயிற்சியாளராக இருந்தார். இதனால் கேப்டன் கோலிக்கும் பரத்துக்கும் இடையே நல்ல புரிதல் உருவானது. டி.என்.பி.எல்-லில் திருவள்ளூர் வீரன் அணிக்கும் இவர்தான் பயிற்சியாளராக இருக்கிறார். ஹைதராபாத் கிரிக்கெட் அசோசியேஷனிலும் கடந்த சீஸனில் பயிற்சியாளராகப் பணியாற்றிருக்கிறார். 

பயிற்சியாளராக நல்ல  அனுபவமுள்ள பரத் அருண், தற்போது ரவி சாஸ்திரி விருப்பப்படி இந்திய அணிக்கும் தலைமை பெளலிங் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை வரை இவர் பதவியில் நீடிப்பார் என பி.சி.சி.ஐ அறிவித்திருக்கிறது. கோலி- ரவி சாஸ்திரி - பரத் அருண் கூட்டணி, வரும் காலங்களில் அயல் மண்ணில் என்ன சாதிக்கப்போகிறது... எப்படி உலகக்கோப்பையை ஜெயிக்கப்போகிறது என்பதை, பொறுத்திருந்துப் பார்ப்போம்.

 


டிரெண்டிங் @ விகடன்