‘ரவி சாஸ்திரிகளும், கும்ப்ளேகளும் நிரந்தரமில்லை. ஆனால்...’ - ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி நியமிக்கப்பட்டதில் இருந்து, பரத் அருண் பெளலிங் பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டது வரை, அடுத்தடுத்து சர்ச்சைகள், சச்சரவுகள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, கேப்டன் விராட் கோலி மற்றும் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இருவரும் இன்று, நிருபர்களைச் சந்தித்தனர். இலங்கைக்கு சுற்றுப்பயணம் புறப்படும் முன் நடந்த இந்த சந்திப்பில் இருவரும் பல சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தனர்.

ரவி சாஸ்திரி

ரவி சாஸ்திரி பேசுகையில், ‘‘போதுமான அளவு மெச்சூரிட்டி அடைந்துவிட்டேன். எதையும் கொண்டுபோகப் போவதில்லை. ரவி சாஸ்திரிகளும், அனில் கும்ப்ளேகளும் வருவார்கள், போவார்கள்... நிரந்தரமில்லை. ஆனால், இந்திய அணிதான் என்றுமே நிரந்தரம்.’’ என்றார்.

பரத் அருண் தேர்வு குறித்த கேள்விக்கு, ‘‘பரத் அருண் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். பயிற்சியாளராக அவரது சாதனை பெரிது. என்னை விட இந்த வீரர்களை அவர் நன்கு அறிந்து வைத்துள்ளார். ஒன்றை மறந்து விடக் கூடாது, இவர் பயிற்சியில்தான் இந்திய அணி உலகக் கோப்பையில் 77 விக்கெட்டுகளை எடுத்தது. ஒருவேளை அருண், டெஸ்ட் கிரிக்கெட் வீரராக இருந்திருந்தால், அவரை நீங்கள் முன்னிறுத்தி இருப்பீர்கள்’’ என்றார்.

கேப்டன் என்ற முறையில் விராட் கோலி அளித்த பதில்: ‘‘ஏதேதோ பிரச்னைகள் சூழ்ந்து நிற்கின்றன. அதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. என் கையில் பேட் மட்டுமே உள்ளது. அதன் மூலம் மட்டுமே பதில் சொல்ல முடியும். நானும் ரவி சாஸ்திரியும் கடந்த சில ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டிருக்கிறோம். எனவே, அனுசரித்துப் போவதில் பிரச்னை இருக்காது. எது நடக்க வேண்டுமோ அது நடந்தே தீரும். எனக்கும் சில பொறுப்புகள் உள்ளன. அதைத் தவிர்த்து வேறு எந்த கூடுதல் நெருக்கடிகளையும் கண்டுகொள்ளப்போவதில்லை.’’ என்றார் கோலி. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!