``தொடர்ந்து யார்க்கர் போடுறவங்கதான் சிறந்த பெளலர்!" - மெக்ராத்

1987-ம் ஆண்டு சென்னையில் எம்.ஆர்.எஃப்  பேஸ் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது. 1992-ம் ஆண்டிலிருந்து இந்த பவுண்டேஷனும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அமைப்பும் கைகோத்துச் செயல்பட்டுவருகின்றன. இந்த இரண்டு அமைப்புகளும் கைகோத்துச் செயல்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, சென்னையில் வெள்ளிவிழாக் கொண்டாட்டம் நடைபெற்றது. எம்.ஆர்.எஃப் பவுண்டேஷனில் புகழ்பெற்ற  வேகப்பந்து வீச்சாளர் டென்னிஸ் லில்லியின் கீழ் பயிற்சிபெற்று உலக அரங்கில் மிளிர்ந்தவர்களில் ஜாகீர் கான், கிளென் மெக்ராத், பிரெட் லீ, மிச்செல் ஜான்சன் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். 

மெக்ராத்

பந்துவீச்சு கற்றுக்கொள்வதற்காக அப்போது இந்த பவுண்டேஷனுக்கு வந்திருந்த மெக்ராத், இன்றைக்கு அதே இடத்தில் இயக்குநராக அமர்ந்திருக்கிறார். `கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பந்து வீச்சாளர்' எனக் குறிப்பிடும்போது மெக்ராத்தின் பெயரை யாரும் விட்டுவிட முடியாது. அனைத்துவித மைதானங்களிலும் சிறப்பாகச் செயல்பட்டவர் அவர்.  சச்சின் டெண்டுல்கருக்குப் பலமுறை அபாரமாக பந்து வீசியவர் மெக்ராத்தான். இவர், பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பல்வேறு கேள்விகளுக்கு பொறுமையாகப் பதிலளித்தார். 

``வேகப்பந்துக்கு எப்போதுமே மவுசு அதிகம்தான். எல்லாவிதமான ஃபார்மெட்டிலும் வேகப்பந்து வீச்சாளர்கள் பங்கு அதிகமாகவே உள்ளது. ஒரு நல்ல அணிக்கு அடையாளம் நல்ல வேகப்பந்து துறை இருப்பதுதான். இந்தியா, இப்போது நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை அடையாளம் கண்டிருக்கிறது. பேசில் தம்பி அபாரமாகப் பந்து வீசுகிறார். வருங்காலத்தில் அவர்  ஜொலிப்பார்" என்றார். 

``ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளருக்கு, நல்ல லைனில் பந்துவீசுவதுதான் முக்கியமா?''

``இப்போது  நிறையபேர் நல்ல லைனில் பந்து வீசுகிறார்கள். நினைத்த இடத்தில் சரியான அளவில் பந்து வீசுவது மட்டும் முக்கியமல்ல. தொடர்ந்து  மிகச் சரியாக யார்க்கர் வீசத் தெரிந்திருக்க வேண்டும். ஆட்டத்தின்போக்கில் எப்போது யார்க்கர் வீச  வேண்டும் என்ற தெளிவும் இருக்க வேண்டும். அப்போதுதான் இந்தத் துறையில் நிறைய சாதிக்க முடியும்."

``நீங்கள் பெளலிங் கற்றுக்கொண்ட காலங்களிலும் இப்போது பெளலிங் கற்றுக்கொள்பவர்களுக்கும் தொழில்நுட்பம் எந்த வகையில் உதவுகிறது? 

``நாங்கள் பெளலிங் பயிற்சி செய்த காலங்களில் வீடியோ கேமராக்கள்தான் பயன்படுத்தப்படும். அப்போது பெளலிங் வீசுவதை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு Play, pause பட்டன்களை மட்டுமே பயன்படுத்திக்கொண்டிருந்தோம். இப்போது நிலைமையே வேறு. பந்து வீசும் ஒவ்வொரு கட்டத்திலும் திருத்தங்களை மேம்படுத்த உயர்தர தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. இவற்றைச் சரியாகப் பயன்படுத்தினால் பெளலர்கள் தங்களின் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்". 

``ஆனால், இவ்வளவு தொழில்நுட்பங்கள் வந்தாலும் வேகப்பந்து வீச்சாளர்கள் அடிக்கடி காயமடைவது தொடர்கிறதே? "

``காயத்திலிருந்து விரைவில் குணமடையவும், காயமடையாமல் தவிர்க்க என்ன மாதிரியான விஷயங்களைச் செய்யலாம் என்பதற்குத்தான் தொழில்நுட்பங்கள் உள்ளன. எனினும், வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைவதை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. அவர்கள் உடலை வருத்தித்தான் பந்து வீசுகிறார்கள். 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் ஒருவர், 145...150 என வேகத்தை அதிகரிக்க முயற்சிக்கும்போது, உடலில் அதிகம் அழுத்தம் தரவேண்டும். உடலை பயங்கரமாக வருத்திக்கொண்டு வீசும்போதுதான் அந்த வேகம் கிடைக்கிறது. அனைத்து பந்துகளையும் இப்படி வீச முற்படும்போது காயங்கள் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது" . 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!