மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா-ஆஸ்திரேலியா மோதல் | India meets Australia in second semi final of ICC women's world cup

வெளியிடப்பட்ட நேரம்: 07:48 (20/07/2017)

கடைசி தொடர்பு:10:55 (20/07/2017)

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்

மகளிர் உலகக் கோப்பைத் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.


எட்டு அணிகள் மோதும் மகளிர் உலகக் கோப்பைத் தொடர், இங்கிலாந்து நாட்டில் நடந்துவருகிறது. முதல் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்து, தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்துவருகின்றன. முதலாவது அரையிறுதியில் இங்கிலாந்து மகளிர் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றது.

இந்நிலையில், இன்று இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இங்கிலாந்தின் டெர்பி கவுண்டி மைதானத்தில் நடைபெறுகிறது. தர வரிசையில் முதலாவது இடத்திலிருக்கும் ஆஸ்திரேலியா, பலம் வாய்ந்தது. ஆனால், இந்திய மகளிர் அணியும் அதற்கு நிகரான பலத்துடன் மோதத் தயாராகி உள்ளது. முதல் இரண்டு போட்டியில் அதிரடி காட்டிய மந்தானா, அடுத்த ஐந்து போட்டிகளில் விரைவில் ஆட்டமிழந்தது பின்னடைவாக அமைந்தது. அதிரடியாக ஆடக்கூடிய மந்தானா, மீண்டும் ஃபார்முக்குத் திரும்பவேண்டியது அவசியம். இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார். முன்வரிசையில் சிறப்பான தொடக்கம் அமைந்து விட்டால், நடுவரிசையில் வேதா கிருஷ்ணமூர்த்தி, சுஷ்மா வெர்மா ஆகியோர் அதிரடியாக ஆடி, ரன்கள் சேர்ப்பதில் திறமையானவர்கள். 

இந்திய அணியின் பந்துவீச்சைப் பொறுத்தவரை, அனுபவம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தாலும் சுழற்பந்துவீச்சையே அணி பெரிதும் சார்ந்துள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களும் விக்கெட் வீழ்த்தினால், அது கூடுதல் பலமாக அமையும்.

ஆஸ்திரேலிய மகளிர் அணியைப் பொறுத்தவரை, இந்தத் தொடரில் பலமான அணியாக உள்ளது. இங்கிலாந்துடனான போட்டியில் மட்டும் தோல்வியடைந்த அந்த அணி, மற்ற அணிகளை எளிதில் வீழ்த்தியது. முதல் சுற்றில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய போட்டியில், ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 

அப்போது அடைந்த தோல்விக்குப் பதிலடி கொடுத்து, இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம். மொத்தத்தில், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும் அனுபவம் வாய்ந்த இந்திய அணியும் மோதும் அரையிறுதி என்பதால், இந்தப் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி இன்று மாலை மூன்று மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.