‛‛ ‛தமிழ் தலைவாஸ்’-னு பன்மையில் பெயர் வைத்தது மகிழ்ச்சி!'’ - ஒருமை கலாய்க்கும் கமல் | Tamil Thalaivas Kabadi team jersey launch press meet

வெளியிடப்பட்ட நேரம்: 22:40 (20/07/2017)

கடைசி தொடர்பு:22:40 (20/07/2017)

‛‛ ‛தமிழ் தலைவாஸ்’-னு பன்மையில் பெயர் வைத்தது மகிழ்ச்சி!'’ - ஒருமை கலாய்க்கும் கமல்

ப்ரோ கபடி லீக் ஐந்தாவது சீசன் ஜூலை 28-ம் தேதி ஹைதராபாத் நகரில் தொடங்குகிறது. முதல் போட்டியில் ‘தமிழ் தலைவாஸ்’, ‘தெலுங்கு டைட்டன்ஸ’ அணிகள் மோத உள்ளன. சச்சின் டெண்டுல்கர் சக உரிமையாளராக உள்ள ‘தமிழ் தலைவாஸ்’ அணியின் ஜெர்ஸி அறிமுகவிழா சென்னையில் இன்று நடந்தது. இதில், அணியின் தூதுவர் நடிகர் கமல்ஹாசன், அணியின் சக உரிமையாளர்கள் சச்சின், நிம்மகட பிரஸாத், தெலுங்கு நடிகர்கள் அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் அல்லு அரவிந்த் பங்கேற்றனர்.

அணியின் உரிமையாளர்கள் வரிசையாக வந்து மேடையில் அமர, ‘மாஸ் என்ட்ரி’ கொடுத்த கமல் விருட்டென, தன் இருக்கையில் அமர்ந்தார். உடனே ‘நீயா நானா’ கோபிநாத், ‘என்ன சார் நீங்க பொசுக்குன்னு உக்கார்ந்துட்டிங்க. எதாவது பேசுவீங்கன்னு எதிர்பார்த்தோம்’ என லீடு கொடுக்க, அடுத்து ‘தமிழ் தலைவாஸ்’ அணிக்கு வாழ்த்து சொன்னார் கமல்.

தமிழ் தலைவாஸ் - கமல்

‘‘பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே தோன்றிய விளையாட்டு. தமிழகத்தில் தோன்றியது என்ற கூற்றும் உண்டு. எங்கோ ஒரு ஐரோப்பிய தீவில் கண்டுபிடிக்கப்பட்ட விளையாட்டு உலகெங்கும் பரவ முடியும் என்றால், நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக  நாம் ஆடி வந்த விளையாட்டு,தேசிய எல்லைகளை மட்டுமல்ல, உலக எல்லைகளைக் கடந்து செல்லும் என்ற நம்பிக்கை கொண்டவர்களில் நானும் ஒருவன். அதனால்தான், இந்த அணியின் உரிமையாளர் என்னை அணுகியபோது உடனே சம்மதித்து விட்டேன். இதை ஒரு பெருமையாகவும், கடமையாகவும் கருதுகிறேன். ‘தமிழ் தலைவாஸ்’ வெற்றி பெற வேண்டும். மீண்டும் அவர்கள் இங்கு நடக்கும் இறுதி ஆட்டத்தில் பங்கேற்க வேண்டும் என வாழ்த்துகிறேன்’’ என்றார் கமல்.

தமிழ் தலைவாஸ் - கமல்

‘தமிழ் தலைவாஸ்’ அணியின் பயிற்சியாளர் பாஸ்கரன் உள்பட ஒட்டுமொத்த அணியினரும் சீருடையில் தோன்றினர். பின், பிரபலங்கள் அணியின் ஜெர்ஸியை அறிமுகப்படுத்தி வைத்தனர். 

கமல் பேசியது:

பரமக்குடியில இருந்து ரெண்டரை வயசுல கிளம்பி வந்துட்டேன். அதனால அங்க கபடி விளையாடுனது இல்லை. சினிமாவுக்கு வந்தபிறகு ஸ்டன்ட் மாஸ்டர்ஸ் கூட கபடி விளையாடி இருக்கேன். அப்போ ஒருமுறை அடிபட்டிருச்சு. அதுல இருந்து கபடி விளையாட என்னை ban பண்ணி வச்சிருந்தாங்க. கடைசியில பிராண்ட் அம்பாசிடரா வந்து உக்காந்திருக்கேன். ரொம்ப சந்தோஷமா இருக்கு. ‘தமிழ் தலைவாஸ்’-னு பன்மையில் பெயர் வைத்தது மகிழ்ச்சி. இப்பலாம் ஒருமையில் பேசுறது ஃபேஷன் ஆயிடுச்சு. (பலத்த கைதட்டல்). 

கமல்: எதாவது தப்பா சொல்லிட்டேனா?

கோபிநாத்: சரியா சொல்லிட்டிங்க. அதான் பிரச்னை.

கமல்: ‘தலைவாஸ்’-னு சொல்லி இருக்காங்க. Which means எல்லோரும் இந்நாட்டு மன்னரே என்பதே.

கமல்

கோபி: ஒரு விளையாட்டு என்பது வெறுமனே விளையாட்டாக இருக்கக் கூடிய விஷயமாகத் தெரியலை. எல்லா விளையாட்டுக்குப் பின்னாலும் ஒரு சமூக, உளவியல் ரீதியான காரணம் இருக்கலாம். கபடி என்பது தமிழ் பண்பாட்டோடு தொடர்புடைய விளையாட்டு. எல்லாரும் ‘கபடி எங்க கேம்ப்பா...’-ன்னு சண்டைக்கு வருவாங்க. ஆனா, பெருசா பிரபலப்படுத்தல. இப்பதான் அதற்கான முயற்சி எடுத்திருக்காங்க. பெரியவங்களாம் சேர்ந்திருக்காங்க. சச்சின் போன்றவங்க உள்ள வந்திருக்காங்க. நீங்களாம் உள்ளே வந்திருக்கிங்க. என்ன உளவியல் இருக்கு? இது வெறும் விளையாட்டில்லைன்னு மட்டும் தோணுது?

கமல்: தமிழ் கலாசாரத்தில் உள்ள, இந்திய கலாசாரத்தில் உள்ள பழைய வீர விளையாட்டுக்கள் எல்லாமே, அமைதி காலத்தில் போரை மறந்து விடாமல் இருப்பதற்காக, நினைவுபடுத்துவதற்காகத்தான்.. அலகு குத்துதல் கூட அதுதான்னு நான் நம்பிட்டு இருக்கேன். ஏனென்றால், first blood பார்த்து பயப்படுறதுன்றது ஒரு குணாதீசயம் ஆயிடக் கூடாதுன்றதுக்காகத்தான் இந்த ஏற்பாடு. எப்பவுமே மோதுதலும், ஏறு தழுவுதலையும் நம்ம கத்துக் கொடுத்துட்டே இருக்கணும். ஒலிம்பிக்ஸ் வந்ததே அதுக்காகத்தான்னு சொல்லுவாங்க. அதேமாதிரித்தான் இதுவும்.

எனக்கு என்ன பெருமைன்னா... இந்திய விளையாட்டுகளில் மூத்த அண்ணனாகத் திகழும் சச்சின், இதைக் கையில் எடுத்திருப்பது நல்ல விஷயம். இது அவருடைய பெருந்தன்மை என்பதை விட கபடிக்குக் கிடைத்த பெருமையாக நினைக்கிறேன். இது பாராட்டுக்குரியது. நான் விளையாடுவதற்கு நேரம் இல்லாமல் சினிமாவுக்கு வந்துட்டேன். கபடி, சடுகுடு... என பல பெயர்களில் நாடெங்கும் இருக்கக்கூடிய விளையாட்டை நாம் மறந்தது போல tragedy வேறெதுவும் இருக்க முடியாது. இப்போது இதை இவர்கள் கையில் எடுத்ததில் பெரும் மகிழ்ச்சி. இதை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கேன். இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டதற்கு சந்தோஷப்படுகிறேன். 

கோபிநாத்: நீங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் சிக்ஸர்கள் விளாசி, ட்ரைவ் அடித்துப் பார்த்திருக்கிறோம். கிரிக்கெட்டரான நீங்கள் கபடி அணிக்கு உரிமையாளராக என்ன காரணம்.  எமோஷனல் கனெக்ட் என்ன?

கமல் - சச்சின்

சச்சின்: ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் கபடி விளையாடி இருப்போம். மூன்று ஆண்டுகளுக்கு முன், மும்பையில் நடந்த ப்ரோ கபடி லீக் போட்டியைப் பார்த்தேன். போட்டி நடந்த அரங்கில் ஒரு வித எனர்ஜி, வைப்ரேஷன் இருப்பதை உணர்ந்தேன். அது பிரமிப்பாக இருந்தது. அதனால்தான், இந்த அணியைத் தேர்ந்தெடுத்தேன். இங்கே கபடியை மட்டுமே ஆதரிக்க வரவில்லை. இந்தியாவில் அனைத்து விளையாட்டுகளையும் பிரபலப்படுத்த வேண்டும். இந்திய மக்கள்தொகையில் பெரும்பான்மையோர் இளைஞர்கள். அதேநேரத்தில் உடல் பருமனைக் கணக்கில் எடுத்தால் நாம் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம். அதனால் எல்லோரும் ஏதாவது ஒரு விளையாட்டைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம். ஏனெனில், உடல் நலக்குறைவுடன் இருக்கும் இளம் தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.  அதனால்தான் நான் இந்த ஸ்போர்ட்ஸை ஆதரிக்கிறேன். 

கோபி: Legend will be always legend. உலகில் உள்ள எல்லா விளையாட்டு வீரர்களையும் சேர்த்து, ஒரு கபடி கனவு அணி உருவாக்க வேண்டும் எனில், நீங்கள் யாரையெல்லாம் தேர்ந்தெடுப்பீர்கள்?

சச்சின்: தமிழ் தலைவாஸ் அணிதான், என் கனவு அணி. இல்லையா? ஓகே. இந்த அணி அல்லாத ஒரு அணியைத் தேர்வு செய்யவேண்டும் அல்லவா? என் கனவு அணியில் டிஃபெண்டராக எம்.எஸ். தோனியைத் (பலத்த கைதட்டல்) தேர்வு செய்கிறேன். ரெய்டராக சங்கர் மகாதேவனைத் தேர்வு செய்வேன். வேறு யாரும் அவருக்கு நிகரில்லை. ஏனெனில் ரெய்டர் என்பவர் மூச்சை இழுத்துப் பாட வேண்டும் இல்லையா?

sachin Tendulkar

கோபி: நீங்கள் ஸ்ட்ரிக்ட் செலக்ஷன் ஆஃபீஸர் என்பது தெரிகிறது. ஓகே. உங்கள் எதிரணி யார்?

சச்சின்: ஒரு கட்டத்துக்கு மேல்... எதிரணி யார் என்பது முக்கியேமே இல்லை. நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் முக்கியம். எங்கள் அணிக்கு நான் சொல்லும் சிம்ப்பிள் மேசெஜ் இதுதான். களமிறங்குகள், ரசிகர்களின் மனதை வெல்லுங்கள். அவ்வளவுதான். இங்கு கபடிக்கான ஆர்வம் இருப்பதைப் பார்க்கிறேன். தொடர்ந்து இந்த அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டுகிறேன்.

கோபிநாத்: ‘chak de india’ போல கபடியை மையமாக வைத்து ஒரு படம் எடுத்திங்கன்னா, அந்த லீட் கோச் ரோல், யார் பண்ணா நல்லா இருக்கும்னு நினைக்கிறிங்க?

அல்லு அர்ஜுன்:  நானே பண்றேன்... (சிரிப்பலை)

கோபி: ‘தமிழ் தலைவாஸ்’... இந்த டைட்டில் எப்படி செலக்ட் பண்ணிங்க? 

அல்லு அர்ஜுன்: கமல் சார் அம்பாஸிடரா வர்றார்னு தெரிஞ்சதும், நல்ல டைட்டில் சூஸ் பண்ணனும்னு நினைச்சேன். அதான், இந்த தலைப்பு.

உங்க ஃபிலிம் இண்டஸ்ட்ரியி இருக்கிறவங்களை வச்சு ஒரு கபடி டீம் செட் பண்ணனும்னா, யாரெல்லாம் இருப்பாங்க.

அல்லு அர்ஜுன்: கமல் சார்தான் அந்த டீம் கேப்டன்.

‘உலகத்துல எந்த மேட்ச்னாலும் சரி,  யார் யாரோட விளையாடினாலும்  சரி, எப்பவுமே சச்சின் இருக்கிற டீமுக்குத்தான் நம்ம சப்போர்ட். அந்த விதத்துல, ஒட்டுமொத்த இந்தியாவும் ‛தமிழ் தலைவாஸ்’ டீமுக்கு சப்போர்ட் பண்ணும்னு நம்புவோம்’ என முடித்தார் கோபிநாத்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close