உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா... மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்!

மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி

டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அதிக ரன்களைக் குவிக்கும் எண்ணத்தோடு முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா மற்றும் பூனம் ரவுத் முறையே 6 மற்றும் 14 ரன்கள் எடுத்தனர். பின்னர், களத்துக்கு வந்த கேப்டன் மித்தாலி ராஜ், பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மித்தாலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்மன்ப்ரீத் கௌர், களத்தில் இறங்கியது முதலே பந்துகளை விளாசினார். எதிர்பாராத விதமாக, மித்தாலி 36 ரன்கள் எடுத்திருந்த போது அவுட் ஆனார். ஆனாலும் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை மேற்கொண்ட கௌர், 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். மகளிர் கிரிக்கெட்டில் ஒரு தனிப்பட்ட வீராங்கனை அடித்த அதிகபட்ச ஸ்கோர் இதுதான். மழை காரணமாக 42 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. இதையடுத்து 42-வது ஓவர் முடிவில், 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 281 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை எட்டியது இந்தியா.

இதையடுத்து, 282 ரன்கள் சேஸ் செய்யும் முனைப்போடு தனது ஆட்டத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா. மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த எலிஸ் பெர்ரி மற்றும் எல்லிஸ் வில்லனி ஆகியோர் ஆஸ்திரேலிய தரப்பில் முறையே 38 மற்றும் 75 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தனர். 9 விக்கெட்டுகளை 200 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே இழந்தது ஆஸ்திரேலிய அணி. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த அலெக்ஸ் பிளாக்வெல் மற்றும் கிறிஸ்டன் பீம்ஸ் ஆகியோர் அதிரடி ரன் குவிப்பில் இறங்கினர். பிளாக்வெல், 56 பந்துகளில் 90 ரன்கள் கடந்து தொடர்ந்து ஆக்ரோஷம் காட்டினார். இந்தியாவின் வெற்றி பறிபோகுமோ என்று நினைத்த நிலையில், பிளாக்வெல் தனது விக்கெட்டை இழந்தார். இதையடுத்து, 40.1 ஓவர்கள் முடிவில் 245 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம், இந்திய அணி ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்தியா முன்னேறுவது இதுவே இரண்டாவது முறையாகும். இம்மாதம் 23-ம் மாதம் தேதி நடைபெற விருக்கும் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

கோப்பையுடன் வாங்க கேர்ள்ஸ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!