மித்தாலி ராஜிடம் கற்றுக்கொள்ள வேண்டிய சுயமரியாதை பாடம்! #MithaliRaj

மித்தாலி

விளையாட்டு என்றாலே கிரிக்கெட் என்றாகி விட்டது நமது நாட்டில். அதிலும் ஆண்கள் கிரிக்கெட் அணி விளையாடும் போட்டிகள் பிரபலமாகப் பேசப்படுகின்றன.  நமது ஊர்த் தெருக்களில் பார்த்தாலும் ஆண் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுவதைத்தான் பார்க்க முடிகிறது. இதுபோன்ற சூழலில், பல தடைகளைத் தகர்த்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாகியிருப்பவர் மித்தாலி ராஜ்.

கிரிக்கெட் , நடனம் இரண்டையும் தன் இருகண்களாக நினைத்து கற்ற மித்தாலி ராஜ், ஒரு கட்டத்தில் இரண்டில் ஒன்றைத் துறக்க வேண்டியிருந்தது. மனதைத் திடப்படுத்திக்கொண்டு நடனத்துக்கு குட் பை சொன்னார். அந்த உறுதியான முடிவுதான் இன்று, உலக அளவில் பெண்கள் கிரிக்கெட்டில் அதிக ரன்களைக் குவித்தவர்  மற்றும் 6,000 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் பெருமையையும் பெற்றுத்தந்துள்ளது.

பதினேழாவது வயதில் இந்திய அணியில் நுழைந்த மித்தாலி ராஜ் தனது 19-வது வயதில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இரட்டை சதம் அடித்து, அதற்கு முன்னிருந்த சாதனையைக் கடந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஆறு சதங்களை அதிரடியாக அடித்துள்ளார். கிரிக்கெட் விமர்சகர்கள் மித்தாலியைப் புகழ்ந்து எழுதி, குவிக்கின்றனர்.

இன்று இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைச் சிறப்பாக வழிநடத்தி, இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் இறுதிப் போட்டியில் நுழைய வைத்துவிட்டார்.  இந்த வெற்றி இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மித்தாலி ராஜ்

ஆண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்குக் கிடைக்கும் புகழ் பெண்கள் கிரிக்கெட்டுக்குக் கிடைப்பதில்லை. இந்த வருத்தம் மித்தாலியின் மனதில் எப்போதும் உண்டு. ஆண்கள் கிரிக்கெட் போட்டியை ஒளிப்பரப்பவதற்குத் தொலைக்காட்சிகள் காட்டும் ஆர்வம் பெண்கள் கிரிக்கெட் போட்டிகளுக்குக் காட்டுவதில்லை என்பதைத் தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் ஒரு பேட்டியின்போது மிதாலி ராஜிடம் , 'உங்களுக்குப் பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார்?' எனக் கேட்டபோது. 'உங்களுக்குப் பிடித்த பெண் கிரிக்கெட் வீரர் யார் என, ஆண் கிரிக்கெட் வீரரிடம் கேட்டிருக்கிறீர்களா?' எனப் பதில் கேள்விக் கேட்டார். மித்தாலி இப்படியான பதிலைக் கூறியது பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது.

மித்தாலியின் இந்தப் பதில் ஆண் கிரிக்கெட் வீரர்களைக் குறை சொல்வதாகப் பார்க்காமல், அவர்களுக்கு இணையாக உழைப்பைக் கொடுத்து விளையாடும் பெண்களுக்கு உரிய மரியாதைக் கிடைப்பதில்லை எனும் ஆதங்கத்தின் வெளிப்பாடாகவே நாம் பார்க்க வேண்டும். மேலும், எந்த இடத்திலும் பெண்களின் சுய மரியாதையை இழந்துவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் மித்தாலி உணர்த்துகிறார்.

மித்தாலியின் இந்தப் பதில், ஒரு துறையில் அடிமட்டத்திலிருந்து போராடி முன்னுக்கு வந்த ஒவ்வொரு பெண்ணுக்கும் பொருந்தும். ஒரே மாதிரியான உழைப்பு, ஒரே மாதிரியான பயிற்சி என இருந்தபோதும் அது வெளிப்படுத்தும்போது கிடைக்கும் பாராட்டில் ஆண், பெண் பேதம் பார்க்கப்படுவதில் இருக்கும் உண்மையான வருத்தத்திலிருந்து வெளிவந்தது.

இந்தப் பேட்டி வந்த சில நாள்களில்தான் மித்தாலி அதிக ரன்களைக் குவித்து உலகச் சாதனை புரிந்தார். இந்தச் சாதனையை ஆண்கள் கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ்.லெட்சுமணன், கவுதம் கம்பீர், இளம் வீரர் ரஹானே ஆகியோர் பாராட்டியுள்ளனர். அந்தப் பாராட்டை மகிழ்ச்சியுடன் ஏற்று நன்றி கூறியிருக்கிறார் மிதாலி ராஜ்.

விளையாட்டில் மட்டுமல்ல, எந்தத் துறையிலும் ஆண், பெண் பேதமின்றிப் பார்க்கப்படும் காலம் தொடங்கட்டும். அப்போதே பல மித்தாலிகளின் திறமைகள் வெளிப்படும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!