வெளியிடப்பட்ட நேரம்: 15:29 (21/07/2017)

கடைசி தொடர்பு:15:29 (21/07/2017)

சேவாக் ரோல் மாடலாம்..! ஆஸ்திரேலியாவுக்கு கிலி கொடுத்த ஹர்மன்ப்ரீத் கவுர்!

இவரை ‘பெண் தோனி’  எனச் சொல்லலாம். அப்படியானால், தோனியைப் பார்த்து ஆண் ஹர்மன்ப்ரீத் கவுர் எனச் சொல்லிவிடுவீர்களா எனக் குதர்க்கமாகக் கேட்காதீர்கள். தோனியைப் போலவே நிலைமைக்கு தகுந்தாற்போல ஆடக்கூடிய திறன் படைத்த வீராங்கனை என்பதற்காகவே அப்படிச் சொல்கிறேன். அவரை தோனியுடன் ஒப்பிடவில்லை. சரி விஷயத்துக்கு வருவோம்.

ஹர்மன்ப்ரீத் கவுர்

கடந்த உலகக்கோப்பையில் முதல் ஆறு இடங்களுக்குள்கூட இந்திய அணியால் வரமுடியவில்லை. விளைவு, இந்திய அணி, தரவரிசையில் கடும் பின்னடைவைச் சந்தித்தது. 2017-ம் ஆண்டு உலகக்கோப்பையை விளையாடுவதற்கு இந்தியா தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும் என்ற நிலை. கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உலகக்கோப்பைத் தகுதிச் சுற்றுத் தொடரில் தென் ஆப்பிரிக்காவும் இந்தியாவும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தன. இந்திய பெண்கள் அணிக்கு சேஸிங் என்பது எப்போதுமே அலர்ஜிதான். இறுதிப்போட்டியில் இந்தியா 245 ரன்கள் எனும் இலக்கைத் துரத்தியது. கடைசி ஓவரில் ஆறு பந்துகளில் ஒன்பது ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலைமை. கையில் இருந்ததோ இரண்டே விக்கெட்டுகள். டென்ஷன் எகிறியது. களத்தில் ஹர்மன்ப்ரீத் இருந்தார். அவர் மீது சிறிய நம்பிக்கை இருந்தது. முதல் பந்தைச் சந்தித்த ஹர்மன்ப்ரீத் இரண்டு ரன்கள் எடுக்க ஓடினார். அவர் சரியாக ஓடிவிட்டார். மறுமுனையில் இருந்த வீராங்கனை ரன்அவுட் ஆனார். ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இந்திய வீராங்கனைகளிடம் பதற்றம் கூடியது. 

இப்போது ஐந்தே பந்தில் எட்டு ரன்கள் எடுக்க வேண்டும். கையில் இருப்பதோ ஒரே ஒரு விக்கெட். பேட்டிங் முனையில் கவுர் இருந்தார். தென் ஆப்பிரிக்க வீராங்கனை லாட்சாலோ யார்க்கர்களில் கிடுக்கிப்பிடி போட்டார். இரண்டாவது பந்து... மூன்றாவது பந்து... நான்காவது பந்து... டாட் பாலாக அமைந்தன. இரண்டே பந்தில் எட்டு ரன்கள் எடுக்க வேண்டும். வெற்றி வாய்ப்பு சரமாரியாக மங்கியது. ஆனால், ஹர்மன்ப்ரீத் கவுர்  நம்பிக்கையோடு இருந்தார். ஐந்தாவது பந்தை லாட்சாலோ அற்புதமான ஒரு ஸ்லோபாலாக வீசினார்.  மிகச்சரியாக கணித்த கவுர், இறங்கி வந்து டீப் மிட்விக்கெட் திசையில் ஒரு சிக்ஸர் வைத்தார். அந்த சிக்ஸரை யாராலும் நம்பவே முடியவில்லை. ஒரே பந்தில் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு தாறுமாறாக உயர்ந்தது. கடைசிப் பந்தை யார்க்கராக வீச முயற்சித்தார் லாட்சாலோ. கிரீஸைவிட்டு இறங்கிவந்த  ஹர்மன்ப்ரீத், அதை புல்டாஸ் பந்துபோல டீல் செய்து லாங்ஆனில் அடித்தார். சுறுசுறுப்பாக இரண்டு ரன்கள் ஓடினார். ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று கம்பீரமாக உலகக்கோப்பைக்குள் காலடி எடுத்து வைத்தது இந்திய அணி. 

ஆஸ்திரேலியாவின் வுமன்ஸ் பிக்பாஷ் லீக் தொடருக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண்மணி ஹர்மன்ப்ரீத் தான். சிட்னி தண்டர்ஸ் அணிக்காக விளையாடினார். பிளாக்வெல் தலைமையின் கீழ் விளையாடிய ஹர்மன்ப்ரீத், முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார். பொதுவாக இந்திய வீராங்கனைகள் பந்தைத் தூக்கி அடிக்க மாட்டார்கள். எப்போதாவதுதான் பந்துகள் சிக்ஸருக்குச் செல்லும். தரையைத் தடவிக்கொண்டே இருப்பார்கள். இதனால்தான் இந்திய அணி வீராங்கனைகளுக்கு டி20  ஃபார்மெட் கைகூடவில்லை. ஆனால், ஹர்மன்ப்ரீத் கவுர் வெளுத்துக்கட்டும் பேட்ஸ்மேன் என்பதால் சிட்னி அணி கொத்திக்கொண்டுபோனது. 

மெல்பர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய முதல் போட்டியிலேயே 28 பந்துகளில் 47 ரன்கள் எடுத்து அசரவைத்தார்.

கடந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது 2-1 என டி20 தொடரை வென்று வரலாற்றுச் சாதனை படைத்தது. 2016-ம் ஆண்டு ஜனவரியில் இந்தியா, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது மிதாலி அணி சம்மட்டி அடி வாங்கி வாஷ்அவுட் ஆகும் என்றே எல்லோரும் கணித்திருந்தார்கள். முதலில் டி20 தொடர் ஆரம்பித்தது. முதல் போட்டியில் 141 ரன்கள் இலக்கு வைத்தது ஆஸ்திரேலியா. இந்தியா எளிதாக இலக்கை கடந்தது. வெற்றிக்கு முக்கியக் காரணம் ஹர்மன்ப்ரீத்தின் தெறி இன்னிங்ஸ். மிதாலியும் ஸ்மிருதியும் அவுட் ஆன பிறகு களமிறங்கிய ஹர்மன் 31 பந்துகளில் ஆறு பவுண்டரிகள் ஒரு சிக்ஸர் விளாசி 46 ரன்கள் எடுத்தார். அந்த வெற்றி இந்தியாவுக்குத் தன்னம்பிக்கையை ஊட்ட, தொடரை வென்று சாதனை படைத்தது மிதாலி அணி.  இதோ இப்போது மீண்டும் ஒரு மாஸ்டர் க்ளாஸ் இன்னிங்ஸ். 

ஹர்மன்ப்ரீத் கவுர்

28 வயது பஞ்சாபிப் பொண்ணுக்கு, சேவாக்தான் ரோல்மாடல். இவர் மேட்ச் பார்க்க ஆரம்பித்ததே சேவாக்குக்காகத்தான். சேவாக் போல விளையாட வேண்டும் என்ற ஆசையின் காரணமாக, கிரிக்கெட் பக்கம் வந்திருக்கிறார். “எந்த ஓவர் எந்தச் சூழ்நிலை என்றெல்லாம் கருத்தில்கொள்ளாதே, பந்து சரியாக பேட்டுக்கு வருகிறதா? அடித்து நொறுக்கு" எனும் சேவாக் பாணியின் ஆட்டம்தான் தனக்குப் பிடிக்கும் என ஒவ்வொரு பேட்டியிலும் சொல்கிறார். `டி20 ஸ்பெஷலிஸ்ட்' எனப் பெயரெடுத்திருக்கும் ஹர்மன்ப்ரீத், ஒருநாள் ஃபார்மெட்டில் நல்ல வீரர். அக்ரசிவ் பிளேயர்.

மிடில் ஆர்டரில் களமிறங்கும் ஹர்மன், அதிரடியாகவும் ஆடுவார்; தேவைப்பட்டால் அமைதியாகவும் ஆடுவார். பேட்டிங் ஆல்ரவுண்டராக மிளிர்வதால் அணியில் தவிர்க்கவே முடியாத வீராங்கனையாக உருவெடுத்திருக்கிறார். ஹர்மன் ப்ரீத், ஆரம்பத்தில் மித வேகப்பந்து வீச்சாளராக  இருந்தார். பின்னாளில் ஸ்பின் பௌலராக மாறினார். இடையில் சில காலம் இந்திய அணிக்குத் தலைமை தாங்கியவர், இப்போது மிதாலியின் குழுவில் விளையாடிவருகிறார். மித்தாலியின் ஓய்வுக்குப் பிறகு ஹர்மன்ப்ரீத் தான் இந்திய அணிக்கு கேப்டன். 

நேற்றைய போட்டியில் ஹர்மன்ப்ரீத் அடித்த இன்னிங்ஸ், பெண்கள் கிரிக்கெட் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்படும். அரை இறுதியில் ஆஸ்திரேலியாவை வெற்றிகொள்வது என்பது, கிட்டத்தட்ட உலகக்கோப்பையை வெல்வதற்கு இணையான நிகழ்வு. அதை வெற்றிகரமாகச் சாதித்திருக்கிறது மிதாலி அணி. டெர்பி மைதானம் சற்றே இந்திய ஆடுகளங்களைப் போன்றே இருக்கும். பந்துகள் எகிறாது. சற்றே தாமதமாகவே பந்து பேட்டுக்கு வரும். நேற்று மழைவேறு பெய்த நிலையில் ஆட்டம் 42 ஓவர்கள்கொண்டதாக அறிவித்தார்கள் நடுவர்கள். 

ஆஸ்திரேலியா

225 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக இருக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தது. முதல் ஓவரிலேயே அதிரடி நாயகி ஸ்மிருதி அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். பூனம் ராவுத்தும் சிக்ஸர் அடிக்க ஆசைப்பட்டு விக்கெட்டை இழந்தார். அப்போது இந்திய அணியின் ஸ்கோர் 10 ஓவர்களில் 36 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகள். மிதாலி ராஜும் ஹர்மன்ப்ரீத் கவுரும் இணைந்து பொறுமையாக விளையாடினார்கள். விக்கெட் விழுந்துவிடுமே என்ற அச்சத்தில் கூடுதல் பொறுப்போடு ஆடினார் கேப்டன் மிதாலி. 14-வது ஓவரில்தான் இந்தியா 50 ரன்களைத் தொட்டது. 20 ஓவர்கள் முடிவில் 70 ரன்களைத்தான் எடுத்திருந்தது. இந்தியா 175 ரன்கள் எடுத்தாலே பெரிய விஷயமாக இருக்கும் என நினைத்த நிலையில், ஹர்மன் அவ்வப்போது பெளண்டரிகளை விரட்டினார்.  25-வது ஓவரில் இந்தியா நூறு ரன்களைக் கடந்தது. இந்த இரண்டு பேரும் கடைசிவரை களத்தில் இருந்தால் இருநூறு ரன்களைக் கடந்தவிட வாய்ப்பிருப்பதுபோலத் தோன்றியது. ஆனால், அடுத்த பந்திலேயே மிதாலி போல்ட் ஆனார். ஆஸ்திரேலிய வீராங்கனைகள் மகிழ்ச்சியில் துள்ளினார்கள். 

ஹர்மன்ப்ரீத் கவுர்

இந்திய அணிக்கு ஹர்மன்ப்ரீத் கவுரோடு வேதா கிருஷ்ணமூர்த்தி மட்டுமே நல்ல பேட்ஸ்வுமன். தீப்தி ஆல்ரவுண்டர். சுஷா சொதப்பல் பேட்ஸ்மேன். இந்நிலையில் தீப்தியைக் களமிறக்கியது இந்திய அணி. ஹர்மன்ப்ரீத்தம் தீப்தியும் இணைந்து பொறுமையாகவே ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோது ஹர்மன்ப்ரீத் அதிரடி மோடுக்கு மாறினார். கிரிஸ்டன் பீம்ஸ் வீசிய 27-வது ஓவரில் ஒரு சிக்ஸ்ர், ஒரு பெளண்டரி விளாசி 50 ரன்களைக் கடந்தார். 

64 பந்துகளில் அரைசதம் அடித்திருந்த ஹர்மன்ப்ரீத் கவுர் அதன் பிறகு தடதடவென அடுத்த கியரைத் தட்டி வேகம் கூட்டினார். 36 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 192 ரன்கள் எடுத்திருந்தது. அதாவது, பத்து ஓவர்களில் 90 ரன்கள் கிடைத்தது. 64 பந்தில் அரைசதம் அடித்தவர் 90 பந்துகளில் சதம் அடித்தார். அதாவது 26 பந்துகளில் இரண்டாவது ஐம்பது ரன்களை எடுத்திருந்தார். இந்திய அணி 250 ரன்களைக்கூடத் தொடும் வாய்ப்பிருப்பதாகக் கணிப்பு இருந்தது. ஆனால், `அதுக்கும் மேல' டார்கெட் வைக்க ஹர்மன்ப்ரீத் திட்டமிட்டிருக்கக்கூடும்.

37-வது ஓவரை கார்டனர் வீசினார். இதற்கு முன்பாக ஏழு ஓவர்களில் அவர் 20 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். இந்த ஓவரை பிரித்து மேய்ந்தார் ஹர்மன். இரண்டு சிக்ஸர்கள் இரண்டு பெளண்டரிகள் உள்பட அந்த ஓவரில் அவர் சந்தித்த ஐந்து பந்துகளில் மட்டும் 22 ரன்கள் எடுத்தார் ஹர்மன். ஆஸ்திரேலிய வீராங்கனைகள் திகைத்தனர். 38-வது ஓவரில் இரண்டு பெளண்டரிகள் வைத்தார் ஹர்மன். 39 ஓவரில் மீண்டும் ருத்ரதாண்டவம் ஆடினார். விலானி வீசிய அந்த ஓவரில் ஒரு சிக்ஸர், இரண்டு பெளண்டரி உள்பட 19 ரன்கள் வந்தன. 

107 பந்துகளில் 150 ரன்களைக் கடந்தார் ஹர்மன். அதாவது மூன்றாவது 50 ரன்களை எடுக்க அவர் எடுத்துக்கொண்டது வெறும் 17 பந்துகள். 

41-வது ஓவரை  ஜோன்னாஸன் வீசினார். இரண்டு முரட்டு சிக்ஸர்கள் விளாசினார் ஹர்மன். அந்த ஓவரில் 19 ரன்கள் வந்தன. கடைசி ஓவரில் ஹர்மன் ஒரு பெளண்டரி, வேதா ஒரு பெளண்டரி அடிக்க 13  ரன்கள் வந்தது. 115 பந்துகளில் 171 ரன்கள் எடுத்தது நாட் அவுட் பேட்ஸ்வுமனாக பலத்த கரகோஷங்களுக்கு மத்தியில் பெவிலியன் திரும்பினார் ஹர்மன்ப்ரீத் கவுர்.  கடைசி 25 பந்துகளில் மட்டும் அவர் 71 ரன்கள் எடுத்து குறிப்பிடத்தக்கது. 

பிளாக்வெல்

ஹர்மன்ப்ரீத்தின் மாஸ்டர் க்ளாஸ் இன்னிங்ஸால் 42 ஓவர்களில் 281 ரன்களைக் குவித்தது. நேற்றைய போட்டியை இப்போது நினைத்தாலும் இந்தியாவா இப்படி விளையாடியது! என வியப்பு இருக்கிறது. ஆஸ்திரேலியா மிக வலுவான அணி. அந்த அணியில் ஏழாவது எட்டாவது இடங்களில் களமிறங்கும் வீராங்கனைகள்கூட வெளுத்துக்கட்டுவார்கள். எனினும், 281 ரன்கள் என்பது மிகவும் கடினமான இலக்கு. ஆஸ்திரேலியா இந்தியாவிடம் சரணடைவதுபோலவே இருந்தது. ஆனால், கடைசி விக்கெட்டுக்கு கூட்டணி போட்ட பிளாக்வெல் & பீம்ஸ் இணை  ஏழு ஓவர்களில் 76 ரன்கள் சேர்த்து மிதாலி அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும் கிலியைக்  கூட்டியது. அதுதான் ஆஸ்திரேலியா. அப்படி ஒரு மகத்தான அணிக்கு எதிராகத்தான் இந்தியா ஜெயித்திருக்கிறது. 

வொண்டர்... வொண்டர்... வொண்டர்


டிரெண்டிங் @ விகடன்