‘சென்னை ஓபன்’ டென்னிஸ் போட்டி புனேக்கு மாறிய பின்னணி என்ன?

மிழகத்தில் இயங்கிய பாரம்பர்யமான நிறுவனம் வெளிமாநிலத்துக்கு மாற்றப்பட்டால் நமக்கு இயல்பாக எழும் கோபமும் வேதனையும்தான் சென்னை ஓபன் டென்னிஸ், மாராட்டிய ஓபன் போட்டியாக மாற்றப்பட்டபோது எழுந்துள்ளது!

சென்னை ஓபன் டென்னிஸ் இடமாற்றம்

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஓர் விளையாட்டு அடையாளம். மகாராஷ்டிரத்துக்கு கிரிக்கெட், மேற்கு வங்கத்துக்கு கால்பந்து, தடகளத்துக்கு கேரளம் என்றால் டென்னிசுக்கு தமிழகம்தான் இந்தியாவின் முன்னோடி மாநிலம். ராம்நாதன், விஜய் அமிர்தராஜ், ரமேஷ் கிருஷ்ணன் முதல் இப்போதைய ராம்குமார் ராமநாதன், ஜீவன் நெடுஞ்செழியன் வரை புகழ்பெற்ற டென்னிஸ் வீரர்கள் பலரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே! லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதி போன்றவர்கள் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் , அவர்களைப் பட்டைத் தீட்டியது சென்னை மண்தான். டென்னிசுக்கும் சென்னை மண்ணுக்குள்ள பந்தத்தை அறிந்தே, சர்வதேச டென்னிஸ் சங்கம் ஆண்களுக்கான ஏ.டி.எப். டென்னிஸ் தொடரை 'சென்னை ஓபன்' என்ற பெயரிலேயே தமிழகத் தலைநகரில் நடத்த அனுமதித்திருந்தது. கௌரவமிக்க இந்தப்போட்டித் தொடர் ரசிகர்கள் ஆதரவின்மையால் புனே நகருக்கு மாற்றப்பட்டுள்ளது என்பது வருத்தத்துக்குரிய விஷயம்.

1996-ம் ஆண்டு முதல் இந்தத் தொடர் சென்னையில் நடைபெற்று வருகிறது. நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான எஸ்.டி.டி ஏ டென்னிஸ் அரங்கத்தில் 21 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்ற தொடரில், கார்லோஸ் மோயா, மரின் சிலிச், வாவ்ரிங்கா, ரஃபேல் நடால் போன்ற புகழ்பெற்ற வீரர்கள் பங்கேற்றிருக்கின்றனர். எத்தகைய புகழ்பெற்ற வீரர்கள் கலந்துகொண்டாலும்,  போட்டியைக் காண குறைந்தளவு ரசிகர்களே வந்தது சென்னை ஓபனுக்கு எதிராக அமைந்துவிட்டது. ஐ.எஸ்.எல். கால்பந்து தொடரின் மீது காட்டிய ஆர்வத்தைக் கூட ரசிகர்கள் சென்னை ஓபன் போட்டி மீது காட்டவில்லை. லீக் ஆட்டங்களைக் காண ரசிகர்கள் குறைந்த அளவே வருகை தந்தனர். இறுதிப் போட்டிக்கு கூட மைதானம் நிரம்பியதில்லை. ரசிகர்களின் ஆதரவு இல்லாததால், போதிய நிதி திரட்ட முடியாத நிலை.

சென்னை ஓபன் டென்னிஸ் புனேவுக்கு மாற்றம்

சென்னை ஓபன் போட்டித் தொடரை தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் கடும் நெருக்கடிக்கிடையேதான் நடத்தி வந்தது. ஏற்கெனவே ஒருமுறை நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, அப்போதையை தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின் பேரில், அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஸ்பான்சர் தொகையாக அறிவிக்கப்பட்டது. இதற்கிடையே, போட்டியில் பங்கேற்ற வீரர்களும் பரிசுத் தொகையை அதிகரித்துத் தர வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தனர். போதிய நிதி  இல்லாத நிலையில் வீரர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. இதனால், முன்னணி வீரர்களை சென்னை ஓபனில் பங்கேற்க வைப்பதில் சிரமம் இருந்தது. 

ஸ்விட்சர்லாந்து வீரர் ஸ்டான் வாவ்ரிங்கா, 4 முறை சென்னை ஓபனில் பட்டம் பெற்றவர். பரிசுத் தொகை குறைவு என்பதைக் காரணம் காட்டி கடந்த முறை அவர் போட்டியில் பங்கேற்கவில்லை. நட்சத்திர வீரர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை என்றால், வரும் கூட்டமும் வராமல் போய் விடும் நிலை. இதனால், சென்னை ஓபன் டென்னிசுக்குப் புதிய ஸ்பான்சரைத் தேடிக் கொண்டிருந்தது தமிழக டென்னிஸ் சங்கம்.

இந்தநிலையில்தான்  ஐ.டி.எப். போட்டித் தொடரை நடத்த சர்வதேச டென்னிஸ் சங்கத்திடம் இருந்து அங்கீகாரம் பெற்ற, ஐ.எம்.ஜி அமைப்பு தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்துக்கு வழங்கியிருந்த  2018,19-ம் ஆண்டுக்கான அங்கீகாரத்தை ரத்து செய்வதாக இ- மெயில் வழியாக தகவல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் புனேவுக்கு போட்டித் தொடர் மாற்றப்பட்டுள்ளது. அங்குள்ள, பேல்வாடி ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸில் இனிமேல் சென்னை ஓபன் போட்டி, மராட்டிய ஓபன் டென்னிஸ் என்ற பெயரில் நடைபெறும். இதற்காக 2018, 2019 என இரு ஆண்டுகளுக்கு ஐ.எம்.ஜி நிறுவனத்துடன் மகாராஷ்டிர மாநில டென்னிஸ் சங்கம் ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஐ.எம்.ஜி. நிறுவனத்தின் அறிவிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.டென்னிஸ் ரசிகர்கள் கடும் ஏமாற்றமடைந்துள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் 'அவமானகரமானது' எனக் கூறியுள்ளார். தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், 'சென்னைக்கு சிறப்புச் சேர்த்த டென்னிஸ் தொடர் வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுவதை தமிழக அரசு மௌனமாக பார்த்துக்கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது'' என குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமீப காலங்களில் தமிழகம் எத்தனையோ விஷயங்களில் தன் அடையாளத்தை இழந்துள்ளது. அதில், இதுவும் ஒன்று என எடுத்துக் கொள்வோம். நுங்கம்பாக்கம் எஸ்.டி.டி.டி டென்னிஸ் அரங்கத்தை இனி திருமண மண்டபமாக மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!