வெளியிடப்பட்ட நேரம்: 16:03 (21/07/2017)

கடைசி தொடர்பு:16:03 (21/07/2017)

'எளிதில் விட்டுக் கொடுக்க மாட்டோம்...': இங்கிலாந்தை எச்சரிக்கும் மித்தாலி ராஜ்!

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை துரத்திவிட்டு இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது இந்திய மகளிர் அணி.  இறுதிப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியுடன், அதன் சொந்த மண்ணில் மோதுகிறது இந்தியா. 

மித்தாலி ராஜ்


ஏற்கெனவே உலகக் கோப்பையின் முதல் போட்டியில், இந்திய அணியிடம் இங்கிலாந்து தோல்வியடைந்திருந்தது. முக்கியமாக, 2005-ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதனால், இந்திய அணி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இந்திய அணி கேப்டன் மித்தாலி ராஜ், "ஒரு அணியாக, இறுதிப் போட்டியில் கலந்துகொள்வது உற்சாகமாக இருக்கிறது. இந்தத் தொடர் கடுமையானதாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், அணிக்கு எப்போது தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் பேட்டிங் மற்றும் பௌலிங் என்று இரண்டு பிரிவிலும் கேர்ள்ஸ் தங்களது சிறப்பான பங்கை அளித்தனர்.  இதனால்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளோம். இறுதிப் போட்டி இங்கிலாந்து அணிக்கு எளிதானதாக இருக்காது. ஆனால், அன்றைய நாளில் எப்படி செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தே முடிவு இருக்கும்.

இங்கிலாந்து அணியை வீழ்த்த தெளிவான திட்டமிடல் அவசியம். முதல் போட்டியில் எங்களுடன் தோல்வியடைந்திருப்பதால் பதிலடி கொடுக்கும் முனைப்பில் இங்கிலாந்து இருக்கும். குறிப்பாக, முதல் போட்டிக்குப் பிறகு மிகவும் சிறப்பாக செயல்பட்டு அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. சொந்த மண்ணில், இங்கிலாந்தை எதிர்கொள்வது சவாலான ஒன்றுதான். ஆனால், அதற்கு எல்லா தகுதியும் இந்திய அணிக்கு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.