வெளியிடப்பட்ட நேரம்: 01:06 (22/07/2017)

கடைசி தொடர்பு:01:06 (22/07/2017)

'கோப்பை நமக்குத்தான்...!'- அடித்து சொல்கிறார் கங்குலி #WomensWorldCup

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, 'மகளிர் உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் இந்திய அணிதான் வெற்றி பெறும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சவுரவ் கங்குலி

8 நாடுகள் பங்கு பெரும் மகளிர் உலகக் கோப்பை இங்கிலாந்தில் நடந்து வருகிறது. உலகக் கோப்பையின் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய முதல் நான்கு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து, முதல் அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிச் சுற்றிக்கு முன்னேறியது. வியாழக்கிழமையன்று நடந்த இரண்டாவது அரையிறுதியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. பல முறை உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியாவை 36 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கெத்தாக இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது இந்தியா. இந்தப் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கௌர் 171 ரன்கள் குவித்து, ஆச்சர்யப்படுத்தினார். இதையடுத்து, வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றிப் பெற்று கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்நிலையில், செளரவ் கங்குலி, 'நேற்று ஹர்மன்ப்ரீத் கௌர் விளையாடியதைப் பார்த்தேன். மிகச் சிறப்பாக அவர் விளையாடி சதமடித்தார். இந்திய அணி, இறுதிச் சுற்றில் இங்கிலாந்தை வீழ்த்தி, கண்டிப்பாகக் கோப்பையை வெல்லும்' என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.