தல தோனி, சிஎஸ்கே கொடி, வெளுத்துக்கட்டிய வாஷிங்டன் சுந்தர் - #TNPLUpdates

டி.என்.பி.எல் இரண்டாவது சீசன் எளிமையாகவும் அதே சமயம் ஆரவாரத்துடனும்  தொடங்கியிருக்கிறது. தோனியின் வரவால் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ரசிகர்களின் உற்சாகக்குரல் மீண்டும் ஒலித்தது. டி.என்.பி.எல் இரண்டாவது சீசன் தொடக்கவிழாவில் தோனி  மஞ்சள் நிற ஜெர்சியில் நுழைந்ததும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர் ரசிகர்கள். மைதானம் முழுவதுமே மஞ்சள் நிற சிஎஸ்கே கொடி பறந்தது. நடப்பது டி.என்.பி.எல்லா அல்லது ஐபிஎல்லா என ஒரு  கணம் சந்தேகம் எழும் அளவுக்கு எங்கும் மஞ்சள் நிற ஜெர்சிகளும், கொடிகளும் தென்பட்டன. 

தோனி

பௌலிங் மெஷின் மூலம் பந்துவீசப்படும். அதை சிக்சருக்கு விளாசவேண்டும் என்பது தோனிக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க். நான்கு பந்தில் மூன்றை சிக்சருக்கு விரட்டினார் தோனி. அனைத்து சிக்ஸர்களுமே ரசிகர்கள் உட்கார்ந்திருக்கும் காலரியில் விழுந்தன. 'இது சும்மா டிரைலர்மா சிஎஸ்கே அறிமுக விழாதான் எங்களுக்கு மெயின் பிக்சர்' எனச் சொல்லி கொண்டாடித்தீர்த்தனர் ரசிகர்கள். 'தல' என எழுதப்பட்ட ஜெர்சியை அணிந்திருந்த தோனி  நீண்ட நாட்கள் கழித்து மகிழ்ச்சியான மனநிலையில் காணப்பட்டார். "சிஎஸ்கேவுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டது. இப்போது தடைகாலம் முடிந்துவிட்டது. இந்த இரண்டு ஆண்டுகளில் சிஎஸ்கே ரசிகர்கள் இன்னும் இன்னும் அதிகரித்திருக்கிறார்கள். எனக்கு சென்னை எப்போதுமே ஸ்பெஷல்" என்றார் தோனி. 

சிஎஸ்கே

அறிமுகவிழாவுக்கு பிறகு இந்த சீசனுக்கான முதல் போட்டி தொடங்கியது. முதல் போட்டியில் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி மோதியது. டாஸ் வென்ற தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. தினேஷ் கார்த்திக் போட்டியில் ஆடாததால் தூத்துக்குடி அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றார் சுப்பிரமணியன் ஆனந்த். அதேப் போல திண்டுக்கல் அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஷ்வின் இந்திய அணிக்காக ஆட இலங்கைக்குச் சென்றுவிட்டதால் கேப்டன் பொறுப்பு அஷ்வின் வெங்கட்ராமிடம் கொடுக்கப்பட்டது.

இது 180 ரன்கள் எடுக்கப்படக்கூடிய பிட்ச் என கணித்தார் டீன் ஜோன்ஸ். போட்டித் தொடங்கியது. வாஷிங்டன் சுந்தருடன்  கௌஷிக் காந்தி களமிறங்கினார்.  மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடராஜன் ஆரம்ப ஓவர்களில் சொதப்பித் தள்ளினார். நான்காவது ஓவரை நடராஜன் வீசியபோது மூன்று பௌண்டரிகளை விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் முருகன் அஷ்வின் பந்துவீச வந்தார். அவரது ஓவரை வாஷிங்டன் சுந்தர் உரித்துத் தள்ளினார். ஒரு சிக்ஸர் இரண்டு பவுண்டரிகள் உட்பட 18 ரன்கள் இந்த ஓவரில் வந்தது. பவர்பிளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 67 ரன்கள் எடுத்திருந்தது தூத்துக்குடி அணி. 

வாஷிங்டன் சுந்தர்

வாஷிங்டன் சுந்தர் ஒருபக்கம் அதிரடித்துக் கொண்டிருக்க, கௌஷிக் காந்தி கட் ஷாட்களில் கலக்கினார். கௌஷிக்கின் ஷாட்கள் ரசிக்கும்படியாக  இருந்தன. பவர்பிளே முடிந்தாலும் ஓரளவு ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக்கொண்டனர் இருவரும். பத்து ஓவர்களில் 103 ரன்கள் எடுத்திருந்தது தூத்துக்குடி. முதல் பத்து ஓவர்களில் திண்டுக்கல் அணியின் பீல்டிங் படுசொதப்பலாக இருந்தது. இந்தநிலையில் விக்டர் வீசிய பந்தில் கௌஷிக் அடித்த பந்தை அற்புதமான முறையில்  கேட்ச் செய்தார் சஞ்சய். பந்தைச் சரியாக கணித்து காலை பின்நோக்கி நகர்த்தி பின்னர் இரண்டு கால்களையும் தூக்கி பின்னோக்கி டைவ் செய்து அட்டகாசமான கேட்ச் செய்தார் சஞ்சய். வாழ்த்துகள் சஞ்சய். 

கௌஷிக் காந்தி வெளியேறியதும் எஸ்.பி. நாதன் உள்ளே வந்தார். நாதன் அமைதியாக இன்னிங்க்சை தொடங்கினார். பதிமூன்றாவது ஓவரை நடராஜன் வீச வந்தார். அந்த ஓவரின் முதல் பந்தை பௌண்டரிக்கு அனுப்பி அரை சதத்தை நிறைவு செய்தார் வாஷிங்டன். அதே ஓவரில் மீண்டும் ஒரு சிக்ஸர் மற்றும் பௌண்டரி விளாசினார் வாஷிங்டன். அந்த ஓவரில் மட்டும் 16 ரன்கள் வந்தது. 14 ஓவர்களில் 134 ரன்கள் எடுத்திருந்தது தூத்துக்குடி பேட்ரியாட்ஸ். நிச்சயமாக 210 ரன்களை தூத்துக்குடி அணி கடந்துவிடும் எனத் தோன்றியபோது வாஷிங்டன் சுந்தர் விவேக்கின் பந்தில் தேவையற்ற ஒரு ஷாட் விளையாட முற்பட்டு கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அவர் 48 பந்துகளில் 8 சிக்ஸர்கள்  இரண்டு பவுண்டரிகள் உட்பட 69 ரன்கள் எடுத்தார். அவர் அவுட் ஆன பிறகு ரன்வேகம் மந்தமானது. சுப்ரமணியன் ஆனந்த் மட்டும் 17 பந்துகளில் 26 ரன்கள் அடித்தார். இறுதி ஓவரை நடராஜன் அற்புதமாக வீசினார்.யார்க்கர்களால் பேட்ஸ்மேன்களை  முடக்கினார். அந்த ஓவரில் வெறும் மூன்று ரன்கள் மட்டுமே வந்தது. நடராஜன் நான்கு ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். தூத்துக்குடி அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது.

185 ரன்கள் எனும் சற்றே கடினமான இலக்கைத் துரத்தத் துவங்கியது திண்டுக்கல் டிராகன்ஸ். அந்த அணியில் ஜெகதீசனும் ராஜுவும் தொடக்க வீரராக களமிறங்கினார். மூன்றாவது ஓவரை வாஷிங்டன் சுந்தர் வீச அதில் ஒரு சிக்ஸர் வைத்தார் ஜெகதீசன். ஆனால் அதே ஓவரில் மிட்விக்கெட் திசையில் ஆகாஷிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அஷ்வின் கிறிஸ்ட் பந்தில் ஆகாஷிடம் கேட்ச் கொடுத்து சுப்ரமணிய சிவாவும் வெளியேறினார். தனது இரண்டாவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர்  முருகன் அஷ்வினை வெளியேற்றினார். எட்டு ஓவர்கள் முடிவில் 65 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்தது திண்டுக்கல் அணி. அதன் பிறகு அஷ்வின் வெங்கட்ராமனும் கங்கா ஸ்ரீதர் ராஜும் நிலைத்தது நின்று சிறப்பாக ஆடினார்கள். எனினும் 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் மட்டுமே திண்டுக்கல் அணியால் எடுக்க முடிந்தது.  எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தூத்துக்குடி அணி. வாஷிங்டன் சுந்தர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

 

 

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!