வெளியிடப்பட்ட நேரம்: 23:44 (23/07/2017)

கடைசி தொடர்பு:11:49 (24/07/2017)

தோற்றாலும் இவர்கள் சாம்பியன்தான்! #EngvInd #WWC17

 

போன மாதம் இங்கிலாந்தில் நடந்த சாம்பியன்ஸ் ட்ராபி ஃபைனலில், பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை இழந்தது விராட் கோலி தலைமையிலான பென் இன் புளூ…இன்று அதே இங்கிலாந்து மண்ணில், இங்கிலாந்திடம் உலகக் கோப்பையை இழந்துள்ளது வுமன் இன் புளூ.

இங்கிலாந்து மகளிர் அணி

எட்டு அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், லீக் சுற்றில் 5 வெற்றிகள் பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது இந்திய அணி. கோப்பையை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய அணியை அரையிறுதியில் வீழ்த்தி, கெத்தாக ஃபைனலுக்குள் நுழைந்தது மித்தாலி ராஜ் தலைமையிலான நம் அணி. இறுதிப்போட்டியில், இன்று இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்டது.
கிரிக்கெட்டின் மெக்காவான லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹீதர் நைட் பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். அதிகம் பவுன்ஸ் ஆகாத பிட்சில் ரன் அடிப்பது சற்று சிரமமாகவே இருந்தது. இங்கிலாந்து வீராங்கனைகள் பொறுமையாக ஆடியபோதும், சீரான இடைவேளையில் இந்திய அணி விக்கெட்டுகளை வீழ்த்தியது. தீப்தி ஷர்மா, பூனம் யாதவ், ராஜேஷ்வரி அடங்கிய சுழல் கூட்டணி இங்கிலாந்து வீராங்கனைகள் ரன் குவிக்காமல் பார்த்துக்கொண்டது. இந்த நிலையில், சாரா டெய்லர், நடாலி சிவர் கூட்டணி அணியின் ஸ்கோரை மெள்ள உயர்த்தியது. அந்தப் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணியின் தலைசிறந்த பௌலரான கோஸ்வாமி பிரித்தார். அவர்கள் இருவரையுமே வீழ்த்திய கோஸ்வாமி, 10 ஓவர்கள் பந்துவீசி  23 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். அதில், 3 மெய்டன்களும் அடங்கும். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் எடுத்தது.

இந்திய மகளிர் அணி

கோப்பையை வெல்ல 229 என்ற இலக்கோடு களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாய் அமைந்தது. இந்தப் போட்டியிலாவது நிலைத்து நிற்பார் என்று எதிர்பார்த்த ஸ்ம்ரிதி மந்தனா டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் மாபெரும் நம்பிக்கையான கேப்டன் மிதாலி, மெத்தனமாக ஓடி ரன் 17 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனால் இந்திய அணியின் மீதான பிரஷர் அதிகமானது. அதன்பின்பு, ஹர்மன்பிரீத்தும், பூனம் ராவத்தும் இணைந்து அற்புதமான பார்ட்னர்ஷிப்பை ஏற்படுத்தினர். இருவரும் அரைசதம் எடுத்து, முறையே 86 மற்றும் 51 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். அதன்பின்னர், விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போலச் சரிய, ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் டெயில் எண்டர்களை எளிதில் சாய்த்தார் இங்கிலாந்து வீராங்கனை ஷ்ரப்சோல். அவர் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி, இங்கிலாந்தின் வெற்றிக்கு வித்திட்டார். இந்திய அணி 219 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி நான்காவது உலகக் கோப்பையை ருசித்தது.

ஹர்மன்பிரீத்

எல்லோரும் எப்போதும் கோலி, தோனி என்றே பேசிக்கொண்டிருக்க, ஃபைனல் வரை முன்னேறியுள்ளது நமது மகளிர் அணி. மித்தாலி, கோஸ்வாமி இருவருக்கும் இது கடைசி உலகக் கோப்பை. ஆனால், நாம் கொண்டாட இவர்கள் மட்டும் இல்லை. இரண்டு இன்னிங்ஸ்களால் பேசப்பட்ட மந்தனா, ஹர்மன்பிரீத் ஆகியோரையும் தாண்டி பூனம் யாதவ், இளம் நம்பிக்கை தீப்தி ஷர்மா, வேதா கிருஷ்ணமூர்த்தி என நம்பிக்கை நாயகிகள் அதிகம் இருக்கிறார்கள் நம் அணியில். “ஹூ இஸ் யுவர் ஃபேவரைட் கிரிக்கெட்டர்?” என்னும் கேள்விக்கு, ஒரு பெண்ணின் பெயர் இந்தியாவில் ஒலிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. தோற்றாலும் இவர்கள் சாம்பியன்கள் தான்...வெல்டன் கேர்ள்ஸ்…தேசம் உங்களால் பெருமைகொள்கிறது!