இந்திய மகளிர் அணிக்கு பிரதமர் உட்பட பல பிரபலங்கள் வாழ்த்து

மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, நான்காவது முறையாக  உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. 

Indian womes team

இந்திய அணி கோப்பையை வெல்ல முடியாமல் போனாலும் அவர்கள் போராடிய விதத்தை ரசிகர்கள் பாராட்டிவருகின்றனர். இந்திய அணிக்கு பல்வேறு பிரபலங்களிடமிருந்து வாழ்த்துகள் குவிந்தவண்ணம் உள்ளது. இந்திய ரசிகர்களின் கவனத்தை மகளிர் கிரிக்கெட் பக்கம் திருப்பியதற்கு, மகளிர் கிரிக்கெட் அணி விளையாடிய விதம்தான் காரணம். இறுதிப் போட்டி முடிவடைந்ததும், பிரபலங்கள் தங்களின் வாழ்த்துகளை ட்விட்டரில் தெரிவித்துவருகின்றனர். 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில்,  "மகளிர் கிரிக்கெட் அணியினர் தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தங்களது திறமையை வெளிக்காட்டினர். இந்திய அணியை நினைத்துப் பெருமைகொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

 


இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், "போட்டி முழுவதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினீர்கள். வெற்றி பெற்ற மகளிர் இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துகள்" என்றார். 

இந்திய அணியின்  முன்னாள் வீரரான வீரேந்திர சேவாக், "இன்றைய தினம் கடினமானது. ஆனால், உங்களால் இந்தியாவில் பெண்கள் கிரிக்கெட் உண்மையில் வந்துவிட்டது. அதற்கு உங்களுக்கு நன்றி " 

 

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான, தவான், "ஒட்டு மொத்த தேசமும் உங்களை நினைத்துப் பெருமைகொள்ளும். இங்கிலாந்து அணிக்கு எனது வாழ்த்துகள்" என்றார்.

இவர்கள் தவிர, விளையாட்டுப் பிரபலங்கள் சாக் ஷி மாலிக், கௌதம் கம்பீர், அரசியல் தலைவர்கள் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், தங்களது வாழ்த்துகளை இந்திய மகளிர் அணிக்கு தெரிவித்துள்ளனர். 

இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, ஏற்கெனவே இந்திய வீராங்கனைகளுக்கு 50  லட்சம் பரிசுத் தொகையாக அறிவித்திருந்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!