வெளியிடப்பட்ட நேரம்: 19:33 (24/07/2017)

கடைசி தொடர்பு:19:33 (24/07/2017)

ஓவியா ஆர்மி இருக்கட்டும்... மிதாலி ஆர்மியைக் கவனித்தீர்களா?

கோப்பை தவறியிருக்கிறது. ஒன்பது ரன்களில் ஒரு வரலாறு மிஸ் ஆகிவிட்டது. இருக்கட்டும். இன்னும் 4 ஆண்டுகள் நாம் பொறுத்திருக்கலாம். அப்போது உலகம் நம் சாதனை நாயகிகளின் பெயரை உச்சரிக்கும். ஆனால் இப்போது  நாம் நமது சாதனை நாயகிகளை உச்சிமுகர்வோம். அவர்களைக் கொண்டாடுவோம். அதற்கான முழுத் தகுதியும் மிதாலி ஆர்மியிடம் இருக்கிறது. 

நேற்றை விட இன்றைக்கு ஒரு படி முன்னேறினாலே நாம் சரியான பாதையில்தான் பயணிக்கிறோம் எனப் பொருள் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் இந்திய மகளிர் அணி ஐந்து படிகளை ஒரேடியாகத் தாண்டியிருக்கிறது. கடந்த உலகக் கோப்பை இந்தியாவில் நடந்தது. அப்போது ஏழாவது இடத்தைப் பிடித்து சூப்பர் சிக்ஸுக்குக் கூடத் தகுதி பெறாமல் முடங்கியது. இன்று இறுதிப்போட்டி வரை முன்னேறியிருக்கிறது. வெறும் ஒன்பது ரன்களில்தான் கோப்பையைத் தவறவிட்டிருக்கிறது. இது தோல்வியைப் பற்றி  அலச வேண்டிய தருணமல்ல. இறுதிப் போட்டி வரை வந்த இந்திய அணியின் மகத்தான சாதனையை நினைவுகூற வேண்டிய தருணம். 

மிதாலி ஆர்மி

உலகக் கோப்பைக்கு நேரடியாகத் தகுதி பெறாத இந்திய அணி தகுதிச் சுற்றில் ஆடியது. அங்கே தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட அத்தனை அணிகளையும் வீழ்த்தி 10 வெற்றிகள் பெற்று உலகக்கோப்பையில் நுழைந்தது. இங்கே இங்கிலாந்து முதல் ஆஸ்திரேலியா வரை  அத்தனை அணிகளுக்கும் தோல்வியைப் பரிசளித்திருக்கிறது. இனிவரும் காலங்களில் மிதாலியின் ஆர்மி தலைநிமிர்ந்து நடக்கும். 

16 வயதில் இந்திய அணிக்குள்  நுழைந்தார் மிதாலி. இன்று 34 வயதாகிவிட்டது. இடைப்பட்ட காலத்தில் இந்திய அணியைத் தோளில் தாங்கியிருக்கிறார். பல போட்டிகளில் அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்து அணியைக் கரைசேர்த்திருக்கிறார். அப்போது வாழ்த்தாத குரல்கள் தோல்வி அடைந்தபோது சாடியபோதும் பொறுமையாக பதில் சொல்லியிருக்கிறார். நேற்றைய போட்டியில் அவர் ரன் அவுட் ஆன விஷயம் நிச்சயம் விமர்சனத்துக்குள்ளானது. கோப்பை நழுவியதற்கு லேசாகக் கடிந்து கொள்ளலாம். எனினும் ஒருமுறை கூட உலகக் கோப்பையை வென்று அதன் பலன்களை சுவைத்திராத சூழ்நிலையில், திடீரென கோடிக்கணக்கான ரசிகர்கள் எதிர்பார்ப்பின் முன்னிலையில் பதற்றம் காரணமாக தவறுகள் நடப்பது இயல்பே என்பதையும் புரிந்துகொள்ளத்தான் வேண்டும்.

சாம்பியன்கள் எப்போதும் சாம்பியனே. ஆண்கள் கிரிக்கெட்டில் கூட கங்குலி, டிராவிட் எனப் பல சாதனையாளருக்கு இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த உலகக் கோப்பையில் மிதாலி எடுத்த ரன்கள் 409. அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் இரண்டாமிடம் பிடித்திருக்கிறார். உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலில் இருப்பது யார் தெரியுமா? இங்கிலாந்தைச் சேர்ந்த டாமி பெமென்ட். அவர் எடுத்தது 410 ரன்கள். ஒரே ரன்னில் அந்தச் சாதனையையும் தவறவிட்டிருக்கிறார் மிதாலி ராஜ்

ஸ்மிருதி மந்தனா

இந்த உலகக்கோப்பைத் தொடரில் ஒவ்வொரு வீராங்கனைகளுமே ஒவ்வொரு போட்டியிலும் அணிக்குத் தேவையான சமயங்களில் சிறப்பானப் பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். மிதாலியின் ஆர்மியில் துடிப்பான ஆளாகச் செயல்பட்டவர் ஸ்மிருதி மந்தனா. முதல் இரண்டு போட்டிகளில் விளாசித்தள்ளிய ஸ்மிருதி ஆட்டநாயகியாகத் திகழ்ந்தார். பூனம் ராவுத் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அசத்தலாக ஆடினார். நேற்று நடந்த இறுதிப்போட்டியிலும் சூப்பராக ஆடினார். நேற்று இங்கிலாந்து வீராங்கனைகள் பவுண்டரிகளுக்குச் செல்லும் விதமான மோசமான பந்துகளைக் குறைவாகவே வீசினார்கள். ஓடி ஓடியே பெரும்பாலான ரன்களைச் சேர்த்தார் பூனம் ராவுத். அணித் தலைவி அவுட் ஆனபோதும் கூட பதற்றப்படாமல் ஆடினார் பூனம். அவர் இன்னும் சில ஓவர்கள் களத்தில் நின்றிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கக்கூடும். 

ஹர்மன்ப்ரீத் கவுர் இப்போது டிஎஸ்பி. இந்தத் தொடரில் இந்தியாவின் நம்பிக்கை நாயகி. பெண்கள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய அணி பிஸ்தா. உலகக் கோப்பையை ஜெயிப்பதெல்லாம் அந்த அணிக்குப் பெரிய விஷயமே கிடையாது. ஆறு முறை உலகக்கோப்பையை வென்று பெண்கள் கிரிக்கெட்டில் தாதாவாக வளைய வந்த அணிக்கு ஹர்மன்ப்ரீத் வைத்த சூடு ஆறாத ரணமாக இருக்கும். இறுதிப்போட்டியிலும் ஹர்மன்ப்ரீத் நல்ல இன்னிங்ஸ் ஆடினார். 

ஹர்மன்ப்ரீத் கவுர்

26 வயதாகும் ராஜேஸ்வரி ஷிவானந்த் கெயிக்வாட் இடது கை ஸ்பின்னர். கர்நாடகாவில் உள்ள விஜயபுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். ராஜேஸ்வரி சிறுவயதில் கிரிக்கெட் ஆடியதே கிடையாது. ஈட்டி எறிதலில் மாவட்ட அளவில் பெரிய பிளேயராக இருந்தவர். பின்னாளில் வட்டு எறிதலிலும் வாலிபாலிலும் அதிகமாகக் கவனம் செலுத்தியிருக்கிறார். மாநில அளவில் பல்வேறு விளையாட்டு வீராங்கனைகள் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில்தான் முதன்முறையாக பெண்கள் கிரிக்கெட் குறித்தே தெரிந்து கொண்டிருக்கிறார்.

பெண்கள் எப்படி கிரிக்கெட் விளையாடுகிறார்கள் என ஆச்சர்யமாக அது தொடர்பான செய்திகள், வீடியோக்கள் எல்லாம் பார்த்தபிறகு இவருக்கும் கிரிக்கெட் ஆசை வந்திருக்கிறது. பேட்டிங் செய்யலாம் என முடிவெடுத்து களமிறங்கியபோது தொடர்ந்து போல்டு ஆகியிருக்கிறார். நமக்கு இது ஒத்துவராது என நினைத்துக் கொண்டு கிரிக்கெட்டை கைவிட நினைத்தபோது தோழி ஒருவரின் தூண்டுதலால் பவுலிங் செய்ய முயற்சித்திருக்கிறார். அவருக்குப் பந்துகள் நன்றாக சுழன்றது. அதன்பின்னர் பந்துவீச்சின் மீது காதல் ஏற்பட தொடர் பயிற்சிகள் மூலம் விறுவிறுவென சுழற்பந்து வீச்சாளராக முன்னேறினார். 22 வயதில் இந்திய அணியில் இடம்பிடித்தார். இப்போது இந்திய அணியில் முக்கியமான இடம் இவருக்குத்தான். ஸ்லோ பிட்ச்களில் ராஜேஸ்வரியின் பந்துகளுக்கு விடை சொல்வது எதிரணி பேட்ஸ்வுமன்களுக்குப் பெரும் சிக்கல். விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற வெறி ராஜேஸ்வரிக்கு உண்டு. பலமுறை இந்திய அணிக்கு மேட்ச் வின்னராகத் திகழ்ந்திருக்கிறார். இப்போது நடந்த உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். 

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏக்தா பிஷ்ட் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவர். ஏக்தாவின் அப்பா குந்தன் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றவர். ஏக்தா ஆறு வயதில் இருந்தே கிரிக்கெட் விளையாடத் தொடங்கியிருக்கிறார். தெருக்களில் பசங்க கூட்டத்தில் ஏக்தா கிரிக்கெட் ஆடுவதைப் பார்த்த உறவினர்கள் குந்தனை திட்டியிருக்கிறார்கள்.

ஆனால், ஏக்தாவின் கனவுக்கு உருவம் கொடுக்க ஆரம்பித்தார் குந்தன். பள்ளி அளவிலான போட்டிகள், மாநில அளவிலான போட்டிகளில் அவர் பங்கெடுப்பதற்காகத் தனியாக டீ கடை ஆரம்பித்திருக்கிறார். 2006ம் ஆண்டிலேயே மாநில அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டாலும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. 2011-ம் ஆண்டில்தான் முதன்முறையாக இந்திய அணிக்கு விளையாடினார். இவரது புத்திசாலித்தனமான பந்துவீச்சில் பேட்ஸ்மேன்கள் திணறினார்கள். இந்த உலக கோப்பையின் லீக் சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஏக்தாவின் பௌலிங்  அமர்க்களம். பாகிஸ்தானுக்கு வெறும் 170 ரன்களைத்தான் இலக்கு வைத்தது இந்தியா. ஆனால் ஏக்தா பிஷ்ட்டின் சூழலில் சிக்கி 74 ரன்களில் ஆல் அவுட் ஆனது பாகிஸ்தான். அந்தப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார் ஏக்தா.

தீப்தி ஷர்மா

இடது கை பேட்ஸ்மேன், வலது கை பந்துவீச்சாளர். இந்தியாவின் நம்பர் 1 ஆல்ரவுண்டர். இதுதான் தீப்தியின் அடையாளம். கடந்த மே மாதம் நடந்த அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியொன்றில் தீப்தி குவித்த ரன்கள் எவ்வளவு தெரியுமா? 188. பெண்கள் கிரிக்கெட்டில் உலகிலேயே இரண்டாவது அதிகபட்ச ரன் இதுதான். இந்திய அளவில் தீப்திதான் முதலிடம். இளம் வயதிலேயே ஒரே போட்டியில் ஐந்து விக்கெட் கைப்பற்றிச் சாதனை படைத்தவரும் தீப்திதான். 

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பத்தொன்பது தீப்தியின் ரோல்மாடல் மிதாலி ராஜ். தீப்திக்கு சிறிய வயதிலே கிரிக்கெட் ஆசை வந்ததற்கு மிதாலி தான் காரணம். மிதாலியின் துல்லியமான ஷாட்களில் ஈர்க்கப்பட்டு பேட் பிடிக்க ஆரம்பித்தார். இன்று மிதாலி தலைமையின் கீழ் இந்திய அணிக்காக உலகக் கோப்பையில் ஆடினார். இவரைத்தான் இந்தியாவின் துருப்புச் சீட்டாக பயன்படுத்தினார் மிதாலி ராஜ். இந்த உலகக் கோப்பையில் அதிக விக்கெட் (12) எடுத்த இந்திய பவுலர் இவர்தான். நேற்று நடந்த மேட்சில் இவர் இன்னும் கொஞ்சம் சுதாரித்திருந்தால் இவர் பெயரை இந்தியாவே உச்சரித்திருக்கும். 

ஜூலன் கோஸ்வாமி

ஜூலன் கோஸ்வாமி ஒரு சீனியராக அணிக்கு என்ன செய்ய வேண்டுமோ அதைச் சரியாக செய்து முடித்தார். பல ஆண்டு கனவு நனவாக வாய்ப்பிருந்த நாளில் சொந்தமண்ணில் கலக்கிக் கொண்டிருந்த இங்கிலாந்து வீராங்கனைகளைத் தனது துல்லியமான பந்துவீச்சால் அடக்கினார்.  பூனம் யாதவ் மிகச்சிறப்பான பந்துவீச்சாளராக உருவெடுத்துக் கொண்டிருக்கிறார். இந்த உலகக் கோப்பையில் சிறப்பான எகானமி ரேட் (3.86) வைத்திருக்கும் இந்திய பௌலர் அவர்தான்.

சிகா பாண்டே ஜூலன் கோசுவாமியின் ஓய்வுக்குப் பிறகு பௌலிங் கேப்டன் பொறுப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குத் தகுதியானவர் அவர். வேதா கிருஷ்ணமூர்த்தியின் அதிரடி ஆட்டம் பல்வேறு வகையில் மிதாலிக்கு உதவியது. சுஷா வர்மா பேட்டிங்கில் சொதப்பினாலும் விக்கெட் கீப்பிங்கில் சிறப்பாகவே செயல்பட்டார். பல்வேறு சோதனைகள் தாண்டி கடந்த ஆறு மாதத்தில் 20 போட்டிகளில் 17-ல் வென்று ரன்னர் அப் வரை வந்த மிதாலி ஆர்மி நமக்குச் சொல்லும் செய்தி ஒன்று இருக்கிறது. கிரிக்கெட் என்றால் இனிமேல் தெருவில் விளையாடும் பையன்கள் மட்டுமல்ல பெண்கள் கிரிக்கெட்டும் இனி நினைவுக்கு வரவேண்டும். இனி பெண் சாதனையாளர்களை கூகுளிலோ மீடியாக்களிலோ தேடாதீர்கள். அவர்கள் உங்கள் வீட்டிலும் இருக்கலாம்.