வெளியிடப்பட்ட நேரம்: 14:03 (25/07/2017)

கடைசி தொடர்பு:14:03 (25/07/2017)

முதல் இன்னிங்ஸில் 519 ரன்... இங்கிலாந்தில் கலக்கும் இளம் இந்தியப் படை..! #U19Cricket

19 வயதுக்குட்பட்டவர்களுக்கான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்திய இளம் அணியும் இங்கிலாந்து இளம் அணியும் மோதும் இந்த டெஸ்ட் போட்டித் தொடருக்கு யூத் டெஸ்ட் போட்டி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தியா இங்கிலாந்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் ஆடவிருக்கிறது. ஜூலை 23 முதல் ஜூலை 26 வரை முதல் டெஸ்ட் போட்டி நடக்கிறது. செஸ்டர் ஃபீல்டில் உள்ள குயின்ஸ்பார்க் மைதானத்தில் முதல் டெஸ்ட் நடந்து வருகிறது. 

டாஸ் வென்ற இங்கிலாந்து அணி  ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. இந்திய அணியில் ப்ரித்வி ஷாவும்,  கேப்டன்  ஹிமான்ஷு ராணாவும் தொடக்க வீரராக களமிறங்கினார். ஹிமான்ஷு ராணா டக் அவுட்டாகி  அதிர்ச்சியளித்தார். ப்ரித்வி ஷா பௌண்டரிகளால் இங்கிலாந்து வீரர்களை சோர்வுக்குள்ளாக்கினார். அவர் 86 பந்துகளில் 86 ரன்கள் எடுத்தார். அதில் 19 பந்துகள் எல்லைக்கோட்டைத் தொட்டன. அதாவது 86 ரன்களில் 76 ரன்களை வெறும் பௌண்டரிகள் மூலமாக மட்டுமே எடுத்திருக்கிறார்.

இந்தியாவுக்காக ஆடும்  ப்ரித்வி ஷா

மன்ஜோத் கால்ரா அதிரடியாக ஆடினார். அவர் 117 பந்துகளில் 16 பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்களை விளாசி 122 ரன்கள் எடுத்தார். ரியான் பராகும் அபாரமாக ஆடி அரை சதம் எடுத்தார். விக்கெட் கீப்பர் ஹார்விக் தேசாய் பொறுப்பாக ஆடி 89 ரன்கள் எடுத்தார். தமிழகத்தைச் சேர்ந்த  ராதா கிருஷ்ணன் ஆறு ரன்களில் அவுட் ஆனார்.  133 ஓவர்கள் பேட்டிங் செய்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும்  இழந்து 519 ரன்கள் குவித்தது. இதில் 48 ரன்கள் உதிரியாக மட்டும் கிடைத்தன. இங்கிலாந்து அணி தரப்பில் ஜோஷ் டங், ஹென்றி ப்ரூக்ஸ், அமர் விர்தி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.  

இரண்டாவது நாளில் உணவு இடைவேளைக்கு பின்னர் இங்கிலாந்து அணி பேட்டிங் பிடிக்கத் தொடங்கியது. ஹாரி ப்ரூக்கை இந்திய வீரர் சிவம் மவி  எளிதில் வீழ்த்தினார். ஹாரி 46 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். இன்னொரு தொடக்க வீரரான கேப்டன் மாக்ஸ் ரோல்டன் 62 பந்துகளில் 32 ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். அவரை ஹிமான்ஷு ராணா வீழ்த்தினார். அடுத்து வந்த ஜார்ஜ் பார்லெட் இரண்டே ரன்களில் நடையை கட்டினார். நாகர்கோட்டி பந்தில் அவர் போல்டானார்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியான் படேலும் 38 ரன்களுக்கு அவுட் ஆனார். அதன் வில் ஜாக்ஸ்சும் பென் கிரீனும் இணைந்தனர். இவர்கள் மேற்கொண்டு விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். அதிரடியாக ஆடிய வில் ஜாக்ஸ் 56 பந்துகளில் ஏழு பௌண்டரிகள் இரண்டு சிக்ஸர்கள் விளாசி 46  ரன்களுடன் களத்தில் இருக்கிறார். 44 ஓவர்கள் வீசிய இந்திய வீரர்கள் 23 ரன்களை உதிரியாக விட்டுக் கொடுத்தனர்.. நேற்று மட்டும் 10 நோபால் வீசியுள்ளனர் இந்திய பௌலர்கள்.

இந்திய அணி தரப்பில் சிவம் மவி இரண்டு விக்கெட்டுகளையும், கம்லேஷ் நாகர்கோட்டி ஒரு விக்கெட்டையும், ஹிமான்ஷூ ராணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர். இப்போதைக்கு 355 ரன்கள் பின்தங்கியிருக்கிறது இங்கிலாந்து அணி. இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு ஃபாலோ ஆன் தந்து விளையாடினால் இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு இருப்பது குறிப்பிடத்தக்கது. 


டிரெண்டிங் @ விகடன்