வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (25/07/2017)

கடைசி தொடர்பு:16:00 (25/07/2017)

'அதை நாங்கள் கடந்துவிட்டோம்...' - எதைச் சொல்கிறார் அஷ்வின்?

இந்திய கிரிக்கெட் அணிக்கு புதுப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி பொறுப்பேற்றுள்ளார். இதுபற்றி பல தரப்புகளிலிருந்தும் நேர்மறை, எதிர்மறை கருத்துகள் வந்துகொண்டிருக்கும் நேரத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் இந்த விஷயத்தைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். 

அஷ்வின்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரது பதவியிலிருந்து தீடிரென்று விலகினார். இதையடுத்து, புதுப் பயிற்சியாளரை நியமிக்க முழு முனைப்புடன் செயல்பட்டது பி.சி.சி.ஐ. பின்னர், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரவி சாஸ்திரி பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இதனால், இந்திய அணியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து சுழற்பந்து வீச்சாளர் ரவிசந்தர் அஷ்வின், 'அனில் கும்ப்ளேவுக்கும் விராட் கோலிக்கும் இருந்த கருத்து வேறுபாடு மற்றும் அதைச் சுற்றி நடந்த சம்பவங்களில் இருந்து நாங்கள் எல்லோரும் அடுத்தக் கட்டத்துக்கு நகர்ந்து விட்டோம். அந்த விஷயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் முடிவு எடுத்துவிட்டனர். எனவே, அது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது. அதே சமயத்தில், ரவி சாஸ்திரிக்கு கீழ்ப் பணியாற்றுவது மிகவும் நன்றாக இருக்கப்போகிறது. அவர் கடைசியாக அணியின் மேனாஜராகப் பொறுப்பேற்றபோதுகூட, அணியில் ஒரு நேர்மறை எண்ணத்தை உருவாக்கினார். அவருடன் பணியாற்றி பல வெற்றிகளை குவிக்கக் காத்திருக்கிறோம்' என்று விளக்கமாகக் கூறியாள்ளார்.