தோல்வி ஏன்? உலகக் கோப்பை மிஸ் குறித்து மிதாலி ராஜ் விளக்கம்!

''தோத்தாலும், ஜெயித்தாலும், மீசைய முறுக்கு'' என்ற கூற்றுக்கு ஏற்ப, லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து முடிந்த மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி அமைந்திருக்கிறது; ஏனெனில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்திடம் 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து, கோப்பை வெல்லும் வாய்ப்பை இரண்டாவது முறையாக நழுவ விட்டனர். என்றாலும், அவர்கள் கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டனர்! மேலும் அரசியல் தலைவர்கள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர், ட்விட்டரில் தங்ளது வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தனர். 

ஃபைனலில் நடந்தது என்ன?

world cup

வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெறுவதற்கு, 229 ரன்கள் எனும் சுலபமான இலக்கை எதிர்கொண்டு விளையாடிய இந்திய அணி, துவக்க ஓவர்களிலேயே 2 விக்கெட்களை விரைவாக இழந்துவிட்டது! ஆனால் பின்பு ஜோடி சேர்ந்த பூனம் ராவத் (86 ரன்கள்) மற்றும் ஹர்மான் பிரித் கவுர் (51 ரன்கள்) என இருவரும் சேர்த்து, சேஸிங்கிற்கான அடித்தளத்தைச் சிறப்பாக அமைத்துக் கொடுத்தனர். ஆனால் இவர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, இந்திய அணியின் சரிவைத் தவிர்க்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் அதன் பின்னர் களமிறங்கிய மிடில்-ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மற்றும் டெயிலெண்டர்கள் அனைவரும், ஒருவித நெருக்கடியுடனும், இறுதிப்போட்டிக்கே உரிய பதற்றத்துடனே விளையாடினர். இதனால் எளிதாக எட்டிவிடக்கூடிய இலக்காக இருந்தாலும், ஆட்டத்தின் முக்கியமான நேரத்தில் தவறான ஷாட்களை அடித்து, அவரவர் விக்கெட்களைத் தாரை வார்த்ததால், இந்திய அணியால் வெற்றி பெற முடியாமல் போனது.

england

எனவே 3 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் என்ற பலமான நிலையிலிருந்து சறுக்கி, இறுதியில் 48.4 ஓவர்களில் 219 ரன்களுக்கு ஆல் அவுட்டான இந்திய அணி, தனது கடைசி 7 விக்கெட்களை, வெறும் 28 ரன்களுக்கு இழந்ததே இதற்கான சிறந்த உதாரணம்! இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தவர், இங்கிலாந்து அணியின் Medium Pace பொளலரான அன்யா ஷ்ரப்சோல். இவர் இந்திய இன்னிங்ஸின் கடைசி கட்டத்தில் வீசிய 3.1 ஓவர்களில், வெறும் 11 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 5 விக்கெட்களைக் கபளீகரம் செய்துவிட்டார்! இந்நிலையில், ''போதுமான அனுபவம் இல்லாததாலும், பயம் கலந்த நெருக்கடியுடன் விளையாடியதனாலேயே, உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து விட்டோம்'' எனக் கூறியுள்ளார், இந்திய மகளிர் அணியின் கேப்டன் மிதாலி ராஜ்.

இந்தியா

என்ன சொல்கிறார் மிதாலி ராஜ்?

நாங்கள் முன்பே சொன்னது போல, இங்கிலாந்து அணிக்கு இந்த போட்டி எளிதான ஒன்றாக அமைந்துவிடவில்லை. ஆனால் நெருக்கடிமிக்க சூழ்நிலையை அவர்கள் கையாண்ட விதம், நிச்சயம் பாராட்டுக்குரியதுதான். ஏனெனில் ஒரு நேரத்தில், இரு அணிக்குமே போட்டி சாதகமான ஒன்றாக இருந்தது. எனவே யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்ற சூழ்நிலையில் விக்கெட்களை இழந்ததால், நாங்கள் பதற்றம் அடைந்தோம். ஆனால் அவர்கள் அவர்கள் நெருக்கடியிலிருந்து மீண்டுவந்து வெற்றியை வசப்படுத்தினர். ஆதலால் பரபரப்பான தருணத்திலும், இங்கிலாந்து அணி சிறப்பாகச் செயல்பட்டதால், ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறிவிட்டது. இறுதிப்போட்டி ஏற்படுத்திய பதற்றம், எங்களைத் தோல்வியடைய வைத்துவிட்டது.

மிதாலி ராஜ்

தற்போதைய இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் பலரும் அனுபவமற்றவர்கள் என்றாலும், அவர்கள் ஒரு அணியாகச் சிறப்பாகவே செயல்பட்டுள்ளார்கள். இந்த அனுபவம், அவர்களுக்கு நிச்சயமாக எதிர்காலத்தில் உதவிகரமாக இருக்கும். என்னால் இன்னும் 2 வருடங்கள் விளையாட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் 2021-ம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கோப்பைப் போட்டிகளில், என்னை நீங்கள் அணியில் உறுதியாகப் பார்க்க முடியாது” எனப் பேசியுள்ளார், இந்த 34 வயது ரன் மெஷின்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!