வெளியிடப்பட்ட நேரம்: 08:48 (26/07/2017)

கடைசி தொடர்பு:09:07 (26/07/2017)

சுழல் மண்ணில் சாதிக்கப்போவது கோலியா, ஹெராத்தா? #IndiavsSrilanka #MatchPreview

விராட் கோலிக்கு கேப்டன்சிப்கான தேனிலவுக்காலம் முடிவடைந்து விட்டது. 2014 ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்தின் போதே கோலி கேப்டன்  பொறுப்பை ஏற்றுவிட்டார். ஆனால் அந்தத் தொடரில் இரண்டு போட்டிகளுக்குத் தோனியும் கேப்டனாக செயல்பட்டார். முழு நேர  டெஸ்ட் கேப்டன் என்ற பொறுப்பை கோலி ஏற்ற பிறகு  2015ல்  இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. 

அதன் பிறகு கோலியின் கேரியர் ராக்கெட் வேகத்தில் உச்சத்துக்குச் சென்றது. ஒன்பது ஆண்டுகளாக அயல் மண்ணில் டெஸ்ட்  தொடரைத் தோற்காத அணி எனும் சிறப்புடன் வளைய வந்த தென் ஆப்ரிக்காவை புரட்டி எடுத்தது கோலியின் படை. வெஸ்ட் இண்டீஸ் அணியை அதன் மண்ணிலேயே  சாய்த்தது. நியூசிலாந்து இங்கிலாந்து அணிகளுக்கு சம்மட்டி அடி தந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக லேசாகத் தடுமாறினாலும் தொடரை வென்று சாதித்தது. இப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் ஒன் அணியாக கம்பீரத்துடன் இருக்கிறது இந்திய அணி. இரண்டு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இப்போது மீண்டும் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறது இந்திய அணி. இம்முறை அனைத்து பார்மெட்டுக்கும் கேப்டன் கோலி தலைமையில் விளையாடவுள்ளது இந்திய அணி. 

மூன்று பார்மெட்டுக்கும் கேப்டன் பொறுப்பை ஏற்ற பிறகு கோலி  விளையாடப்போகும் முழுமையான முதல் அயல் நாட்டுச் சுற்றுப்பயணம் இது. இந்த முறை இலங்கைக்கு அடுத்தபடியாக தொடர்ந்து அயல்மண்ணில் பல டெஸ்ட் போட்டிகளை விளையாடவுள்ளது கோலி அணி. தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தொடர்களைத் தொடர்ந்து 2019 உலகக் கோப்பைத் தொடரையும் இங்கிலாந்தில் விளையாடவுள்ளது இந்தியா. ஆகவே இனி கோலிக்குச் சவாலான கேப்டன் பயணம் காத்திருக்கிறது. 

 விராட் கோலி

இலங்கைத் தொடரில் இந்தியாவின் ப்ளஸ் மைனஸ் என்ன ?

சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கையிடம் தோல்வி அடைந்தது இந்திய அணி. அதற்கு பதிலடியாக அனைத்து பார்மெட்டிலும் இலங்கையை வாஷ் அவுட் செய்ய வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் விருப்பம். டெஸ்ட் தொடரைப் பொறுத்தவரை இந்திய அணி வலுவாகவே இருக்கிறது. முரளி விஜய், லோகேஷ் ராகுல் இல்லாதது மட்டும் இந்திய அணிக்கு சறுக்கல். தவான் ஏற்கெனவே 2015ல் நடந்த இலங்கை டெஸ்ட் தொடரில் சதமடித்து அசத்தியிருந்தார். இப்போது நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். அவர் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அபினவ் முகுந்திடம் எதிர்பார்க்க ஏதுமில்லை. அவர் இந்த டெஸ்ட் தொடரில் ஹீரோ ஆவாரா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

புஜாரா நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இணைந்திருக்கிறார். கிட்டத்தட்ட ஐந்து மாதத்துக்குப் பிறகு டெஸ்ட் ஆடவிருக்கிறார். இலங்கை மண் சூழலுக்குச் சாதகமானது. நான்காவது இன்னிங்ஸ்களுக்கு  புஜாராவை பெரிதும் நம்பியிருக்கிறது  இந்திய அணி. விராட் கோலி, அஜிங்கியா ரஹானேவும் நல்ல ஃபார்மில் இருக்கிறார். பொதுவாக ஸ்லோ பிட்ச்களில் கலக்குவார் ரஹானே. அவரிடம் இருந்து நல்லதொரு சதத்தை எதிர்பார்க்கலாம். விருத்திமான் சாகா தன்னை மீண்டும் நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இலங்கை பிட்சில் 400 ரன்கள் என்பது சிரமமான காரியம். கீழ் நடுத்தர வரிசையில் களமிறங்கும் சாகா, அஷ்வின் பொறுப்பாக ஆடினால் மட்டுமே இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் நல்ல ஸ்கோரை எடுக்க முடியும். 

ஜடேஜா மற்றும் அஷ்வின் உலகின் நம்பர் ஒன் மற்றும் நம்பர் 2 பௌலர்கள். அஷ்வின் இலங்கை மண்ணில் விக்கெட்டுகளை அள்ளலாம். குல்தீப் யாதவ் பயிற்சி போட்டியில் அருமையாக வீசினார். அநேகமாக அவர்தான் இந்தத் தொடரில் மேட்ச் வின்னராக திகழக்கூடும். ஹர்திக் பாண்டியா அநேகமாக அணியில்  ஜடேஜாவின் இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது. இஷாந்த் ஷர்மா இலங்கை மண்ணில் நன்றாக பந்துவீசக் கூடியவர். ஆகவே அவருக்கு இந்தத் தொடரில் மீண்டும் இந்திய அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கலாம். இஷாந்துக்கு பக்கபலமாக ஷமி அல்லது உமேஷ் இருப்பார்கள். புவேனஸ்வர் குமார், ரோஹித் ஷர்மா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். காலே மைதானத்தில் இலங்கை கில்லி. அங்கே இந்தியா ஜெயிப்பதற்கு பெரும் போராட்டம் நிகழ்த்த வேண்டியதிருக்கலாம். இலங்கைச் சுற்றுப்பயணம் கேப்டன் கோலிக்கு நிச்சயம் எளிதானதாக இருக்காது.

எதிர்பார்க்கப்படும் பிளெயிங் லெவன் :-

அபினவ் முகுந்த், ஷிகர் தவான், புஜாரா, விராட் கோலி, அஜிங்கியா ரஹானே, விருத்திமான் சாகா, ஹர்திக் பாண்டியா/ஜடேஜா, அஷ்வின், குல்தீப் யாதவ், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் 

ரங்கனா ஹெராத்

இலங்கை அணியை இந்திய அணி  நிச்சயம் எளிதில் எடுத்துக்கொள்ளாது. 2015ல் இருந்த இலங்கை அணியில் சங்கக்காராவைத் தவிர மற்றவர்களுக்கு அனுபவம் குறைவு. இப்போதைய அணியில் உள்ள வீரர்கள் ஓரளவு சர்வதேச போட்டிகளில் பங்குபெற்ற அனுபவம் கொண்டவர்கள். இலங்கை அணியில் பேட்டிங் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் சந்திமால் இல்லாதது பெரும் பின்னடைவு. பௌலிங்கில் இலங்கை அணி பலவீனமாக இருக்கிறது.  குறிப்பாக வேகப்பந்துத் துறை நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. சுழற்பந்துத் துறை வலுவாக உள்ளது. ரங்கனா ஹெராத் பௌலிங் டிப்பார்ட்மென்ட்டுக்கு கட்டப்பாவாக இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் ஹெராத் கேப்டனாக எப்படிச் செயல்படப் போகிறார் என்பதை பார்க்க ஆர்வம் அதிகமாக உள்ளது. இலங்கை அணியில் அசேலா குணரத்னே மற்றும் நிரோஷன் டிக்வெல்லா இருவரும் கவனிக்கத்தக்க பிளேயர்கள். 

எதிர்பார்க்கப்படும் பிளேயிங் லெவன் (இலங்கை)

கருணாரத்னே, உபுல் தரங்கா, குஷால் மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்செயா டி சில்வா, அசேலா குணரத்னே, நிரோஷன் டிக்வெல்லா, திலுவான் பெரேரா, ரங்கனா ஹெராத், சுரங்கா லக்மல், லஹிரு குமாரா,  நுவான் பிரதீப் 


டிரெண்டிங் @ விகடன்