வெளியிடப்பட்ட நேரம்: 13:00 (26/07/2017)

கடைசி தொடர்பு:13:04 (26/07/2017)

சோறு மட்டுமா... வாழ்க்கையே கொடுக்கும்..! - ‘கிரிக்கெட் சோறு போடுமா?’ - புத்தக விமர்சனம்

டேவ் வாட்மோர், ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டர்; இலங்கை 1996-ல் உலகக் கோப்பை வென்றபோது அந்த அணியின் பயிற்சியாளராக இருந்தவர். பாஸ்கரன், சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு அருகே ஷூ தைக்கும் கடை வைத்திருப்பவர்; தமிழ்நாடு கிரிக்கெட் கவுன்சிலின் அதிகாரப்பூர்வ cobbler. இருவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ஆனால், இந்த இருவரையும் ஒரே மேடையில் அமர்த்தி அழகு பார்த்தது, கிரிக்கெட்.

‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஸ்போர்ட்ஸ் நிருபர் பகவதி பிரசாத் எழுதிய ‘கிரிக்கெட் சோறு போடுமா?’ புத்தகத்தை வாட்மோர் வெளியிட, அதை பாஸ்கரன் பெற்றுக்கொண்டார். பாஸ்கரன் வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கெளரவம் இது. அவர் மட்டுமல்ல, கிரிக்கெட்டால் பிழைக்கும், கிரிக்கெட்டை நம்பிப் பிழைக்கும் பலரும் அந்த விழாவில் கெளரவிக்கப்பட்டனர். 

கிரிக்கெட் சோறு போடுமா?

‘கிரிக்கெட் சோறு போடுமா?’ - இந்த வார்த்தையைக் கேட்காத தமிழர்களே இருக்க முடியாது. கிரிக்கெட் பேட்டைக் கையில் எடுக்கும் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் கேள்வி இது. ‘‘ஒரு வெள்ளிக்கிழமை தியேட்டருக்குப் படம் பார்க்கப் போயிருந்தேன். அது மொக்கைப் படம். இன்டர்வல்ல என் ஃபிரண்ட் ‘போயும் போயும் இந்தப் படத்துக்காடா என்னைக் கூட்டிட்டு வந்த? இதுல ஃபர்ஸ்ட் நாளே பார்க்கணும்னு அவசரம் வேற. சிவனேன்னு Sunday பார்த்திருக்கலாம்’னு திட்டுனான். நான் சொன்னேன். ‘முடியாது மச்சி. சண்டே ஒரு மேட்ச் இருக்கு. நான் அதை கவர் பண்ணனும். ஏன்னா, இப்போதைக்கு கிரிக்கெட்தான் எனக்கு சோறு போடுது’ன்னு சொன்னேன். அப்பதான் யோசிச்சேன். நம்மல மாதிரி கிரிக்கெட் இன்னும் எத்தனை பேருக்கு சோறு போடுது. இதைப் பத்தி ஏன் புக் எழுதக் கூடாது...’ என, புத்தகம் எழுதுவதற்கான பல்பு எரிந்த கதையை விவரித்தார் பகவதி.

கிரிக்கெட் மட்டுமல்ல, தமிழில் ஸ்போர்ட்ஸ் தொடர்பான புத்தகங்கள் சொற்பம். அதற்கு விடை சொல்லும் வகையில் வெளிவந்திருக்கும் ‘கிரிக்கெட் சோறு போடுமா’பாராட்டுக்குரியது. ஏனெனில், இந்தப் புத்தகத்தில் சச்சின் டெண்டுல்கரின் ஸ்ட்ரெய்ட் ட்ரைவ் பற்றி சிலாகிக்கவில்லை; விராட் கோலியின் கவர் ட்ரைவ் பற்றி பிரமிக்கவில்லை. 22 கெஜத்துக்கு இடையில் நடக்கும் இந்த ஆட்டத்தைப் பற்றியோ, அதன் நுணுக்கங்கள் பற்றியோ, செல்வச் செழிப்புடன் திகழும் வீரர்களைப் பற்றியோ, பி.சி.சி.ஐ பற்றியோ எந்தத் தகவலும் இல்லை. பின்னே? முழுக்க, முழுக்க, பிட்ச்சுக்கு வெளியே, மைதானத்துக்கு வெளியே, ஸ்டேடியத்துக்கு வெளியே இருந்துகொண்டு, கிரிக்கெட்டை, கிரிக்கெட் வீரர்களை இயக்கும், கவனிக்கும், அலசும், விமர்சிக்கும், மெருகூட்டுபவர்களைப் பற்றிய புத்தகம் இது. கிரிக்கெட்டால் பிழைப்பு நடத்துபவர்களின் வாழ்வியில் இது. 

கிரிக்கெட் சோறு போடுமா?

நடனத்தில் சாதனை புரிய வேண்டும் என நினைத்த ஜி.மகேந்திரன் கிரிக்கெட் வீரர்கள் மெச்சும் Throw down expert ஆனது; ஸ்ரீனிவாசன் மாதம் 50,000 ரூபாய் சம்பளத்தைத் துறந்து கிரிக்கெட் பயிற்சியாளரானது; கால்பந்து பிரியர் சென்ன கேசவலு TNCA scorer பணியில் திருப்தி அடைந்தது என பக்கத்துக்கு பக்கம் சுவாரஸ்ய சிக்ஸர்கள். அனலிஸ்ட் லட்சுமி நாராயணன், மீடியா மேனஜர் டாக்டர் ஆர்.என்.பாபா, ஃப்ரிலேன்ஸ் கிரிக்கெட்டர் முருகானந்தம், Non - qualified umpire அஜந்த் குமார், போட்டோகிராபர் சஞ்சய் உள்ளிட்ட அந்த 22 பேரின் கதையும் பணியும் பக்கா. ‘you are doing a great job’ என தோனியிடம் பாராட்டுப் பெற்ற ஷு தைக்கும் பாஸ்கரின் கதைதான், இந்தப் புத்தகத்தின் அடிநாதம். கிரிக்கெட்டர்கள் அல்லாதவர்களைப் பற்றிய இந்தத் தேடலில், ஐ.பி.எல் பிரபலம் நடராஜன் தேர்வு சரியா என்ற கேள்வி எழுகிறது. இருந்தாலும், ‘அழுக்காக, கிழிந்த சட்டை போட்டுக் கொண்டு இருக்கும் என்னைப் பலரும் ஒதுக்கினர்’ என்ற நடராஜனின் கதையைப் பதிவு செய்யாமல் போயிருந்தால்தான் ஆச்சர்யம்.

Cricket soru poduma?

இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தபின், நீங்கள் சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் கோலியை மட்டும் கவனிக்காமல், அவருக்கு Throw down போடுபவரையும் முதன்முறையாக உற்றுக் கவனிப்பீர்கள் என்பது மட்டும் நிச்சயம். ஏனெனில், கிரவுண்டில் மட்டுமல்லாது பல கோணங்களிலும் பார்வையைச் செலுத்தி, பலரிடமும் பேசிப்பழகி, தேர்ந்தெடுத்து 22 பேர்களின் கதையை... அல்லஅல்ல வாழ்க்கையைச் சொல்லி இருக்கிறார் பகவதி. அதையும் அவர்கள் சொல்லக் கேட்டு, அவர்கள் மொழியிலேயே பதிவு செய்தது ஒரு வகையில் ப்ளஸ். ஆனாலும், தமிழில் எழுதப்பட்ட இந்தப் புத்தகத்தில் எக்கச்சக்க ஆங்கில வார்த்தைகள். Why bro?  தவிர, ஆர்.மோகன், கே.சி.விஜயகுமார், துவைபயன் தத்தா என மூன்று ஸ்போர்ட்ஸ் எடிட்டர்களைப் பற்றிய கதை கொஞ்சம் உறுத்தல். அதற்குப் பதிலாக மீடியா ஆர்கனைசர்  ‛விச்சு மாமா’ போன்றவர்களைப் பற்றி விவரித்திருக்கலாமே? மற்றபடி, கல்யாண விருந்தில் சாப்பிட்ட திருப்தி தருகிறது. முக்கியமான விஷயம், இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுதியது அஷ்வின்

ஒரு 20-20 மேட்ச் முடிவதற்குள் படித்து முடித்து விடக் கூடிய இந்தப் புத்தகத்தின் முதல் பிரதியை வாங்க, கூச்சமும் பெருமையுமாக மேடைக்கு வந்தார் பாஸ்கரன். அவர் கால்களில் இருந்த ஷு பளபளவென மின்னியது. எத்தனை நாள் கனவோ! அவரைப் போன்றவர்களை இந்த வட்டத்துக்குள் கொண்டுவந்ததற்காகவே அன்லிமிடெட் லைக்ஸ் ப்ரோ!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்