வெளியிடப்பட்ட நேரம்: 15:39 (27/07/2017)

கடைசி தொடர்பு:15:39 (27/07/2017)

மூன்றாவது டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா மீண்டும் இங்கிலாந்தை வெல்லுமா?

தென்னாப்பிரிக்கா  இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடர், மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்டவற்றில் டிவில்லியர்ஸ் தலைமையில் தென்னாப்பிரிக்கா அணி விளையாடியது. டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடர்களில் 1 - 2 என்ற கணக்கில் இங்கிலாந்திடம் தொடரை இழந்தது. சாம்பியன்ஸ் டிராபியில் அரை இறுதிக்குக்கூடத் தகுதி பெறவில்லை. 

இந்நிலையில் டெஸ்ட் தொடர் துவங்கியது. லார்ட்ஸில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 211 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் ஃபாப் டு பிளசிஸ் இடம் பெறாததால் டீன் எல்கர் தென்னாப்பிரிக்க அணிக்கு கேப்டனாக பணியாற்றினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டு பிளசிஸ் அணிக்குத் திரும்பியது மட்டுமன்றி கேப்டன் பொறுப்பையும் ஏற்றார். தென்னாப்பிரிக்க அணி 340 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. 

தென் ஆப்ரிக்கா

நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்றைய தினம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் துவங்குகிறது. இங்கிலாந்து அணியில் கேரி பேலன்ஸ் மற்றும் மார்க் வுட் ஆகியோர் காயம் காரணமாக டெஸ்ட் தொடரில் இருந்து விலகியுள்ளார்கள். இவர்களுக்குப் பதிலாக ரோலண்ட் ஜோன்ஸ், டாம் வெஸ்லி ஆகியோர் அணியில் இணைந்துள்ளனர். இவர்களில் டாம் வெஸ்லி இன்று விளையாடுவது உறுதியாகியிருக்கிறது. தென்னாப்பிரிக்க அணியைப் பொறுத்தவரை கடந்த டெஸ்ட் போட்டியில் தடை காரணமாக விளையாட முடியாமல் வெளியில் உட்கார்ந்திருந்த ககிசோ ரபாடா மீண்டும் அணிக்குள் வருகிறார். அவருக்கு ஆலிவர் வழிவிடுவார் என எதிர்பாக்கப்படுகிறது. ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ள நூறாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது. லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட்டில் தோற்றதால் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் தென்னாப்பிரிக்காவும் விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது