முதல் போட்டியிலேயே பாண்டியா அரை சதம்... இந்தியா 600 ரன்கள் குவிப்பு. #INDvsSL

இந்திய அணி இலங்கை மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று டெஸ்ட் போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், ஒரு டி20 போட்டியில் ஆடுகிறது. காலே மைதானத்தில் நேற்று முதல் டெஸ்ட் தொடங்கியது. இந்திய அணியில் ராகுலுக்கு பதில் அபினவ் முகுந்த் சேர்க்கப்பட்டிருந்தார். ஒரு பௌலருக்கு பதிலாக ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியாவை களமிறங்கினார் கேப்டன் கோலி. 

டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அபினவ் முகுந்த் வழக்கம் போல சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, ஷிகர் தவான், சேவாக் பாணியில் விளாசினார். தவானின் அதிரடி ஆட்டத்தால் இந்தியாவின் ஸ்கோர் எகிறியது. தவானுக்கு பக்கபலமாக சதீஷ்வர் புஜாரா ஆடினார். தவான் 168 பந்துகளில் 31 பௌண்டரிகள் உதவியுடன் 190 ரன்களை குவித்து அவுட் ஆனார். கோலி மூன்று ரன்களில் அவுட் ஆனார். அதன் பின்னர் இணைந்த புஜாரா ரஹானே ஜோடி நிதானமாக ஆடியது. 

இந்தியா அணிக்காக ஆடும் ஷிகர் தவான்

சதேஸ்வர் புஜாரா சதம்  அடித்திருந்தார். ஆட்டநேர முடிவில் இந்தியா மூன்று விக்கெட்டுகளை இழந்து 399 ரன்களை எடுத்திருந்தது. இன்றைக்கு காலையில் புஜாராவும், ரஹானேவும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். புஜாரா 265 பந்துகளில் 13 பௌண்டரிகளை விளாசி 153 ரன்களைச் சேர்த்தார். அஜிங்கியா ரஹானே 130 பந்துகளில் மூன்று பௌண்டரிகள் உதவியுடன் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஒரு பக்கம் விக்கெட் சரிந்தாலும் அஷ்வின் பேட்டிங்கில் விளாசினார். அவர் 60 பந்துகளில் ஏழு பௌண்டரிகள் விளாசி 47 ரன்களில் அவுட் ஆனார். மூன்று ரன்களில் அரை சதத்தைத் தவறவிட்டார்  அஷ்வின். விக்கெட் கீப்பர் விருத்திமான் சாகா 16  ரன்களில் திருப்திப்பட்டார். 495 ரன்களுக்கு இந்தியா ஏழு விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் ஜடேஜாவும் 15 ரன்னில் நடையைக் கட்டினார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா, முகமது  ஷமியுடன் இணைந்து அதிரடியாக விளையாடத் தொடங்கினார். முகமது ஷமி மூன்று சிக்ஸர்களை சிதறவிட்டார். அவர் 30 பந்துகளில் 30 ரன்களை எடுத்து அவுட் ஆனார். அதன் பின்னர் கடைசி பேட்ஸ்மேனாக களமிறங்கிய உமேஷ் யாதவ் தன் பங்குக்கு 10 பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பௌண்டரி உட்பட 11 ரன்கள் எடுத்தார்.  இதற்கிடையில் ஹர்திக் பாண்டியா அபாரமாக ஆடினார். அவர் 49 பந்துகளில் ஐந்து பௌண்டரி, மூன்று சிக்ஸர்கள் உதவியுடன் அரை சதம் அடித்த  கையோடு அவுட் ஆனார். நுவான் பிரதீப் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இந்தியா முதல் இன்னிங்ஸில் 600 ரன்களைக் குவித்தது. இதற்கு முன்னதாக இதேபோல 2004-ம் ஆண்டு ராவல்பிண்டி டெஸ்ட் போட்டியில் சரியாக 600 ரன்களை எடுத்திருந்தது இந்திய அணி. இலங்கை மண்ணில் இந்தியா குவிக்கும் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் இதுவே. இந்திய அணி சார்பில் இரண்டு பேர் சதமும், இரண்டு பேர் அரை சதமும் அடித்தனர். முதல் இன்னிங்சில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆன ஒரே பேட்ஸ்மேன் கேப்டன் கோலி மட்டுமே. 

இலங்கை அணி பேட்டிங் பிடிக்கத் தொடங்கியவுடன் உமேஷ் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரிலேயே கருணாரத்னே விக்கெட்டை இழந்தது. இரண்டாவது நாள் தேநீர் இடைவேளை முடிவில் இலங்கையின் ஸ்கோர் 38/1. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!