வெளியிடப்பட்ட நேரம்: 08:56 (28/07/2017)

கடைசி தொடர்பு:10:18 (28/07/2017)

'18 ஆண்டுகளில் 10 டெஸ்ட் போட்டிகள்': மித்தாலி ராஜ் வேதனை!


மகளிர் உலகக் கோப்பையில், இறுதிப் போட்டி வரை சென்று நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறிவிட்டது இந்திய அணி. ஆனால், மகளிர் கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்திவரும் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகளுக்கும் பயம் காட்டியது இந்திய அணி. குறிப்பாக, மகளிர் கிரிக்கெட்டுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

மித்தாலி ராஜ்


 இந்தியா வந்த மகளிர் கிரிக்கெட் அணியினர், பிரதமர் மோடியை நேற்று சந்தித்தனர். அப்போது, மகளிர் அணிக்கு மோடி பாராட்டு தெரிவித்தார். பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய மித்தாலி ராஜ், "ஆண்களுக்கு ஐ.பி.எல் போட்டி இருப்பதுபோல, மகளிருக்கும் ஐ.பி.எல் தொடர் கொண்டு வர வேண்டும். இதன்மூலம், வெளிநாட்டு வீராங்கனைகளும் இந்தியா வருவர். அவர்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ள முடியும். இது, நமது வீராங்கனைகளுக்கு நம்பிக்கையை அதிகப்படுத்தும்.


ஒரு நாள் மற்றும் டி-20 போட்டிகள்தான் மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிப்பதற்கான சிறந்த தளங்கள். அதே நேரத்தில், டெஸ்ட் போட்டிகளையும் ஊக்குவிக்க வேண்டும். என்னுடைய 18 வருட கிரிக்கெட் வாழ்க்கையில், நான் 10 டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடியுள்ளேன். குறிப்பாக, இந்திய மகளிர் அணி, கடந்த 10 ஆண்டுகளில் 5 டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடியுள்ளது. அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதன்மூலம், தரமான வீராங்கனைகளை உருவாக்கலாம்" என்றார்.