வெளியிடப்பட்ட நேரம்: 10:31 (30/07/2017)

கடைசி தொடர்பு:10:36 (30/07/2017)

மித்தாலிக்கு நிலம் தருவதாக வாக்களித்து 12 ஆண்டுகளாக ஏமாற்றிய ஆந்திர அரசு!

ந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜூக்கு நிலம் தருவதாக வாக்களித்து
12 ஆண்டுகளாகியும் வழங்கப்படாத விஷயம் இப்போது தெரியவந்துள்ளது.

மிதாலியை ஏமாற்றிய ஆந்திர அரசு

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் மித்தாலி ராஜ் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இவர், ஹைதராபாத் நகரில் செட்டில் ஆகிவிட்டார். தந்தை பெயர் துரைராஜ், தாயார் லீலா. மித்தாலியின் தந்தை துரைராஜ் ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் விமானப்படையில் பணியாற்றி வந்தார். அப்போதுதான் மித்தாலி பிறந்தார். இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பணியாற்றிய துரைராஜ் கடைசியாக ஹைதராபாத் நகரில் நிரந்தரமாகக் குடியேறினார். 

கிரிக்கெட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட மித்தாலி ராஜ் 16 வயதிலேயே இந்தியாவுக்காக சர்வதேசப் போட்டியில் களமிறங்கியவர். தற்போது 34 வயதை எட்டியுள்ள  இவர் தலைமையில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இரு முறை உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இதற்கு முன், 2005-ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி தோல்வியுற்றது. அந்தச் சமயத்தில் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி ஆந்திர முதல்வராக இருந்தார். மித்தாலியை ஊக்குவிக்கும் வகையில்
ரூ.5 லட்சம் பரிசுத் தொகை வழங்கினார். அத்துடன் 500 சதுர மீட்டர் இடம் அளிக்கப்படும் எனவும் அறிவித்தார். 

மித்தாலிக்கு வழங்குவதற்காக இடம் எல்லாம் பார்த்தார்கள். எனினும், அறிவித்தபடி நிலம் வழங்கப்படவில்லை. அவரின் பெற்றோர் பலமுறை ஆந்திர அரசு அதிகாரிகளைச் சந்தித்து முறையிட்டும் பலன் இல்லை. மித்தாலியின் தாயார் லீலா ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியை நேரடியாகச் சந்தித்து நிலம் வழங்கப்படாதது குறித்தும் முறையிட்டார். நடவடிக்கை எடுப்பதாக ஒய்.எஸ்.ஆர் உறுதியளித்தார். 2009-ம் ஆண்டு, விமான விபத்தில் ஒய்.எஸ்.ஆர் இறந்துவிடவே வாக்குறுதி அப்படியே காற்றில் பறக்கவிடப்பட்டது. பின்னர், ஆந்திர முதல்வராக கிரண்குமார் ரெட்டி பொறுப்பேற்றார். இவரை மித்தாலி ராஜ் நேரடியாகச் சந்தித்து, அரசு அறிவித்தபடி நிலம் வழங்க வேண்டுகோள் விடுத்தும் எந்தப் பலனும் ஏற்படவில்லை.

Mithali Raj

கிட்டத்தட்ட 12 ஆண்டுகள் ஆகியும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அதேவேளையில், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸாவுக்கு ரூ.2 கோடி, ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை சிந்துவுக்கு ரூ.5 கோடி மற்றும் ஆயிரம் சதுர அடி நிலத்தை ஆந்திர அரசு பரிசாக வழங்கியுள்ளது. சிந்துவுக்கு அரசு வேலையும் அளிக்கப்பட்டுள்ளது. அதே மாநிலத்தில் வசித்து வரும் மித்தாலியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்தான் நடத்துகிறது ஆந்திர அரசு.

இங்கிலாந்து உலகக் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதையடுத்து, தெலங்கானா அரசு மித்தாலிக்கு ரூ.1 கோடி ரொக்கத் தொகையும் நிலமும் வழங்கப்படும் என நேற்று அறிவித்துள்ளது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகராவை மித்தாலி நேற்று பெற்றோருடன் சந்தித்தார். அப்போது, தெலங்கானா மற்றும் ஹைதராபாத் நகருக்குப் புகழ் சேர்த்துள்ளதாக சந்திரசேகர் ராவ் அவரிடம் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஹைதராபாத் பேட்மின்டன் சங்கத் தலைவர் சாமுண்டேஷ்வரராஜு, மித்தாலி ராஜுக்கு பி.எம்.டபிள்யூ கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார். தற்போது ரயில்வேயில் பணிபுரிந்து வரும் மித்தாலிக்கு (Chief Office Superintendent to Officer on Special Duty - Sports) பதவி உயர்வும் கிடைத்துள்ளது. 

மித்தாலியை ஆந்திர அரசு ஏமாற்றியிருந்தாலும் தெலங்கானா மாநிலம் கைகொடுத்துள்ளது!

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்