வெளியிடப்பட்ட நேரம்: 16:38 (29/07/2017)

கடைசி தொடர்பு:17:06 (29/07/2017)

காலே டெஸ்ட்: சொந்த மண்ணில் இலங்கையை வீழ்த்தியது இந்தியா!

காலேவில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் இலங்கை அணி வீழ்ந்தது அந்நாட்டு ரசிகர்களை வேதனையடைய வைத்துள்ளது.

இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் தவான் அபாரமாக விளையாடி 190 ரன்கள் விளாசினார். புஜாரா 153 ரன்கள் அடித்து அசத்தினார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 600 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி 291 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. பெரைரா 92 ரன்னும் முன்னாள் கேப்டன் மேத்யூஸ் 83 ரன்னும் விளாசினர்.

பாலோ-ஆன் ஆன இலங்கை அணியை தொடர்ந்து விளையாட விடாமல்  இந்தியா இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. கேப்டன் கோலி 103 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 240 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக அறிவித்தார் கோலி. 550 ரன்கள் வெற்றி இலக்காக இலங்கை அணிக்கு நிர்ணயித்தது இந்தியா. தொடக்க வீரர் கருணாரத்னே அபாரமாக விளையாடி 97 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்டார். பின்னர் வந்த தரங்கா 10 ரன்னிலும் குணதிலகே 2 ரன்னிலும் மெண்டீஸ் 36 ரன்னிலும் மேத்யூஸ் 2 ரன்னிலும் டிக்கெல்லா 67 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பிரதீப், குமரா ஆகியோர் டக் அவுட் ஆனார்கள். பெரைரா கடைசிவரை ஆட்டம் இழக்காமல் 21 ரன்னில் களத்தில் இருந்தார். முடிவில் இலங்கை அணி 245 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. முடிவில் 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. நான்காவது நாளிலேயே இந்த போட்டியை இந்திய அணி முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது.

இந்தியா தரப்பில் அஸ்வின், ஜடேஜா தலா 3 விக்கெட்டும் யாதவ், முகமது சமி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். ஆட்ட நாயகனாக தவான் தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது. இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே இந்திய அணி வீழ்த்தியுள்ளது அந்நாட்டு ரசிகர்களை வேதனையடைய வைத்துள்ளது. ஏற்கெனவே இலங்கையை அதன் சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரை 3-2 என்ற கணக்கில் ஜிம்பாப்வே அணி கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.