“சிந்து, அடுத்த மாதம் துணை கலெக்டராக பதவி ஏற்பார்!” சிந்துவின் அம்மா பெருமிதம் #Sindhu | PV Sindhu to take charge as Deputy Collector next month!

வெளியிடப்பட்ட நேரம்: 14:50 (30/07/2017)

கடைசி தொடர்பு:14:51 (30/07/2017)

“சிந்து, அடுத்த மாதம் துணை கலெக்டராக பதவி ஏற்பார்!” சிந்துவின் அம்மா பெருமிதம் #Sindhu

சிந்து

 

ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் பெருமையை உலகுக்குச் சொன்னவர் பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து. ஆந்திரப் பிரதேச மாநிலம் சார்பாக குரூப்-1 பிரிவில், துணை கலெக்டராகப் பதவியேற்கும் அரசாணையை, கடந்த வெள்ளிக்கிழமை, முதல்வர் சந்திரபாபு நாயுடு வழங்கினார். இந்த அரசாணையைப் பெற்றுக்கொண்ட பி.வி.சிந்து, “இந்த நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் என் கடமையைத் தொடர்ந்து செய்வேன்” என்று உற்சாகமாகத் தெரிவித்தார். 

பி.வி.சிந்து

21 வயதாகும் சிந்து, தற்போது பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் உதவி மேலாளராக இருக்கிறார். ரியோ ஓலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு அப்போது, மூன்று கோடி ரூபாய் ரொக்கப் பணமும் அமராவதி பகுதியில் ஒரு குடியிருப்பு வீடும், மாநில அரசுத் துறையில் குரூப் - 1 பிரிவில் அரசு வேலையும் வழங்கப்படுவதாக ஆந்திர அரசு அறிவித்திருந்தது. அதேபோல, தெலங்கானா மாநிலம் சார்பில், ஐந்து கோடி ரூபாய் ரொக்கப் பணமும், ஒரு வீடும் வழங்கப்பட்டது. ஆனால், பி.வி.சிந்து ஹைதராபாத்தில் பிறந்து வளர்ந்தவர். அதனால், ஆந்திரப் பிரதேச மாநில அரசு அளித்த அரசு வேலையை ஏற்றுக்கொண்டார். துணை கலெக்டராக பி.வி.சிந்து பதவியேற்றதும், சிறப்பு முதன்மை செயலாளர் (வருவாய்த் துறை) மன்மோகன் சிங் தலைமையில், மூன்று வருடம் பயிற்சி மேற்கொள்வார். 

சிந்துஇதுபற்றி சிந்துவின் அம்மாவிடம் தொடர்புகொண்டு கேட்டோம். “இது மிகவும் நெகிழ்வான தருணம். சிந்துவின் கடின உழைப்புக்கும் அர்ப்பணிப்பும் கிடைத்த அங்கீகாரமாக இதைப் பார்க்கிறோம். அவள் குழந்தையாக இருக்கும்போதே,  சின்னச் சின்ன விஷயங்களைக்கூட அக்கறையோடு செய்வாள். அவள் விளையாடும்போது  எதையும் விளையாட்டாக எடுத்துக்க மாட்டாள். அவளைப் பத்தி, அவளிடம்  யாராவது குறை சொன்னால், அதைச் சரிசெய்துக்கொள்வாள்.

நெருக்கடியான நேரங்களில் அவள் ரொம்ப அமைதியாக இருப்பதைப் பார்த்திருக்கேன். விளையாட்டுல அவள் காட்டிய தீவிரத்துக்கு கிடைச்ச பரிசுதான் எல்லாமே. அடுத்த மாதம் துணை கலெக்டராக பதவியேற்பாள். செப்டம்பர் மாதம், ஆல் இந்திய சீனியர் ரேங்கிங் பேட்மின்டன் போட்டி தொடங்குகிறது. அதற்காக, பேட்மின்டன் பயிற்சியில் கவனம் செலுத்திவருகிறாள். பி.வி.சிந்துவின் அடுத்த இலக்கு, 2020-ம் ஆண்டு டோக்கியோவில் நடக்கவிருக்கும் ஓலிம்பிக்ஸ் போட்டிதான். இந்தப் போட்டியில் அவர் தங்கம் வெல்வார் என்று நம்புகிறோம்'' என்றார்.

உலக பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், தங்கம் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. கடந்த பிப்ரவரி மாதம், இந்தியன் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மரின் என்பவரைத் தோற்கடித்து, உலகப் பெண்கள் பேட்மின்டன் தரவரிசையில், இரண்டாம் இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2016-ம் ஆண்டு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதும், 2015-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும், 2013-ம் ஆண்டு அர்ஜூனா விருதும் பெற்றிருக்கிறார் பி.வி.சிந்து. 

பெண்களுக்கு விளையாட்டுத்துறையில் பிரகாசமான வாய்ப்புகள் இருக்கின்றன என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார் சிந்து.  மற்ற விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும்  பெண்களை அவ்வபோது ஊக்குவிக்கும் விதமாக, சமீப காலமாக, கால்பந்து, மகளிர் கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளைக் குறித்து தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் ஆர்வமுடன் பதிவிட்டுவருகிறார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்