தலைவன் சற்குணம் விளாசல்... கோவையை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்! #TNPLUpdate

சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வுசெய்த கோவை அணிக்கு  சூர்ய பிரகாஷ், அனிருத் சீதா ராம் ஓபனர்களாக இறங்கினர். கோவை அணியில் சூர்ய பிரகாஷ் ஆட்டத்தைத் தவிர சொல்லிக்கொள்ளும்படி வேறு எந்த பேட்ஸ்மேன்களும் ரன் குவிக்கவில்லை. ஓபனர் அனிருத் சீதா ராம் 6 ரன்களில் பெவிலியன் திரும்பினார். 

TNPL

ஒன்டவுன் இறங்கிய ரஞ்சன் பால் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்தது. டீன் ஏஜ் இளைஞனுக்குரிய துடிப்புடன் இருந்த ரஞ்சன் பால், ஜோயல் ஜோசப் வீசிய 8-வது ஓவரில் பளிச் பளிச்சென அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் அடித்து, ‘அட...’ போட வைத்தார். ஆனால், அந்த வியப்பு நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பெரிய இன்னிங்ஸ் ஆடத் தவறி 18 ரன்களுடன் திருப்திபட்டுக்கொண்டார். 

அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்ய பிரகாஷ் 46 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார். அவர் 6 ரன்களிலேயே அவுட்டாகி இருக்க வேண்டியவர்.  மூன்றாவது ஓவரில் சூர்ய பிரகாஷ் கொடுத்த எளிதான கேட்ச்சை கோட்டை விட்டார் சதீஷ். இருந்தாலும், கோவை தரப்பில் அவர் அடித்ததுதான் அதிகபட்ச ஸ்கோர். 

இருப்பது மூன்றே ஓவர். 18வது ஓவரை வீசினார் லெஃப்ட் ஆர்ம் ஸ்பின்னர் சாய் கிஷோர். அந்த ஓவரில் முகமது  ஒரு கட் ஷாட் அடித்தார். அது பாயின்ட் திசையில் பவுண்டரிக்குச் சென்றது. எதிர்முனையில் இருந்த ரோகித், பெரிய ஷாட் ஆட நினைத்து யோ மகேஷ் பந்தில் சதீஷிடம் கேட்ச் கொடுத்து, 18 ரன்களுடன் வெளியேறினார். அடித்து ஆட வேண்டிய நெருக்கடியில் இருந்த முகமது, ஒரு ராக்கெட் பறக்க விட்டார். அதை லாங் ஆஃப் திசையில்  அலெக்ஸாண்டர் நழவவிட்டார். கேட்ச் மிஸ் ஆனது மட்டுமின்றி பந்து பவுண்டரிக்கும் பறந்தது. முகமதுவுக்கு அதிர்ஷ்டம்.  அடுத்து யோ மகேஷ் நோ பால் வீசினார். ஆனால், அதை முகமது மிஸ் செய்தவர், எக்ஸ்ட்ரா கவரில் ஃபிளாட்டாக ஒரு சிக்ஸர் விரட்டினார். இதை ‛shot of the innings’ என்று சொல்லலாம். எஸ், ரசிகர்களின் கரவொலியே அதற்கு சான்று. 20 ஓவர்களின் முடிவில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்தது. 

TNPL

வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்ட சேப்பாக்கம் கில்லிஸ், எளிதில் சேஸ் செய்யும் என கணிக்கப்பட்டது. அதற்கேற்ப முதல் 8 ஓவர் வரை விக்கெட் விழவில்லை. கோவை அணி உருட்டிக்கொண்டே இருந்தது எனில், பவர் ப்ளேவில் வாணவேடிக்கை நிகழ்த்தினர் சேப்பாக் ஓபனர்கள். கோபிநாத் மற்றும் தலைவன் சற்குணம் இருவரும் கேப் கிடைக்கும்போதெல்லாம் பவுண்டரி, சிக்ஸர் அடிக்கத் தவறவில்லை. உச்சமாக, சிவக்குமார் பந்தில் சற்குணம் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 66 ரன்கள் எடுத்திருந்தபோது கோபிநாத் (37) ரன்களில் வெளியேறினார். சாய் கிஷோர் வந்ததும் வராததுமாக, எக்ஸ்ட்ரா கவரில் இருந்த ஃபீல்டரிடம் தூக்கிக் கொடுத்து டக் அவுட்டில் நடையைக்கட்டினார். ஆக, சையத் முகமதுவுக்கு ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகள்.

சசிதேவ், சற்குணம் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தது. அனுபவம், நேர்த்தியான ஆட்டம். அதேநேரத்தில் முகமது பந்தில் தேர்ட்மேன் திசையில்  ஒரு பவுண்டரி, லாங் ஆஃப் திசையில் ஒரு சிக்ஸர் என நளினமான ஷாட்களில் மிரட்டினார் சசிதேவ். 42 பந்துகளில் 50 ரன்கள் தேவை என்ற நிலை. சசிதேவ் ஒரு லைன் பிடித்து முன்னேறுவதைப் பார்த்து, சிங்கிள் தட்டிவிட்டு வாய்ப்பளித்தார் சற்குணம். இந்த பார்ட்னர்ஷிப்பைப் பிரிக்க கே.விக்னேஷ் கையில் பந்து கொடுக்கப்பட்டது. முதல் பந்திலேயே சசிதேவ் விக்கெட்டை எடுத்தார். சசிதேவ் 31 ரன்கள் எடுத்திருந்தார். சசிதேவ் அவுட்டானதும் மீண்டும் சார்ஜ் எடுத்துக் கொண்ட சற்குணம், அரைசதம் நோக்கி முன்னேறினார். அணியின் இலக்கும் மெள்ள மெள்ள நெருங்கியது. ஆனால், சதீஷ் 7 ரன்களில் தேர்ட்மேன் ஏரியாவில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 

TNPL

ஹரிஷ் குமார் வீசிய 17-வது ஓவரை ‛வச்சு செஞ்சார்’  வசந்த் சரவணன். அதிலும் மிட் விக்கெட் ஏரியாவில் பறந்த சிக்ஸருக்கு மைதானேமே ஹோவென ஆர்ப்பரித்தது. ஒரு வழியாக 19வது ஓவரில் தலைவன் சற்குணம் 50 அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார். சேப்பாக் சூப்பர் கில்லிஸ் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!