நகம் கடிக்க வைத்த த்ரில் மேட்ச்... யு மும்பா யூ டர்ன் போட்டு வென்றது எப்படி? #ProKabaddi #MatchReview | U Mumba beat Haryana Steelers in Pro Kabaddi League

வெளியிடப்பட்ட நேரம்: 12:46 (31/07/2017)

கடைசி தொடர்பு:12:46 (31/07/2017)

நகம் கடிக்க வைத்த த்ரில் மேட்ச்... யு மும்பா யூ டர்ன் போட்டு வென்றது எப்படி? #ProKabaddi #MatchReview

இந்த சீசனில் தனது முதல் போட்டியில் புனே அணியிடம் தோற்றிருந்தது மும்பை அணி. இந்நிலையில் இரண்டாவது போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியை  நேற்று சந்தித்தது யு மும்பா. ஹரியானாவுக்கு இதுதான் முதல் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது. ஹரியானா அணியைப் பொறுத்தவரையில் சுரேந்தர், மோஹித் சில்லர் என இரண்டு  முக்கியமான வீரர்கள் இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் இணைந்து இதற்கு முன்னர் பல சீசன்களில் விளையாடியிருக்கிறார்கள்.  இவர்கள் இருவருக்குமே எதிரணி கேப்டன் அனுப்குமாரோடு பல போட்டிகளில் ஆடிய பரிச்சயம் உண்டு. மும்பை அணியைப் பொறுத்தவரை அவர்களுக்கு எல்லாமே கேப்டன் அனுப் குமார்தான். 

Pro kabaddi

ஹைதராபாத் கச்சிபோலி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த Pro Kabaddi League மேட்ச்சில் முதல் ரெய்டு சென்றவர் அனுப்குமார். மேட்ச் ஐதராபாத்தில் நடந்தாலும் அனுப் குமாருக்கு ஆதரவுக் குரல்  மட்டும் ரெய்டுக்கு ரெய்டு அதிகரித்துக் கொண்டே இருந்தது.  அவர் ஒரு புள்ளியை எடுத்து வந்தார்.  பதிலுக்கு ஹரியானாவும் ரெய்டில்  இரண்டு  புள்ளிகளைப் பெற்றது. மும்பை அணி வீரர் காசிலிங் அடாகே அட்டகாசமாக  இரண்டு புள்ளியை எடுத்தார். களத்துக்குள் ஆழமாகச்  சென்று போனஸ் புள்ளிகளை அள்ளி வருவதில் கெட்டிக்காரர் அவர். இந்த முறை போனஸ் லைனில் கெத்தாக காலை வைத்தது மட்டுமின்றி, எதிரணி வீரர் விகாஸையும்  அவுட் ஆக்கியிருந்தார்.

ஸ்கோர் 5-4 என இருந்த போது  ஹரியானா ஒரு புள்ளி பின்தங்கியிருந்தது. அப்போது Do or Die ரெய்டில் ஹரியானாவுக்குப் புள்ளிகள் எடுத்தே ஆக வேண்டிய கட்டாயம். வசீர் சிங் ரெய்டுக்குச் சென்றார்.  வலது முனையில் நின்றுகொண்டிருந்த சுரிந்தர் சிங் ஓடிவந்து வசீரின் வலது தொடையில் உடும்புப்பிடி போட்டார். மற்ற வீரர்களும் துரிதமாகச் செயல்பட வசீர் அவுட். அடுத்த Do or Die ரெய்டில் சுரேந்தர் மும்பையின் எல்லைக்குள் நுழைந்தார். அவர் புத்திசாலித்தனமாக  இரண்டு புள்ளிகளை எடுத்து வந்தார். அதில் யூ மும்பாவின் துடிப்பான பீல்டர் சுரீந்தர் காலியானார். இப்போது ஹரியானாவின் கை ஓங்கியது. 8-9 என்றானது ஸ்கோர். 

Pro kabaddi

ஒரு புள்ளி பின்தங்கியிருந்த நிலையில் பதற்றத்தில் தவறுகள் செய்ய ஆரம்பித்தது யு மும்பா. வரிசையாக  புள்ளிகளை இழக்கத் தொடங்கியது எனினும் கேப்டன் அனுப் மட்டும்  கூலாக விளையாடினார். ரெய்டில் தவளை போலத் தாவி கோட்டைத் தொட்டு புள்ளிகளைப் பெற்றார். மீண்டும் ஒரு Do or Die ரெய்டு ஹரியானாவுக்கு. இம்முறை வசீர் சிங் புள்ளிகள் வேட்டைக்குச் சென்றார். மும்பையின் எல்லையில் அனுப்குமாரும், ஜோகிந்தர் சிங்கும்  புள்ளிகள் வேண்டுமே என்ற பசியோடு காத்திருந்தார்கள். இருவரும் ஆளுக்கொரு முனையில் நின்றுகொண்டிருந்தார்கள். கபடி... கபடி... எனப் பாடிக்கொண்டே வந்த வசீர் ஜோகீந்தர்தான் சற்றே பலவீனமானவர் என்பதை உணர்ந்து  அவர் இருக்கும் பகுதியில் நன்றாக இறங்கினார். இரைக்காகக் காத்திருந்த கொக்குப் போல ஜோகீந்தர் ஒரு அற்புதமான டேக்கில் செய்தார்.

போனஸ் லைனுக்குள் வசீர் வலது காலை வைக்க, ஜோகீந்தர் தனது இடது கையால்  வசீரீன் வலது காலின் கணுக்கால் பகுதியை இறுகப்பற்றினார். வசீர் தப்பிக்க முயலவே தனது வலது கையால் வசீரின் இடதுகாலின் கனுக்காலையும் பிடித்து ஒருசேர இரண்டு கால்களையும் இழுத்தார். ஆனால் வசீர் லேசுபட்ட ஆள் இல்லை அல்லவா!  அவர் நீச்சல் தெரியாதவன் தண்ணீரில் மூழ்கினால் தப்பிக்க எப்படித் துடிப்பானோ அப்படித் துள்ளினார். அதற்குள் அனுப்குமார் வந்து ஆளை அமுக்கினார். துள்ளி அடங்கிய வசீர் சிங் அவுட். சூப்பர் டேக்கிலில் இரண்டு புள்ளிகள்  மும்பைக்குக் கிடைத்தது என அதன்  ரசிகர்கள் உற்சாகமடைவதற்குள்  அம்பயர்,  ஹரியானா  அணிக்கு ஒரு புள்ளிகள் என அறிவித்தார். காரணம் என்னவெனில் வசீர் போனஸ் லைனுக்குள் வந்தபோதே ஜோகிந்தர் கோர்ட்டின் எல்லைக்கு வெளியே ஒருமுறை தனது காலை வைத்துவிட்டார்.  அருமையான டேக்கில் வீணானது. புள்ளியும் போனது. இப்போது அணியில் இருந்தே ஒரே ஆள்  அனுப் மட்டுமே. 

Pro kabaddi

அனுப் சூப்பர் ரெய்டில் புள்ளிகள் எடுக்கப் பார்த்தார். ஆனால் அங்கே பிடிபட்டு வீழ்ந்தார். மும்பை ஆல் ஆவுட் ஆனது. முதல் பாதியில் கடைசி நேர தவறுகளால் 11 - 15 எனப் பின்தங்கியது  யு மும்பா. முதல் பாதியில் வெறும் இரண்டு டேக்கில் புள்ளிகள் மட்டுமே  எடுத்திருந்தது மும்பை அணி. குறிப்பாக டிஃபென்டர் சுரேஷ் குமார் பலவீனமான ஆளாகத் தெரிந்தார். அவரைக் குறிவைத்து புள்ளிகளை அள்ளியது ஹரியானா. இரண்டாவது பாதி தொடங்கியதும் அனுப் குமார் சில நிமிடங்களில் அவுட் ஆனார். மளமளவென புள்ளிகளைப் பெற்றது ஹரியானா. அனுப் குமார்


12 -19 என ஸ்கோர் இருந்தபோது ஹரியானா எளிதில் வென்றுவிடும் என்றே பலரும் கருதினார்கள். மும்பையின் ஸ்டார் பிளேயர்கள் வெளிய இருந்த நிலையில் மும்பையின் எல்லைக்குள் மூன்று பேர் மட்டுமே இருந்தனர். வசீர் சிங் ரெய்டுக்குச் சென்றார். இம்முறை அவரை ஓடி வந்து  அட்டகாசமாக டேஷ்  அடித்து வெளியேற்றினார் சுரேஷ் குமார். முதல் பாதியில் சொதப்பிய சுரேஷா இப்படி ஆடுவது என ஆச்சர்யமாக இருந்தது. சூப்பர் டேக்கில் காரணமாக மும்பை அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தன. மும்பையின் ரெய்டர் காசிலிங் இப்போது ஹரியானா எல்லையில் வேட்டையாடச் சென்றார். அவர்  இரண்டு பேரை வெளியேற்றினார். அதன்பின்னர் அனுப்குமார் ரெய்டுக்குச் சென்றார். அவரும் தன் பங்குக்கு இரண்டு பேரை வெளியேற்றினார்.

அனுப்குமாரின் 'வாவ்' ரெய்டால் ஹரியானா ஆல் ஆவுட் ஆனது. தொடு புள்ளிகளோடு ஆல் அவுட் செய்ததற்கான புள்ளிகளும் இப்போது மும்பை அணிக்குக் கிடைத்தது. இப்போது ஸ்கோர் 22 - 20 என்றானது. இரண்டே நிமிடங்களில் மேட்ச்  மாறியது. அரங்கில் சுவாரஸ்யம் கூடியது. ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்தார்கள். உன்னிப்பாகக் கவனிக்க ஆரம்பித்தார்கள். 25 -22  என மேட்ச்  Close ஆக சென்றது. அப்போது வசீர் சிங் ஒரு ரெய்டு புள்ளியைப் பெற்றுத்தந்தார்.  25 - 23, 25 - 24 , 26 - 24, 27 - 24, 28 - 24, 28 -25 என ஸ்கோர் கார்டு ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிறவைத்தது. ஆட்டம் முடிய  இரண்டரை நிமிடங்கள் இருந்தன. இப்போது அனுப் குமார் ரெய்டுக்குச் சென்றார். அவர் வேண்டுமென்றே காலத்தைக் கடத்தி வெற்று ரெய்டு செய்தார். புள்ளிகள் வென்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஹரியானா தீபக் குமாரை ரெய்டுக்கு அனுப்பியது. அவர் அவுட். ஸ்கோர் 29 -25.  இப்போது மும்பை வீரர் காசிலிங் ரெய்டில் பிடிபட்டார். ஸ்கோர் 29 - 26 என்றானது. இன்னும் ஒரு நிமிடம் மிச்சமிருந்த நிலையில் வசீர் சிங் ரெய்டுக்குச் சென்றார். அவர் போனஸ் புள்ளியைப் பெற்றது மட்டுமின்றி இன்னொரு ரெய்டு புள்ளியையும் பெற்றார். ஸ்கோர் 29 - 28. 

இன்னும் முப்பது நொடிகள் மட்டுமே இருந்த நிலையில், மேட்சில் உச்சபட்சப்  பரபரப்பு தொற்றியது . அனுப் குமார் ரெய்டு சென்றார். அவர் புள்ளிகள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆடவே இல்லை. அதே சமயம் அவரை அவுட் ஆக்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் ஹரியானாவுக்கு. அனுப் குமார் ரொம்பவே கூலாக கிரீஸுக்கு அருகிலேயே நின்று கொண்டு எதிரே இருந்த திரையில் நேரத்தைக் கவனித்துக் கொண்டிருந்தார். நொடிகள் குறைந்து கொண்டே வந்தன. ச்சே ..பாஞ்ச்...ச்சார்...தீன்..தோ ...ஏக்  - U MUMBA WON BY ONE POINT. அரங்கம் ரசிகர்களின் கூக்குரலால் ஆட்டம் கண்டது.  ஒரு நல்ல வீரருக்கு எப்போது தாக்க வேண்டும் என்பதை விட எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்பது தெரியும். எல்லோரும் நன்றாக ஆடுவார்கள். ஆனால், புத்திசாலிகள்தான் சாம்பியன்கள் ஆவார்கள். அனுப் குமார் புத்திசாலி; சாம்பியன்! 


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close