பெங்களூரு காளைகளிடம் 'மகிழ்மதி' தெலுங்கு டைட்டன்ஸ் பணிந்தது எப்படி? #ProKabaddi

புரோ கபடித் (Pro Kabaddi) தொடரின் ஐந்தாவது சீசனில் நேற்று நடந்த இரண்டாவது போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பெங்களூரு புல்ஸ் அணியும் மோதின. ஹைதராபாத் கச்சிபோலி உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று இரவு ஒன்பது மணிக்கு மேட்ச் தொடங்கியது. 

Pro Kabaddi TELUGU TITANS VS BENGALURU BULLS

தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது  நாளாக மேட்ச் ஆடியது. ஏற்கெனவே ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் இருந்த தெலுங்கு அணி இந்த மேட்சில் சற்றே சோர்வுடன்  களம் கண்டது. பெங்களூரு அணிக்கு இதுதான் முதல் மேட்ச் என்பதால் உற்சாகமாக களம் இறங்கியது. பெங்களூரு அணியிடம்  தன்னம்பிக்கையும் துடிப்பும் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக கேப்டன் ரோஹித் குமார் பாசிட்டிவ் மனநிலையோடு அக்ரசிவாகவும் இருந்தார். தெலுங்கு அணி மைதனதுக்குள் லைன் அப்க்கு வந்தபோது ரசிகர்கள் பெரும் ஆதரவு தந்தனர். நேற்று ஞாயற்றுக் கிழமை என்பதால் அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தார்கள். 

பெரும் ரசிகர் திரள் மத்தியில் தெலுங்கு அணி அபாரமாக ஆடி மேட்ச்சை ஜெயிக்கும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் மேட்ச் தொடங்கியதுமே தடதடவென கியரை மாற்றி புள்ளிகளை ஏற்றிக்கொண்டே போனது பெங்களூரு. தெலுங்கு அணி மிகவும் பலவீனமான அணி போல காட்சியளித்தது. பெங்களூருவின் யுக்திகளைப் புரிந்து கொள்வதற்குள் மேட்ச் பெங்களூரு பக்கம் சாய்ந்தது. முதல் பத்து நிமிடங்களிலேயே 12 - 5 என முன்னிலை பெற்றது பெங்களூரு அணி. முதல் பாதி முடிவில் 15 - 10 என ஐந்து புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. 

Pro Kabaddi TELUGU TITANS VS BENGALURU BULLS

இரண்டாவது பாதியிலும் மேட்ச் பெங்களூருவின் பக்கமே இருந்தது. தனது கட்டுப்பாட்டில் இருந்த தெலுங்கு அணியை மேலும் மேலும் இறுக்கியது ரோஹித் படை. எந்தவொரு தருணத்திலும் தெலுங்கு அணி துள்ளி எழுந்து பெங்களூரு காளைகளுக்குச் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சிந்தாமல் சிதறாமல் மேட்சை முடித்து பெங்களூரு. ஆட்ட நேர முடிவில் 31 - 21 என்ற கணக்கில் வென்றது பெங்களூரு புல்ஸ். தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு இது தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வி. 

பெங்களூரு அணியின் யுக்தி அட்டகாசமாக இருந்தது. இம்முறை ரெய்டு, டிஃபென்டிங் இரண்டிலும் கவனம் செலுத்தியது. குறிப்பாக தொடர்ச்சியாக புள்ளிகளை எடுக்க முனைப்பு காட்டியது. தெலுங்கு அணியின் கேப்டன் ராகுல் சவுதரி பிரம்மாதமான ரெய்டர். நேற்றைய தினம் புரோ கபடியில் தனது 500வது புள்ளியை எடுத்தார் ராகுல். இவரைத் தவிர வேறு யாரும் இந்தச் சாதனையை இதுவரை செய்ததில்லை. பெங்களூரு அணி நேற்று ராகுலை அதிக நேரம் களத்தில் இருக்கவிடவில்லை. எப்போதெல்லாம் ராகுல் களத்துக்குள் வருகிறாரோ அப்போதெலாம் அவரை வெளியேற்றுவதையே முக்கியமான குறிக்கோளாக வைத்திருந்தது. ஒரு பக்கம் ரெய்டில் புள்ளிகளைப் பெறுவது, இன்னொரு பக்கம் எதிரணி வீரர் தனது எல்லைக்குள் வரும்போது கிடுக்கிப்போடுவது , அதே சமயம் எதிரணியின் வலுவான வீரரையும் வெளியேற்றுவது என திட்டத்தை கச்சிதமாக செய்து முடித்தது பெங்களூரு அணி.  

Pro Kabaddi TELUGU TITANS VS BENGALURU BULLS

நேற்றைய ஆட்டத்தில் பெங்களூரு அணியின் கேப்டன் ரோஹித் குமார் மேட்ச் வின்னராகத் திகழ்ந்தார். அவர் நேற்று எட்டுப் பேரை அவுட்டாக்கி, போனஸ் புள்ளிகளோடு சூப்பர் 10 சாதனையை நிகழ்த்தினார். மேலும் இரண்டு டேக்கில் புள்ளிகளையும் பெற்றார். ஒட்டுமொத்தமாக 12 புள்ளிகள் எடுத்தார் ரோஹித். தெலுங்கு அணி நேற்று டிஃபென்டிங்கில் சொதப்பலாக ஆடியது. 40 நிமிடத்தில் வெறும் நான்கு முறை மட்டுமே எதிரணி வீரர்களை  அடக்கிப் பிடித்தது. பெங்களூரு காளைகள் நேற்றைய தினம் இரண்டு முறை தெலுங்கு டைட்டன்ஸ் அணியை ஆல் அவுட் செய்தது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!