வெளியிடப்பட்ட நேரம்: 18:29 (31/07/2017)

கடைசி தொடர்பு:18:29 (31/07/2017)

டெஸ்ட் கிரிக்கெட்டில் அரை சதத்தைக் கடக்கப் போகும் புஜாரா!

இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேனான செத்தேஷ்வர் புஜாரா 50-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடப் போகிறார். இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் களம் இறங்குவதன் மூலம் இந்த மைல்கல்லை அவர் எட்ட உள்ளார். 

புஜாரா

டெஸ்ட் கிரிக்கெட்டில் 50-க்கும் மேல் சராசரி இருக்கும் புஜாரா, 'இந்தியாவின் சுவர்' என்று வர்ணிக்கப்பட்ட ராகுல் டிராவிட்டின் இடத்தை நிரப்ப வந்தவர் என்று அவர் கடந்த 2010-ம் ஆண்டு களம் இறங்கியது முதலே கூறப்பட்டு வந்தது. அவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் சில ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், விடா முயற்சி மூலம் கம்-பேக் கொடுத்து டெஸ்ட் அணியில் தனக்கென்று ஒரு இடம் பிடித்துவிட்டார். இந்நிலையில், அவர் வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி தனது 50-வது டெஸ்ட் போட்டியில் பங்கேற்க உள்ளார். 

இது குறித்து அவர், "இது மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு பயணம். நான் அறிமுகமான 2010-ம் ஆண்டு எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அப்போது, டெண்டுல்கர், கங்குலி, ராகுல் டிராவிட், சேவாக் போன்ற ஜாம்பவான்கள் அணியில் இருந்தனர். எனக்கு இன்னும் அந்த கணங்கள் ஞாபகம் இருக்கிறது" என்று தனது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் பற்றி நெகிழ்ந்துள்ளார் புஜாரா.