வெளியிடப்பட்ட நேரம்: 20:52 (31/07/2017)

கடைசி தொடர்பு:15:31 (01/08/2017)

ரியல் மாட்ரிட்டை வீழ்த்தி இன்டர்நேஷனல் சாம்பியன் பட்டம் வென்றது பார்சிலோனா!

நட்பு ரீதியிலான போட்டிதான் என்றாலும், அந்த ஆட்டத்தை உலகமே பார்த்தது. ஸ்பெயின் நாட்டின் பெருந்தலைகளான பார்சிலோனாவும் ரியல் மாட்ரிட்டும் மல்லுக்கட்டிய ‛எல் கிளாசிகோ’ என்றால் சும்மாவா? அமெரிக்காவின் மியாமி நகரில் ராக் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இன்டர்நேஷனல் சாம்பியன்ஸ் கோப்பை்  போட்டியில் இரு அணிகளும் களம்கண்டன. ஃப்ரெண்ட்லி மேட்ச் என்றாலும் உக்கிரத்துக்குப் பஞ்சமில்லை. இந்த ஆட்டத்தில் பார்சிலோனா அணி 3-2 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியை தோற்கடித்தது. தன் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற பார்சிலோனா அணி சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது.

பார்சிலோனா

ரொனால்டோ மட்டுமே அவுட்..  மற்றபடி இரு அணிகளும் தங்கள் ஸ்டார் வீரர்களூடனே களமிறங்கின. மூன்றாவது நிமிடத்தில்  முதல் கோலை பதிவு செய்து பார்சிலோனா அணிக்கு லீட் ஏற்படுத்தி கொடுத்தார் லியோனல் மெஸ்சி.  செர்ஜியோ புஸ்கட்ஸ் கடத்திக்கொடுத்த பந்தை நான்கு டிஃபெண்டர்களை ஏமாற்றி விட்டு வலையை நோக்கி உதைக்க, அது லேசாக ரியல் மாட்ரிட் டிபெண்டரின் காலில் பட்டு தடையே இல்லாமல் வலைக்குள் சென்றது. 

கவுண்ட்டர் அட்டாக்கில் தொடர்ந்து கவனம் செலுத்திய பார்சிலோனா அணி 7-வது நிமிடத்தில் அடுத்த கோலைப் பதிவு செய்தது. நெய்மாரின் பாஸை பின்னாலிருந்த இவான் ராகிடிச்சிற்குநேர்த்தியாக  சுவாரஸ் கடத்த வலையின் கீழ் இடது மூலைக்கு அனுப்பிவைத்தார் ராகிடிச்.  14-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பி மாட்ரிட் ரசிகர்கள் வயிற்றில் பாலை வார்த்தார் மடெயொ கோவசிச். அடுத்தடுத்து கிடைத்த வாய்ப்புகளை பார்சிலோனாவின் சுவாரஸ்,ராகிடிச், நெய்மார் வீணடிக்க, ரியல் மாட்ரிட் சார்பில் பென்சிமா , மோட்ரிச் கிடைத்த வாய்ப்புகளை நழுவ விட்டனர். இரு அணி கோல்கீப்பர்களுக்கும் ஓய்வே கிடைக்கவில்லை. 
திறமையான கவுன்ட்டர் அட்டாக்கால் 36-வது நிமிடத்தில் ரியல் மாட்ரிட் 2-வது கோலை அடித்து ஆட்டத்தை சமநிலைக்குக் கொண்டு வந்தது. ரொனால்டோ இடத்தில் களம் கண்ட அசென்சியோ அசால்ட்டாக தன் பங்கிற்கு ஒரு  கோல் அடித்தார்.  முதல் பாதி 2-2 என்ற சமநிலையில் இருந்தது.

பார்சிலோனா

இரண்டாம் பாதி பரபரப்பாகவே தொடங்கியது. இரு அணி வீரர்களும் எதிரணியின் கோல் கம்பங்களை நோக்கி படையெடுத்தனர். இது நட்பு ரீதியிலான  போட்டி என்பதால் எத்தனை மாற்று வீரர்களை வேண்டுமானாலும் களமிறக்கலாம். ரியல் மாட்ரிட் தன் இளம் வீரர்களை வரிசையாக இறக்க ஆரம்பித்தது. 50-வது நிமிடத்தில் ஃபிரீ கிக் வாய்ப்பில் நெய்மார் உதைத்த பந்தை லாவமாக கோலாக்கி அமர்க்களப்படுத்தினார் ஜெரார்டு பிக்கே. 

இரு பக்கங்களின் கோல் கம்பங்கள் எந்நேரமும் பிஸியாகவே இருந்தன. வாய்ப்புகள் ஒருபுறம் நழுவிக்கொண்டிருக்க, இரு அணிகளும் இளம் மாற்று வீரர்களைக் களத்தில் இறக்கின. ரியல் மாட்ரிட் தொடுத்த அனைத்து கவுன்ட்டர் அட்டாக் அம்புகளையும் சிரமப்பட்டாலும் கூட தன் விடாமுயற்சியால் தடுத்து விட்டார் பார்சிலோனாவின் இளம் கீப்பர் ஜாஸ்பர் கிலெசன். பார்சிலோவின் கவுன்ட்டர் அட்டாக்கும் ரியல் மாட்ரிட் அணியின்  டிஃபெண்டர்களை தாண்டவில்லை. ரியல் மாட்ரிட் அணியின் இஸ்கோ, கேரத் பேல் மற்றும் டேனி கெபெலோஸ் ஆகியோரது ஷாட்டுகள் வலைக்குள் செல்லவில்லை. இரு அணிகளின் இளம் வீரர்களும் துடிப்புடன் செயல்பட்டனர். 

இருந்தாலும், இறுதி வரை இரண்டு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கவில்லை. எனவே ஆட்டம் 3-2 என்ற கோல் கணக்கில் பார்சிலோனாவின் கைகளில் விழுந்தது.  ப்ரீ சீஸனின் மூன்று நட்பு ஆட்டங்களையும் தோல்வியே காணாமல் நிறைவு செய்த பார்சிலோனா அணி இண்டர்னேசனல் சாம்பியன்ஸ் கோப்பையையும் வெற்றிகரமாக கைப்பற்றியது.
 


டிரெண்டிங் @ விகடன்