Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

''மகளிர் அணிக்குக் கிடைத்த மிகப் பெரிய பரிசு இது!'' - ஆசியக் கோப்பையை அள்ளிய அனிதா பால்துரை

ஆசிய கூடைப்பந்து போட்டியில் வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றியிருக்கிறது இந்திய கூடைப்பந்து மகளிர் அணி. 'இந்திய மகளிர் கிரிக்கெட் அணியைத் தொடர்ந்து, ‘ஃபிபா’ ஆசியக் கோப்பையை வென்றதன் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்திய கூடைப்பந்து மகளிர் அணி' என்கின்றனர் விளையாட்டு ஆர்வலர்கள். 

பெண்கள் கூடைப்பந்து

‘ஃபிபா’ ஆசியக் கோப்பை இந்தியாவுக்குக் கிடைக்கக் காரணமானவர் அனிதா பால்துரை. இந்திய கூடைப்பந்து மகளிர் அணியின் கேப்டன். சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா பால்துரை, இந்தியக் கூடைப்பந்து பெண்கள் அணியின் தவிர்க்க முடியாத வீராங்கனை. உலகின் மிகச்சிறந்த பத்து வீராங்கனைகளில் ஒருவராக 2013-ம் ஆண்டு தாய்லாந்தில் தேர்வு செய்யப்பட்டவர். எட்டு முறைக்கும் மேல் ஆசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிக்காக கலந்துகொண்ட ஒரே இந்திய வீராங்கனையும் இவர்தான். சர்வதேச அளவில் பல பதக்கங்களை வென்றிருந்தாலும், 2017 ஃபிபா ஆசியக் கோப்பையை பெரிதும் எதிர்பார்த்தார். காரணம், எந்தமுறையும் இல்லாத அளவுக்கு இந்திய விளையாட்டுத்துறை முறையான பயிற்சியை அளித்ததுதான். பெங்களூரில் நடைபெற்ற கூடைப்பந்து போட்டித் தொடரில், டிவிசன்- ’ஏ’ பிரிவில் இந்திய அணி இடம்பெற்றிருந்தது. ஃபிஜி, கஜகஸ்தான், லெபனான், சிங்கப்பூர், இலங்கை, உஸ்பெகிஸ்தான், இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகள் போட்டியில் பங்கேற்றன. கடந்த 29-ம் தேதி நடந்த தொடரின் இறுதிப்போட்டியில் கஜகஸ்தானை எதிர்கொண்டு, 75-73 என்ற செட் கணக்கின் அடிப்படையில் ஆட்டத்தை வென்றது இந்திய அணி. 

அனிதாவிடம் பேசினோம். " என்னுடைய 18 வருட கால அனுபவத்தில் இந்த ஒன்பதாவது ஆசியப் போட்டிதான் என்னுடைய மிகச்சிறந்த போட்டியாகக் கருதுகிறேன். இந்த முறை பெங்களூரில் போட்டி நடந்தது. இது எங்கள் அணிக்குக் கூடுதல் உற்சாகத்தைக் கொடுத்தது. சொந்த மண்ணிலேயே வெற்றியைப் பதிவுசெய்த பெருமையோடு ஊர் திரும்பினோம். தொடக்க காலங்களில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கச் செல்லும்போது, முறையான பயிற்சி, உபகரணங்கள், மருத்துவ உதவிகள், இன்ன பிற அடிப்படை வசதிகள்கூட எங்கள் அணிக்குக் கிடைக்காது. ஆனால், இந்தமுறை சிறப்பான பயிற்சி, நல்ல பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் என சர்வதேசத் தரத்தில் எங்களுக்குக் கொடுத்தார்கள். இது உண்மையில் வரவேற்கத்தகுந்தது" என உற்சாகப்பட்டவர், 

"2015-ம் ஆண்டு நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் நான்தான் கேப்டனாக இருந்தேன். இந்த ஆண்டு எனக்கு பெஸ்ட் டீம் அமைந்தது. நல்ல அணியும் பயிற்சியும்தான் கோப்பையை நமக்கு சாத்தியமாக்கியது. இனி வரும் காலங்களிலும் இதே அளவு வசதிகள் கிடைக்க வேண்டும். சர்வதேசப் போட்டிகளுக்கு அணியை அனுப்புவதன் மூலம் இந்திய கூடைப்பந்து மகளிர் அணியினருக்கு சர்வதேசத் தரத்திலான அனுபவம் கிடைக்கும். எப்பவும் இல்லாத அளவுக்கு இந்த முறை எங்கள் அணிக்கு கிடைத்த ஆதரவு அதிகம். ஒரு கேப்டனாக என்றில்லாமல், ஒரு வீராங்கனையாக இந்த வெற்றி எனக்கு மிகப்பெரிய பரிசு. 18 ஆண்டுகாலமாக, திருமணம், குழந்தை என வாழ்க்கைச் சூழல் மாறியபோதும், எவ்விதத் தடையும் இன்றி தொடர்ந்து விளையாடி வருகிறேன். இத்தனை ஆண்டு கால உழைப்பு, நாட்டுக்காகப் பெற்றுத் தந்த வெற்றிகள் என அனைத்தையும் கடந்து ‘அர்ஜுனா விருது’ என்கின்ற மிகப்பெரிய அங்கீகாரத்துக்காகக் காத்திருக்கிறேன். மேலும், விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு உரிய அங்கீகாரமும் அரசு வேலைவாய்ப்புகளும் வழங்கப்பட்டால், விளையாட்டு உலகில் பெண்கள் ஒளிர்வார்கள்" என்றார் நம்பிக்கையோடு.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement