தெலுங்கு டைட்டன்ஸ் ஹாட்ரிக் தோல்வி... ஆனாலும், ராகுல் சவுதரிக்கு லைக்ஸ்! #ProKabaddi #TTvsUPY 

புரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனில் தனது முதல் போட்டியை தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆடியது உத்தரப் பிரதேச அணியான யு பி யோதா. முதல் போட்டியிலேயே தெலுங்கு அணியை வீழ்த்தி உற்சாகமாக தொடரில் என்ட்ரி கொடுத்திருக்கிறது யு பி யோதா. சொந்த மண்ணில் நான்காவது போட்டியில் ஆடும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்திருக்கிறது. தெலுங்கு டைட்டன்ஸ் அணி வென்ற ஒரே  போட்டி தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிரான மேட்ச் மட்டும் தான். 
நேற்றைய தினம் எப்படித் தோற்றது ராகுல் சவுதரி தலைமையிலான  தெலுங்கு டைட்டன்ஸ்?

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

ஆரம்பத்தில் இருந்தே  இரண்டு அணிகளும்  நீயா நானா மல்லுக்கட்டில் இறங்கின. இரண்டு அணியிலும் முதல் சில நிமிடங்களில்  ரெய்டு சென்றவர்கள் புள்ளிகளை அள்ளிக் கொண்டு வந்தார்கள். எந்த ஒரு கட்டத்திலும் இரண்டு அணியும் விட்டுக் கொடுக்கவே இல்லை. யு பி ஒரு புள்ளி கூடுதலாக முன்னிலை வகிக்கும் போதெல்லாம் தெலுங்கு டைட்டன்ஸ் அடுத்தடுத்த ரெய்டுகளில்  சமன் செய்து கொண்டிருந்தது. 

இதனால் மேட்ச் விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் சென்றது. யு பி யோதா அணித் தலைவர் நிதின் தொமரும் சரி, தெலுங்கு டைட்டன்ஸ் அணியின் கேப்டன்  ராகுல் சவுதரியும் சரி தங்கள் அணிக்காக புள்ளிகளை அள்ளி வீசினார்கள். இரண்டு அணி கேப்டன்களுக்கு இடையேயான ஆரோக்கியமான மோதலாக இருந்தது மேட்ச். குறிப்பாக ராகுல் சவுதரி விளையாடிய விதம் அருமை. தமிழ் தலைவாஸ் அணிக்கு எதிராக சூறாவளியாக சுழன்ற ராகுல் அடுத்தடுத்த போட்டிகளில் மங்கினார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் ஆடிய களைப்புக்கு மத்தியில், ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு  சார்ஜ் ஏற்றிக் கொண்டு நேற்றைய ஆட்டத்தில் பட்டையைக் கிளப்பினார். ரெய்டுக்கு வரும் வீரர்களை அடக்குவதில்  சிறப்பாக செயல்படக் கூடிய யு பி யோதா அணியினர் ராகுல் சவுதரியிடம் தோல்வியைச் சந்தித்தார்கள்.

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

ராகுல் சவுதரி  ரெய்டுக்குச்  செல்லும் காட்சிகளை பார்க்க நீங்கள் பாக்கியம் செய்திருக்க வேண்டும். ராகுல் கிடுகிடுவென வலது பக்கத்தில் இருந்து இடது பக்கம், இடது பக்கத்தில் இருந்து வலது பக்கம் ஓடிக் கொண்டிருப்பார். மேலோட்டமாக பார்த்தால் கபடி விளையாடத் தெரியாதவன் பாலபாடம் பயின்று ஆர்வக் கோளாறுடன் ஆடுவதாக தோன்றும். ஆனால் ராகுல் அப்படிப்பட்டவர் அல்ல. அவரது உடல் ஒரு பொசிஷனிலும், அவர் கால் ஒரு பொஷிஷனில், கண்கள் வேறொரு பொசிஷனிலும் கவனம் செலுத்தும். அவரைப் பிடிக்க ஃபீல்டர்கள் முயன்றால், அவர்களுக்கு தனது காலை கொடுப்பார். ஆனால் அவர்கள் கால்களை இறுகப் பற்றும் அந்த மைக்ரோ நொடிக்கு முன்னதாக வெடுக்கென தாவிவிடுவார். அந்த யுக்தியால் தான் அவர்  சிறந்த ரெய்டர் என பெயர் எடுத்திருக்கிறார். புரோ கபடித் தொடரின் வரலாற்றிலும் இதுவரை அதிக ரெய்டு புள்ளிகளை வைத்திருப்பதும் அவரே. 

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

முதல் பாதியில் 1-1 , 2-2, 4-4 , 7-7, 8 -8 என சரிசமமாகவே ஸ்கோர் சென்றது. 20 நிமிட முடிவில் ஸ்கோர் 11 - 12 . தெலுங்கு டைட்டன்ஸ் அணி ஒரு புள்ளி யு பி யோதாவை விட பின்தங்கியிருந்தது. 

நேற்றைய தினம் ராகுல் சென்ற ரெய்டுகள் அற்புதமாக இருந்தன. யு பி யோதா வீரர்கள் விடா கொண்டனாக இருந்தாலும் இவர் தப்பித்துக் கொண்டே  இருந்தார். கிடுகிடுவென ஒரு பக்கத்தில் இருந்து இன்னொரு பக்கம் ஓடும்போதும், யாரைத் தொட வேண்டும் என்பதில் ராகுல் தெளிவாக இருப்பார்.  ஒரு பக்கம் ஓடிக்கொண்டே பின்னால் இருக்கும் வீரரைத் தனது ஒரு காலால் தொடும் சாமர்த்தியம் அவருக்கு மிகப் பெரிய ப்ளஸ். இரண்டாவது பாதியில் ஒரு சாமர்த்தியமான அவுட் செய்தார் ராகுல். இதனாலேயே  ராகுல் சவுதரி  ரெய்டுக்குச் செல்லும் போதெல்லாம் ரசிகர்கள் ஆரவாரம் நூறு டெசிபலைத் தாண்டியது. மேட்சில் இன்னும் 14 நிமிடங்கள் மிச்சமிருந்த நிலையில் ஸ்கோர் 13 - 14 என இருந்தது. அப்போது யு பி யோதா அணியில் மாற்று வீரராக  களமிறங்கியிருந்த சுரேந்தர் சிங் ரெய்டுக்குச் சென்று மூன்று பேரை ஒரே நேரத்தில் காலி செய்தார். இது தான் மேட்ச்சின் திருப்புமுனை. 

Pro Kabaddi UP Yoddha Vs Telugu Titans

இரண்டு அணிகளுமே  ஒரு திருப்புமுனை ரெய்டு எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது முந்திக்கொண்டது யு பி யோதா. அந்தப் புள்ளியில் இருந்து மேட்ச்  உத்தரப் பிரதேசம் பக்கம் திரும்பியது. தெலுங்கு டைட்டன்ஸ் அணியினர் வரிசையாக பதற்றத்தில் தவறு செய்ய ஆரம்பித்தார்கள். யு பி யோதா வெற்றி ஒன்றையே குறிக்கோளாக கொண்டு ஆடியது. கடைசி  பத்து நிமிடங்களில் வரும் வீரர்களை வரிசையாக அமுக்கி வெளியே தூக்கிப்போட்டார்கள். ஆட்ட நேர முடிவில் 31 - 18 என மெகா வெற்றியைப் பெற்றது யு பி யோதா. 13 புள்ளிகள் வித்தியாசத்தில் மோசமாகத் தோற்றது டைட்டன்ஸ்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!