வெளியிடப்பட்ட நேரம்: 09:50 (03/08/2017)

கடைசி தொடர்பு:10:31 (03/08/2017)

இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி: இந்திய - இலங்கை அணிகள் கொழும்பில் மோதல் #INDvsSL

இந்திய அணி, தற்போது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகள்கொண்ட இந்தத் தொடரில், இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது.


இந்த இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபராமாக வென்றது. இந்நிலையில், இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பு மைதானத்தில் நடைபெறுகிறது.  
இந்திய அணியைப் பொறுத்தவரை பந்துவீச்சு, பேட்டிங்  என இரண்டிலும் சிறப்பாகவே உள்ளது. காய்ச்சல் காரணமாக கடந்த போட்டியில் ஆடாத தொடக்க ஆட்டக்காரர் லோகேஷ் ராகுல், இன்றைய போட்டிக்குத் தயாராகிவிட்டார். அதனால் தமிழக வீரர் அபினவ் முகுந்துக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைப்பது சிரமம்தான். ராகுலுடன் தவான், தொடக்க ஆட்டக்காரராகக் களம் இறங்குவார்கள் என தெரிகிறது. நடுவரிசையில், புஜாரா, கோலி, ரஹானே, பாண்டியா, சாஹா எனப் பலமாகத்தான் உள்ளது. பந்துவீச்சிலும் டெஸ்ட் போட்டிகளில் முதல் இரண்டு இடத்தில் இருக்கும் அஷ்வின் மற்றும் ஜடேஜா, சிறப்பாகவே பந்துவீசிவருகின்றனர். இன்றைய போட்டியில், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், அஷ்வின் - ஜடேஜா கூட்டணி இந்தப் போட்டியில் முக்கியப் பங்குவகிப்பார்கள் என எதிர்பாக்கலாம். 

india cricket


இலங்கை அணியைப் பொறுத்த வரை... கேப்டன் சண்டிமல், அணிக்குத் திரும்புவது அவர்களின் நடுவரிசையின் பலத்தைக் கூட்டும். சண்டிமல், சுழற்பந்து  வீச்சையும் சிறப்பாகக் கையாள்வார் என்பதால், அவரின் வரவு நிச்சயம் பலம் சேர்க்கும். பந்துவீச்சைப் பொறுத்த வரை ஹெராத்தைதான் பெரிதும் நம்பி உள்ளது. 
தொடரைக் கைப்பற்றும் முனைப்பில், இந்தியாவும் தொடரை இழந்துவிடக் கூடாது என்பதில் இலங்கையும் கடுமையாகப் போராடும். ஆடுகளம், முதல் நாள் பேட்டிங்குக்கு சாதகமாகவும்  இரண்டாம் நாள் முதலே ஆடுகளத்தில் பந்து நன்றாகச் சுழன்று திரும்பும் எனவும் கணிக்கப்பட்டுள்ளதால், இந்தப் போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். இந்தப் போட்டி, இந்திய நேரப்படி காலை 10 மணிக்கு  தொடங்கும்.