எட்டே நொடியில் ஹரியானா வெற்றியைத் தவறவிட்ட மேட்சை பார்த்தீர்களா? #ProKabaddi | Gujarat Fortunegiants Vs Haryana Steelers Match Tie

வெளியிடப்பட்ட நேரம்: 12:35 (03/08/2017)

கடைசி தொடர்பு:12:35 (03/08/2017)

எட்டே நொடியில் ஹரியானா வெற்றியைத் தவறவிட்ட மேட்சை பார்த்தீர்களா? #ProKabaddi

பிக்பாஸ் ஒளிபரப்பாகும் அதேநேரத்தில்தான் புரோ கபடியும் (Pro Kabaddi) நடந்து கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் புரோ கபடியில் ஹரியானா குஜராத் இடையிலான மேட்ச்சை எத்தனை பேர் பார்த்தீர்கள் எனத் தெரியவில்லை. செம மேட்ச். 

Pro Kabaddi

ஹைதரபாத் கச்சிபோலி உள்விளையாட்டு அரங்கத்தில் புரோ கபடி போட்டிகள் நடந்துவருகின்றன. புரோ கபடியின் ஐந்தாவது சீசனில் நேற்றைய தினம் இரவு எட்டு மணிக்கு நடந்த மேட்சில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணியும் குஜராத் அணியும் மோதின. முதல் போட்டியில் ஹரியானா ஒரே ஒரு புள்ளி வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோற்றிருந்தது. குஜராத் அணி தனது முதல் போட்டியில் டெல்லியிடம் கடைசி நேர பதற்றத்திற்குப் பிறகு வென்றது.

குஜராத் அணி செம எனெர்ஜியுடன் களமிறங்கியது. ஹரியானா நம்பிக்கையோடு களம் கண்டது. குஜராத் அணி சார்பில் முதலில் ரெய்டுக்குச் சென்ற சுகேஷ் ஹெக்டேவும், ஹரியானா சார்பில் ரெய்டுக்குச் சென்ற வஜிர் சிங்கும் புள்ளிகள் எதுவும் எடுக்கவில்லை. குஜராத் அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத்தந்தவர் சச்சின். அவர் டூ ஆர் டை ரெய்டில் அசால்ட்டாக இரண்டு புள்ளிகளை எடுத்தார். 
முதல் ஒன்பது நிமிடங்களில் ஸ்கோர் 5 -4 என இருந்தது. ஹரியானா அணியைச் சேர்ந்த விகாஸ் ஒரு முறை ரெய்டுக்கு வந்தபோது கால் இடறவே தடுமாறினார். அதைப் பயன்படுத்தி அவரை அவுட்டாக்கி வெளியில் உட்கார  வைத்தது குஜராத் அணி. அதற்கு அடுத்த முக்கியமான ரெய்டு ஒன்றில் சச்சின் அனுப்பப்பட்டார். அந்த ரெய்டில் சச்சினை சூப்பர் டேக்கில் செய்தனர் ஹரியானா வீரர்கள். போனஸ் புள்ளிகள் கிடைத்தன. அடுத்ததாக கேப்டன் ஹெக்டேவும் அவுட் ஆனார்.  அப்போது ஸ்கோர் 7-7 என இருந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு மேட்ச் விறுவிறுப்பாகவே சென்றது. இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. 

Pro Kabaddi

முதல் பாதியில் 11 - 8 என்ற ஸ்கோரில் முன்னிலையோடு இருந்த குஜராத் அணி, இடைவேளை முடிந்த பிறகு புள்ளிகளை இழந்தது. இதனால் மீண்டும் ஸ்கோர் சமநிலைக்கு வந்தது. இரண்டு அணிகளுமே டிஃபென்சில் வலுவாக இருந்தன. இதனால் ரெய்டுகளில் இரண்டு அணி வீரர்களும் புள்ளிகள் எடுக்க சிரமப்பட்டனர். 11 -11  என ஸ்கோர் சம நிலையில் இருந்தபோது ஹரியானா வீரர் விகாஸ் ரெய்டுக்குச் சென்றார். அவரை குஜராத் அணியைச் சேர்ந்த சுனில் குமார் காளையை அடக்குவது போல முயற்சி செய்தார். அனால் விகாசின் விவேகமான துள்ளலால் ஒரு புள்ளி ஹரியானாவுக்குக் கிடைத்தது. ஆட்டம் தொடங்கிய  நிமிடத்திலிருந்து முதல் முறையாக ஒரு புள்ளி முன்னிலை பெற்றது ஹரியானா  ஸ்டீலர்ஸ். 

அந்த முன்னிலையைப் பயன்படுத்தி ஹரியானா முன்னேறியிருக்க வேண்டும். ஆனால், ஹரியானா கேப்டனின் ஆர்வக் கோளாறு ரெய்டால் திட்டம் பாலானது. அவசரப்பட்டு ஒரு ரெய்டுக்குச் சென்ற சுரேந்தர் நாடாவை சூப்பர் டேக்கில் செய்தது குஜராத் அணி. இத்தனைக்கும் அது டூ ஆர் டை ரெய்டு கூட கிடையாது. எதிரணியில் மூன்று  பேர் மட்டுமே இருந்திருந்தனர். கேப்டன் சுகேஷ் கொஞ்சம் சுதாரித்திருந்தால் குஜராத்தை ஆல் அவுட் செய்யும் முயற்சியில் கூட இறங்கியிருக்கலாம். ஆனால், அவசர ரெய்டால் சூப்பர் டேக்கில் செய்யப்பட்டது மட்டுமன்றி, பலம் வாய்ந்த இரண்டு குஜராத் வீரர்களும் களத்தில் இறங்கினர்.

Pro Kabaddi

அவர்கள் சத்தமில்லாமல் ஹரியானா வீரர்களை வெளியேற்றினர். இரண்டே நிமிடங்களில் ஹரியானா ஆல் அவுட் ஆனது. 11 - 12 என இருந்த ஸ்கோர்  தடாலென 22 -13 என்றானது. அப்போது மேட்ச் முடிய எட்டரை நிமிடங்கள் மிச்சம் இருந்தன. இப்போது ஹரியானா வீரர்கள் அக்ரசிவ்வாக ஆட ஆரம்பித்தனர். ரெய்டுக்கு வந்த ராகேஷ் நர்வாலை அள்ளிக்கொண்டு போய் வெளியே போட்டுவிட்டு வந்தனர். விகாஸ் கன்டோலா சென்ற ஒரு ரெய்டு மேட்சின் திருப்புமுனையாக அமைந்தது. தங்களது எல்லைக்குள் நுழைந்த விகாசை மார்போடு இறுகப் பிடித்து தடுத்து நிறுத்த முயற்சி செய்தார் குஜாரத் அணியின் அபோஜர். அவரது முயற்சி வீணாகிவிடக்கூடாது என்பதற்காக கேப்டன் சுகேஷும் அவரைப் பிடிக்க முயற்சி செய்தார். இதற்கிடையில் மகேந்திர சிங் ராஜ்புட்டும் விகாசை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் துள்ளியவாரே கோட்டைத் தொட்டார் விகாஸ். மூன்று பேரும் அவுட். அடுத்த நிமிடத்திலேயே குஜராத்தும் ஆல் அவுட் ஆனது. இப்போது ஸ்கோர் 23 - 23.

மீண்டும் ஸ்கோர் சமநிலையில் வந்ததால் ஆட்டத்தில் உச்சபட்ச பரபரப்புத் தொற்றியது. மைதானத்தில் உட்கார்ந்திருத்த ரசிகர்கள் எழுந்து நின்று கவனிக்க ஆரம்பித்தனர். 24 - 24 , 24 - 25 , 25 - 25 . 25 - 26 என ஸ்கோர்கார்டு மாறிக்கொண்டே இருந்தது 26 - 27 என ஸ்கோர் இருந்தபோது மேட்ச் முடிய வெறும் 40 நொடிகள் மட்டுமே இருந்தன. மகேந்திர சிங் ரெய்டுக்குள் வந்தார். அவர் ஒரு மேஜிக் புள்ளி எடுத்தார். மேட்ச் இப்போது சமநிலைக்கு வந்தது. 27 - 27 என்ற நிலையில் எட்டு நொடிகள் மீதம் இருந்தன. ஹரியானா வீரர் விகாஷ் புள்ளிகள் பெற முயற்சிக்கவில்லை. ஆட்டநேர முடிவில் 27 - 27 என ஸ்கோர் இருந்தது. மேட்ச் டிரா ஆனது. இரண்டு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close