வெளியிடப்பட்ட நேரம்: 13:47 (03/08/2017)

கடைசி தொடர்பு:13:47 (03/08/2017)

'தனி ஒருவன்' மனீந்தர் சிங்... ஆடி அடங்கிய தெலுங்கு டைட்டன்ஸ் ! #ProKabaddi #MatchPoints

புரோ கபடி (Pro Kabaddi) ஐந்தாவது சீசனின் 10-வது ஆட்டத்தில், நேற்றைய தினம் தெலுங்கு டைட்டன்ஸ் அணியும் பெங்கால் வாரியர்ஸ் அணியும் மோதின. இந்த சீசனில் தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்கு இது  ஐந்தாவது போட்டி. அதே சமயம் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு இதுதான் முதல் போட்டி.

Pro Kabaddi : Telugu Titans Vs Bengal Warriors

பெங்கால் அணியின்  பிளேயிங்  செவனில் ஜாங் குன் லீ, ரான் சிங் , ஸ்ரீகாந்த் திவ்தியா, மனீந்தர் சிங், ராகுல் குமார், சுர்ஜீத் சிங், வினோத் குமார் இடம்பெற்றிருந்தனர். சுர்ஜீத் சிங் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். தெலுங்கு டைட்டன்ஸ் அணியில் நிலேஷ் சலுன்கே மீண்டும் சேர்க்கப்பட்டிருந்தார். ராகுல் சவுதரி தலைமையிலான அணியில் பர்ஹாத் ரஹீமி மிளகாதரன், ராகேஷ் ஷர்மா, வினோத் குமார், விஷால் பரத்வாஜ், விகாஸ் உள்ளிட்டோர் இருந்தனர். 

சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி அடைந்திருந்ததால், இந்த மேட்ச்சை ஜெயித்தே ஆக வேண்டும் என்ற கட்டயத்தில் களமிறங்கியது தெலுங்கு டைட்டன்ஸ். பெங்கால் அணி ரசிகர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில்  விளையாடியது. முதல்  சீசனுக்குப்  பிறகு, மூன்று  சீசன்களாக வெளியில் இருந்த மனீந்தர் சிங், பெங்கால் அணிக்காக மீண்டும் களமிறங்கினார். நேற்றைய  ஆட்டத்தின் முதல் ரெய்டு சென்றவர் அவரே. ஆனால், புள்ளிகள் எடுக்க முடியவில்லை.

Pro Kabaddi : Telugu Titans Vs Bengal Warriors

முதல் ஐந்து நிமிடங்களில் இரண்டு அணிகளும் மாறி மாறி புள்ளிகள் எடுத்தன. ஸ்கோர் 6 - 4 என இருந்தது. அதாவது, தெலுங்கு  டைட்டன்ஸ் அணி இரண்டு புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. அப்போது, மனீந்தர் சிங் ரெய்டுக்கு வந்தார். ஒரே ரெய்டில் அவர் மூன்று டைட்டன்ஸ்  வீரர்களை  வெளியேற்றினார். அதில் ராகேஷ் குமார், ராகுல் சவுதரி என இரண்டு முக்கியமான வீரர்கள் வெளியேறினர். அதன் பிறகு, பெங்கால் அணி டேக்கிலில் கவனமாக விளையாடியது. ராகுல் சௌத்ரி ஆட்டத்தினுள் வந்துவிடாமல் பார்த்துக்கொண்டது.  
அந்த ரெய்டுக்கு அடுத்த ரெய்டில், மீண்டும் இரண்டு பேரை வெளியேற்றிவிட்டு, தனது அணியின் எல்லைக்குள் வந்தார் மனீந்தர் சிங். இப்போது ரெய்டுக்குச் சென்ற டைட்டன்ஸ் அணிக்கு எந்தப் புள்ளியும் கிடைக்கவில்லை. மீண்டும் ரெய்டு வந்தார் மனீந்தர் சிங். இந்த முறை சலுன்கே பூச்சாண்டி காட்டிக்கொண்டிருந்தார். ஆனால், அபாரமாக ஆடி இரண்டு  பேரையும் அவுட் செய்தார் மனீந்தர். அத்தோடு அணியும் ஆல் அவுட் அக. இரண்டு புள்ளிகள் பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு கூடுதலாகக் கிடைத்தது. 

மூன்றே  ரெய்டுகளில், தனி ஒருவனாக எதிரணியில் இருந்த அத்தனை பேரையும் அவுட் செய்து அசத்தினார் மனீந்தர் சிங். பெங்கால் வாரியர்ஸ் இப்போது, தெலுங்கு அணியைவிட 6 புள்ளிகள் முன்னிலையில் இருந்தது. அதன் பிறகு, ராகுல் சவுதரி அபாரமாக ஆடி,சில ரெய்டு புள்ளிகளை எடுத்தார். ஆல் அவுட் ஆன பிறகு மனீந்தர் சிங்  ரெய்டுக்கு வந்தபோது, மொத்த டீமும் அவர்மீது பாய்ந்தது. ஐந்தாறு பேர் சேர்த்துதான் அவரை அடக்கி அவுட் ஆக்க முடிந்தது. 

Pro Kabaddi : Telugu Titans Vs Bengal Warriors

முதல் பாதி முடிவில் ஸ்கோர் 14 -19. ஐந்து புள்ளிகள் முன்னிலையில் இருந்தது பெங்கால் வாரியர்ஸ் அணி. முதல் பாதியில் இரண்டு அணிகளுமே ரெய்டு புள்ளிகளையே அதிகம் எடுத்திருந்தனர். டேக்கிலில் பெங்கால் ஒரு புள்ளி மட்டுமே எடுத்திருந்தது. அதேசமயம், தெலுங்கு அணி இரண்டு டேக்கில் புள்ளிகள் எடுத்திருந்தது. 

இரண்டாவது பாதி தொடங்கியவுடன், பெங்கால் அணியில் இருந்த தென் கொரிய வீரரான ஜாங் குன் லீ  ரெய்டில் இரண்டு புள்ளிகளை எடுத்தார். ராகுல் சவுதரி ரெய்டுக்கு வந்தபோது பெங்கால் அணியில் இருந்த ராகுல் குமார் அற்புதமாக ஒரு டேக்கில் செய்தார். அவர் ராகுல் சவுதரியின் பின்னால் சென்று தோள்பட்டையோடு சேர்த்து இறுக அணைத்துக்கொண்டார். தெலுங்கு அணி மீண்டும் பல நிமிடங்கள் ராகுல் இல்லாமலேயே ஆடியது. இரண்டு அணி வீரர்களுமே ரெய்டுகளில் புள்ளிகள் எடுக்க இப்போது சிரமப்பட்டனர். கடைசி சில நிமிடங்களில்,  பெங்கால் அணி டேக்கிலில் மிக கவனமாக இருந்தது. ஆட்ட நேர முடிவில் 24 - 30 என்ற கணக்கில் தெலுங்கு அணி தோற்றது. ஏழு புள்ளிகளுக்குக் குறைவாக வெற்றி வித்தியாசம் இருந்ததால், புள்ளிப்பட்டியலில் ஒரு ஆறுதல் புள்ளி தெலுங்கு டைட்டன்ஸ் அணிக்குக் கிடைத்தது. பெங்கால் அணி சார்பில் 11 புள்ளிகளை எடுத்து, மேட்ச் வின்னராக மிளிர்ந்தார்  மனீந்தர் சிங்.