வெளியிடப்பட்ட நேரம்: 15:47 (03/08/2017)

கடைசி தொடர்பு:17:54 (03/08/2017)

கொழும்பு டெஸ்ட்: சதம் அடித்தார் புஜாரா!

இந்தியா - இலங்கைக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் செத்தேஸ்வர் புஜாரா சதம் விளாசியுள்ளார். 

புஜாரா

இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடந்து வருகிறது. இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அதிக ரன்கள் எடுக்க வேண்டுமென்று முனைப்புடன் தொடக்க வீரர்களான தவான் மற்றும் ராகுல் களமிறங்கினர். இதில் தவான், தொடக்கம் முதலே அதிரடி காட்டி வந்தார். ஆனால், 37 பந்துகளில் 35 ரன்கள் எடுத்திருந்தபோது அவர் பெரேராவின் பந்தில் எல்.பி.டபிள்யூ ஆகி வெளியேறினார்.

நிதானமாக ஆடிய லோகேஷ் ராகுல், 82 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். பின்னர், புஜாரா சிறப்பாக விளையாடி ரன்கள் குவிக்கத் தொடங்கினார். சீரான இடைவெளியில் பவுண்ட்ரிகள் ஸ்கோர் செய்துவந்த புஜாரா, 165 பந்துகளில் சதம் விளாசினார். இந்திய கேப்டன் விராட் கோலி 13 ரன்கள் மட்டுமே எடுக்க, ரஹானே புஜாராவுடன் ஜோடி சேர்ந்து அதிரடி ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகிறார். தற்சமயம், ரஹானே 58 ரன்களுடனும், புஜாரா 105 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய அணி, 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்து தொடர்ந்து விளையாடி வருகிறது. இன்றைய ஆட்ட நேர முடிவுக்குள் இந்தியா, 350 ரன்களைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.